Sunday, January 5, 2014

மதுரை அருகே கஞ்சா வியாபாரிகள் மோதல்: இருவர் கொலை

மதுரை அருகே கஞ்சா விற்பதில் இருதரப்பினர் மோதிக்கொண்டதில் சனிக்கிழமை இரவு 2 பேர் கொலை செய்யப்பட்டனர். காயமடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மதுரை வண்டியூர் யாகப்பாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன்கள் செந்தில்பாண்டியன், முருகன். இருவரும் சில்வர் பட்டரை வைத்திருப்பதுடன், கஞ்சா வியாபாரமும் செய்துவருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு மே மாதம் கஞ்சா வியாபாரம் குறித்து போலீஸில் புகார் தெரிவித்த வண்டியூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் கொலை வழக்கில் செந்தில்பாண்டியன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், வண்டியூர் பகுதியைச் சேர்ந்த அய்யாவு மகன் உதயா என்ற உதயகுமார் (27). இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். தற்போது அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். உதயா மீது அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கருப்பாயூரணி பகுதியில் 26 கிலோ கஞ்சாவை போலீஸார் கைப்பற்றினர். இதுதொடர்பாக உதயா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்தனர். போலீஸாருக்கு தங்களைப் பற்றி செந்தில்பாண்டியனே தகவல் தெரிவித்திருக்கவேண்டும் என உதயா தரப்பினர் நினைத்துள்ளனர்.

இதையடுத்து செந்தில்பாண்டியனை கடந்த டிசம்பரில் ஒரு கும்பல் தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இந்த வழக்கில் உதயா, முருகன், சோனை, வேலு ஆகியோர் சேர்க்கப்பட்டனர். உதயா, வேலு தலைமறைவாகிவிட்டனர். முருகன், சோனை இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில், உதயா தரப்பினர் 12 பேர் சனிக்கிழமை இரவு பயங்கர ஆயுதங்களுடன் செந்தில்பாண்டியனின் சில்வர் பட்டரைக்கு சென்றுள்ளனர். அங்கு வெளியே நின்றிருந்த திருவாதவூரைச் சேர்ந்த கண்ணன் என்ற கருங்காலிக் கண்ணன் (39) என்பவரை வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார். மேலும், அங்கு பெட்ரோல் குண்டையும் வீசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை.

இதையறிந்து, சில்வர் பட்டரைக்குள் இருந்த செந்தில்பாண்டியன் தரப்பினர் ஆயுதங்களுடன் வெளியே வந்து உதயா தரப்பினரைத் தாக்கியுள்ளனர். இதில் உதயா மற்றும் அவரது நண்பர்கள் சபரி (24), மணிகண்டன் (24), அருண்குமார் (23) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். ஆனால், வழியிலேயே உதயா உயிரிழந்தார். சபரி, மணிகண்டன், அருண்குமார் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவஇடத்தில் ஊரக காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

போலீஸ் தடியடி: உதயா, கண்ணன் ஆகியோர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறை முன்பு மாநகர் காவல் துணை ஆணையர் சமந்த்ரோஹன் ராஜேந்திரா தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பிரேதபரிசோதனைக்கு பிறகு சடலத்தை வாங்க மறுத்து உதயா தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

மேலும், துணை ஆணையர் உள்ளிட்டோரை நாகரீகமற்ற முறையில் பேசியதையடுத்து கூட்டத்தினரை தடியடி நடத்தி கலைத்தனர். அதன்பிறகு, உதயா, கண்ணன் இருவரது சடலமும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆர். குமார், பாண்டி, மாரிமுத்து, பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

செய்தி : தினமணி 

No comments:

Post a Comment