Sunday, June 29, 2014

மெளலிவாக்கம் கட்டட விபத்து: 2 பொறியாளர் உள்பட 6 பேர் கைது

 
11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாகக்
கைது செய்யப்பட்டவர்கள் 
(இடமிருந்து) விஜய் பர்ஹோத்ரா, சங்கர் ராமகிருஷ்ணன், 
மனோகரன், வெங்கட்சுப்பிரமணியம், முத்து, துரைசிங்கம். 
 
 
போரூர் மெளலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை போரூரை அடுத்த மெளலிவாக்கம் பகுதியில் 11 மாடிக் கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கட்டடம் கட்டிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோகரன், அவரது மகன் முத்து ஆகியோரை போலீஸார் சம்பவம் நடந்த சனிக்கிழமையே கைது செய்து விசாரிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் மேலும் மூன்று பொறியாளர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது: மனோகரன், முத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டடத்தின் பொறியாளர்கள் சங்கர், துரைசிங்கம் மற்றும் கட்டடத்தின் வடிவமைப்பாளர்கள் விஜய் பர்ஹோத்ரா, வெங்கட்சுப்பிரமணியம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களை ஸ்ரீபெரும்பூதூர் மாவட்ட நீதிபதி சந்தோஷ் வீட்டில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, வேலூர் சிறைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

என்னென்ன பிரிவுகளில் வழக்கு? கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது 304(2), 336, 337, 338 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கட்டுமான பணிகளுக்காக அழைத்து வரப்படும் தொழிலாளர்களை பணி நடைபெறும் கட்டடங்களில் தங்க வைக்கக்கூடாது என்ற விதி உள்ளன. ஆனால் மெளலிவாக்கம் கட்டடத்தில் பணிபுரிந்தோர் அதே கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.

பொறியாளர் மற்றும் கட்டடவியல் நிபுணர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி

அரசு அங்கீகாரம்பெறாத ஆசிரமத்துக்கு ‘சீல்’: 33 சிறுவர், சிறுமியர்கள் மீட்புசென்னையில் அரசு அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்த ஆசிரமத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அதிலிருந்த 33 சிறுவர் சிறுமியர்கள் மீட்கப்பட்டனர். 

மேடவாக்கம் ரங்கநாதபுரம் ராஜாராம் தெருவில் சிறுவர் சிறுமியருக்கான ஆசிரமம் ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆசிரமத்தை வில்சன்(40) என்பவர் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஆசிரமத்தில் இருந்த 4 சிறுவர்களைக் காணவில்லை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்தது. 

இதுகுறித்து விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்காக மாவட்டக் குழந்தைகள் நலக் குழும உறுப்பினர் சகீர் உதின் முகமது, மருத்துவர் ரேணுகா, சமூக நல அலுவலர் சற்குணா, சோழிங்கநல்லூர் தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் விடுதி நிறுவனர் வில்சனுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த நோட்டீஸுக்கு வில்சன் எந்த பதிலையும் தரவில்லை. மேலும் அந்த ஆசிரமம் அரசு அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்பட்டதும், அங் குள்ள சிறுவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததும் விசாரணையில் தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அந்த ஆசிரமத்துக்கு சென்ற அதிகாரிகள் 19 சிறுவர்கள், 14 சிறுமியர்களை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். முறைகேடாக இயங்கி வந்த ஆசிரமத்துக்கும் ‘சீல்’ வைத்தனர்.

தி இந்து

பள்ளி மாடியில் இருந்து விழுந்து மாணவி மரணம் - திருவொற்றியூரில் பரபரப்பு: உறவினர்கள் மறியல்திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியின் மொட்டை மாடியில் இருந்து 8-ம் வகுப்பு மாணவி கீழே விழுந்து இறந்தது பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையா, பெற்றோர், ஆசிரியர்கள் திட்டினார்களா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்த எண்ணூர் சிவகாமி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கோதை. இவர்களது மகள் வைஷ்ணவி (13), திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். காலையில் பள்ளிக்கு செல்லும் வைஷ்ணவி மாலை 3.30 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவாள்.

