Sunday, January 19, 2014

ரூ.90 திருடியதற்காகக் கைதானவர் 13 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிப்பு

ரூ.90 திருடியதற்காக 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நபரை 13 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லி உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது.

வேறு ஒருவருக்குப் பதிலாக இவர் தவறாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

தில்லியைச் சேர்ந்த காலித் குரேஷி என்பவரும் அவரது கூட்டாளி ஜீது சௌத்ரியும் 1999ஆம் ஆண்டில் இரண்டு பேரிடம் 90 ரூபாயைத் திருடியதாக போலீஸார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் காலித் குரேஷி குற்றவாளி என்று தில்லி நீதிமன்றம் 2001 ஏப்ரல் 9ஆம் தேதி தீர்ப்பளித்தது. அவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 அபராதமும் விதித்தது.

இதை எதிர்த்து காலித் குரேஷி, தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

அதை விசாரித்த நீதிபதி எஸ்.பி.கர்க் தலைமையிலான அமர்வு, இவ்வழக்கில் இருந்து குரேஷியை விடுவித்து தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

இவ்வழக்கில் அரசுத் தரப்பு, தகவல்களைச் சரியான விதத்தில் சமர்ப்பிக்கவில்லை. இந்தப் புலன்விசாரணையின் எந்தக் கட்டத்திலும் சுதந்திரமான சாட்சிகள் யாரிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை. குற்றம் நடைபெற்ற இடத்தில் காலித் குரேஷி கைது செய்யப்படவில்லை. மாறாக, சம்பவத்துக்குப் பிறகு ஒன்று அல்லது 2 மணிநேரம் கழித்தே கைது செய்யப்பட்டுள்ளார் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.          

செய்தி : தினமணி 

No comments:

Post a Comment