பதற்றத்துடன் தேடிய தாய் 
 
வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு சென்ற வைஷ்ணவி மாலை 4 மணி ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால், மகளை தேடிக்கொண்டு பள்ளிக்கு சென்றார் கோதை.

ஆனால், பள்ளியில் வைஷ்ணவி இல்லை. அவரது தோழிகளிடம் விசாரித்தார். வைஷ்ணவியை பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினர். அதிர்ச்சி அடைந்த கோதை உடனடியாக செல்போனில் கணவருக்கு தகவல் தெரிவித்தார். உறவினர்கள், தெரிந்தவர்கள் வீடுகளிலும் தேடினர். எங்கும் வைஷ்ணவி இல்லை.\

ஒவ்வொரு வகுப்பாகத் தேடினர் 
 
குழப்பம் அடைந்த இருவரும் மீண்டும் பள்ளியிலேயே விசாரிக்கலாம் என்று இரவு 7.30 மணி அளவில் அங்கு சென்றனர். வழக்கம்போல காலையிலேயே புறப்பட்டு பள்ளிக்கு வந்த மகளை காணவில்லை என பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். பள்ளியிலேயே வைஷ்ணவி எங்காவது இருக்கலாம் என்பதால், ஆசிரியர்களும் வைஷ்ணவியின் பெற்றோரும் ஒவ்வொரு வகுப்பாக தேடினர். 

மாடியில் இருந்து குதிக்கும் சத்தம் 
 
4-வது மாடியில் உள்ள வகுப்பறைகளில் அவர்கள் தேடிக்கொண்டு இருந்தபோது, திடீரென மொட்டை மாடியில் இருந்து யாரோ கீழே குதிக்கும் சத்தம் கேட்டது. உதயகுமார், கோதை மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து கீழே ஓடி வந்து பார்த்தனர். 

தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த வைஷ்ணவி பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.
அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவளை உடனடியாக கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வைஷ்ணவி பரிதாபமாக இறந்தாள். தகவல் கிடைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்டனர். 

கதவு பூட்டியிருந்ததா? 
 
பள்ளியின் மொட்டை மாடிக்கு மாணவர்கள் செல்வது ஆபத்து என்பதால் அங்குள்ள கதவு எப்போதும் பூட்டியே இருக்கும். அப்படி இருக்கும்போது, மாணவி வைஷ்ணவி எப்படி மொட்டை மாடிக்கு சென்றாள் என தெரியவில்லை என பள்ளி நிர்வாகம் போலீஸாரிடம் தெரிவித்துள்ளது. 

தி இந்து

Saturday, June 28, 2014

அனுமதி பெறாத கருந்திரி ஆலையில் தீ: 3 பேர் பலி


விருதுநகர் அருகே அனுமதி பெறாத கருந்திரி ஆலையில் வெள்ளிக் கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதில் கட்டிடங்கள் வெடித்துச் சிதறி 3 பேர் பலியாயினர். 

விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலி நாயக்கனூர் பி.டி. காலனியில் விருதுநகர் 13-வது வார்டு கவுன்சிலர் மீனாட்சிசுந்தரம் என்பவரின் கருந்திரி ஆலை இயங்கி வருகிறது. 

அதன் அருகிலேயே அய்யப்பன் என்பவரது கருந்திரி ஆலை இயங்கி வருகிறது. அருகில் உள்ள மற்றொரு கருந்திரி ஆலையில் வியாழக்கிழமை தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் அனைத்து ஆலைகளிலும் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது. 

ஆனால், அய்யப்பன் என்பவரது கருந்திரி ஆலை மட்டும் வழக்கம் போல இயங்கி உள்ளது. வெள்ளிக் கிழமை மாலை தயாரிக்கப்பட்ட கருந்திரிகளை இரும்புக் கத்தியால் சிறு துண்டுகளாக தொழிலாளர்கள் வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு வெடிமருந்து வெடித்துச் சிதறியது. 

இதில் அய்யப்பனின் ஆலை மட்டுமின்றி, மீனாட்சி சுந்தரத்தின் ஆலையிலும் தீ பரவியது. இதனால் கட்டிடங்கள் பயங்கர மாக வெடித்துச் சிதறின. இதில் அய்யப்பனின் ஆலையில் பணி புரிந்த கும்பகோணத்தைச் சேர்ந்த அருமைதுரை (40) சம்பவ இடத்தி லேயே உடல் கருகி இறந்தார். கட்டிடங்கள் வெடித்துச் சிதறிய தில் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சின்ராஜ் மகள் காளீஸ்வரி (9) மற்றும் அருகில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பொன்னம்மாள் (70) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 

ஆலையில் வேலை செய்த சங்கரவேல் (45), துரைராஜ் (42) ஆகிய இருவரும் நூறு சதவீத தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையிலும், மேலும் 7 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோகர் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்கள் ஆலையில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. 

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன், காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
வெடிவிபத்துச் சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆலைகள் அனைத்தும் அனுமதி பெறாமல் இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. 

தி இந்து

கெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு


ஐதராபாத்,ஜூன்.29 - கெயில் எரிவாயுக் குழாய் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

இந்த விபத்து மிகவும் வருந்தத் தக்கது. அப்பாவி மக்கள் உயிரிழந் துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது. இதில், அதிகாரிகளின் அலட்சியப்போக்கிருந்தால், கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் ரூ. 3 லட்சம் வழங்கப்படும். மேலும் கெயில் நிறுவனத்திடம் இருந்து ஒரு குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் என தலா ரூ. 25 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

தினபூமி

‘இடி விழுந்ததே விபத்துக்குக் காரணம்’ - விபத்து குறித்து கட்டுமான நிறுவனம் பதில்


11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்குக் காரணம், இடி விழுந்ததுதான் என கட்டுமான நிறுவனம் ‘பிரைம் சிருஷ்டி’யின் இயக்குனர் பாலகுரு கூறுகிறார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘11 மாடி கட்டிடம் முறையான அனுமதி பெற்றே கட்டப்பட்டு வந்தது. எந்த விதி மீறலும் கிடையாது. இடி விழுந்ததுதான் கட்டிடம் இடிந்து விழுந்ததற்குக் காரணம். எனவே கட்டிடம் இடிந்து விழுந்ததற்குப் பொறுப்பு ஏற்க முடியாது’’ என கூறினார்.

மேலும், ‘‘கட்டிடத்தின் கட்டுமானப் பணி முடிந்தபிறகுதான் வழக்கமாக இடிதாங்கும் கருவி பொருத்தப்படுவது வழக்கம். கட்டிடம் இப்போதுதான் நிறைவுக் கட்டத்தை எட்டி வந்தது. விபத்தின்போது 50 பேர் கட்டிடத்தில் இருந்தனர். சம்பவத்தின்போது பலத்த மழை பெய்தது’’ என்றும் தெரிவித்தார்.

தினத்தந்திWednesday, June 25, 2014

குற்றால அருவிகளில் எண்ணெய், ஷாம்பு பயன்படுத்தத் தடை

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளிக்கும் போது எண்ணெய், ஷாம்பு, சீயக்காய், சோப்பு போன்ற வேதிப்பொருள்களை பயன்படுத்துவதற்கு  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது. அருவிகளின் அருகில் இது போன்ற பொருள்கள் விற்பனை செய்வதற்கும் தடைவிதித்துள்ளது.

தினமணி

அடையாறு ஆற்றில் குதித்து தொழிலதிபர் தற்கொலை


சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அடையாறு பாலம் அருகே புதன்கிழமை காலை ஒரு கார் நின்றது. அந்த காரில் வந்திறங்கிய 82 வயது மதிக்கதக்க முதியவர் அடையாறு பாலற்றின் மீது நடந்து வந்தார். அப்போது திடீரென பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றுக்குள் அவர் குதித்தார்.இதைப் பார்த்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து அந்த முதியவரை தேடினர்.

சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த முதியவர், அங்கிருந்து சடலமாக மீட்கப்பட்டார். மேலும் இது குறித்து அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.விசாரணையில் அந்த முதியவர் கந்தன்சாவடியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (82) என்பது தெரியவந்தது. அங்கு எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வரும் அவர், குடும்ப பிரச்னையின் காரணமாக அடையாறு ஆற்றில் இருந்து குதித்து தற்கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி

Sunday, June 22, 2014

திருக்கோஷ்டியூர் கோயிலில் கலசங்கள் திருட்டு


திருக்கோஷ்டியூரில் கலசங்கள் 
திருடு போன முத்தையா கோயில். 
 
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோஷ்டியூர் முத்தையா கோயிலில் கோபுர கலசங்கள் திருடப்பட்டுள்ளன.

திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள முத்தையா கோயில் அர்ச்சகர் சனிக்கிழமை காலை வழக்கம்போல கோயிலைத் திறந்துள்ளார். அப்போது கோயிலில் 13 கோபுர கலசங்கள் திருடுபோயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக கோயில் அர்ச்சகர் திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்துக்கும், திருப்பத்தூர் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். இதையடுத்து, அறநிலையத் துறை திருப்பத்தூர் பகுதி ஆய்வாளர் மாலா கோயிலைப் பார்வையிட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், போலீஸார் கோயிலின் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோதனையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை நடைபெற்றது. ஓரடி உயரமுள்ள 3 கலசங்களும், அரையடி உயரமுள்ள 10 கலசங்களும் திருடு போய் உள்ளது தெரியவந்துள்ளது.

இக் கலச திருட்டு தொடர்பாக திருக்கோஷ்டியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி

Sunday, June 8, 2014

மீண்டும் மீண்டும் காதல்
தெலுங்கின் பிரதான கவிஞராக அறியப்படும் முத்துப்பழனி தஞ்சாவூரை ஆண்ட பிரதாபசிங்க மன்னரின் அரண்மனையில் தேவதாசியாக இருந்தவர். ‘ராதிகா சாந்தவனம்’ என்கிற காவியத்தின் மூலம் தெலுங்கு இலக்கியத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியவர் முத்துப்பழனி. இலாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளும் கிருஷ்ணன் முதல் மனைவியான ராதாவை சமாதானப் படுத்துவது போல அமைந்த பாடல்களைக் கொண்டதால் ‘ராதிகா சாந்தவனம்’ என்று அழைக்கப்பட்டது இந்நூல்.

பாலியல் உறவில் முதல் அடியை ஒரு பெண் எடுப்பது போல அமைந்த ஒரு பாடல் தெலுங்கு இலக்கியத்தில் கிட்டத்தட்ட ஒரு புரட்சியை உண்டு பண்ணியது. அதுவரை, அது போன்ற ஒரு பாடலை ஆண் கவிஞர் களே எழுதியதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அவளை முத்தமிட வேண்டாம் என்று சொன்னால்

எனது கன்னங்களை வருடியபடி

அவளது உதடுகளை எனது உதடுகள் மீது

அழுத்தமாகப் பதிக்கிறாள்.

என்னைத் தொட வேண்டாம் என்றால்

அவளது உறுதியான மார்பகத்தை என்மீது பதியவைத்து

என்னை அணைக்கிறாள்.

என்னை நெருங்க வேண்டாம்

அது நாகரிகமில்லை என்றால்

என்னை அவதூறு செய்கிறாள்.

எனது படுக்கையில் பெண்ணிற்கு

இடமில்லை என்கிற சத்தியத்தைச் சொன்னால்

அதன் மீதேறி தனது காம விளையாட்டை தொடங்குகிறாள்.

தனது உதடுகளிலிருந்து

நான் அருந்தவும்

கொஞ்சவும் பேசவும் செய்கிறாள்.

மீண்டும் மீண்டும் காதல் செய்கிறாள்.

அவளிடமிருந்து நான் எப்படி விலகியிருப்பது?

போன்ற பல கவிதைகளைக் கொண்டது ‘ராதிகா சாந்தவனம்’. 1887-ல் முதன் முறையாகப் பதிப்பிக்கப்பட்டாலும் ராதிகா சாந்தவனம் முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. பின்னர், தேவதாசி மரபில் வந்த நாகரத்தினம்மா அந்தக் கவிதைகளை முழுமையாகக் கண்டுபிடித்து 1910-ல் பதிப்பித்தார். அப்போது கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது அந்நூல். ஆபாசமான பிரதி எனவும் அதை எழுதியிருப்பவர் ‘தரம் கெட்டவர்' எனவும் எதிர்ப்பாளர்கள் சொன்னார்கள். இதற்கு எதிராகக் கடுமையாகப் போராடினார் நாகரத்தினம்மா. ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லை. 1911-ல் தடை செய்யப்பட்டது ராதிகா சாந்தவனம். சுதந்திரத்துக்கு பின்னரே அந்தத் தடை விலக்கப்பட்டது.

ஒரு பெண்ணின் முதல் பாலியல் அனுபவம், இன்னொரு பெண் மீது கணவன் விருப்பம் கொள்ளும்போது எழும் பொறாமையுணர்வு என்று பெண்ணின் அகவுணர்வைப் பரந்துபட்ட வெளியில் துல்லியமாக முன் வைத்த கவிதைகள் முத்துப்பழனியுடையவை. சமஸ்கிருதத்திலும் புலமை பெற்ற முத்துப்பழனி தன்னைப் பற்றிய சுயவிவரக் கவிதையொன்றில் ‘ஈடு இணையற்றவர்' என்று தன்னை சொல்லிக்கொள்கிறார்.

முழுநிலவு போல ஒளிரும் முகம்

அந்த முகத்திற்கு இணையான விவாதத்திறன்

கனிவு கொண்ட கண்கள்

அதே போன்ற பேச்சு.

பார்வையையொத்த பரந்த மனப்பான்மை

இதெல்லாம்தான் பழனியை அலங்கரிக்கும் நகைகள்

என்று ஒரு பாடலில் தன்னைப் பற்றிச் சொல்கிறார் முத்துப்பழனி. அதே போல, தன்னைப் பற்றிப் பேசும்போது தனது பாட்டி, அம்மா, அத்தை போன்ற பெண்களின் திறமைகளைச் சொல்லி அதன் மூலம் தன்னை நிறுவிக்கொள்ளும் போது முத்துப்பழனியின் கவிதைகளில் ஒரு பெண்ணிய சலனம் தெரிகிறது. நாகரத்தினம்மா போன்றவர்களின் முயற்சி இல்லாமலிருந்தால் இன்று காணாமலே போயிருக்கும், பெண்ணியலாளர்களால் முக்கியமானவை என்று கொண்டாடப்படும் முத்துப்பழனியின் கவிதைகள்.

ராதிகா சாந்தவனம், காவியம், தெலுங்கு இலக்கியம், மொழிபெயர்ப்பு, கவிதை

தி இந்து

Saturday, June 7, 2014

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த சுங்கத்துறை அதிகாரிக்கு சிறைத் தண்டனைசென்னையில் சுங்கத்துறை கண்காணிப்பாளராக இருந்த புகழேந்தி (50) வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2004 - 2009ஆம் ஆண்டு வரை பணியில் இருந்த புகழேந்தி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.89.72 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்தது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரமராஜ் உத்தரவிட்டார்.

தினமணி