Monday, December 30, 2013

காரைக்காலில் இரு கும்பலால் இளம்பெண் பாலியல் வல்லுறவு: இதுவரை 14 பேர் கைது



காரைக்காலில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இளம்பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில், இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இரண்டு கும்பல்களால் வல்லுறவு

பாண்டிச்சேரியை அடுத்த காரைக்காலுக்கு தோழியுடன் வந்த திருவாரூரைச் சேர்ந்த 21 வயது பெண், அடுத்தடுத்து இரண்டு முறை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவம் டிசம்பர் 25-ல் நடந்துள்ளது.

தனது நண்பரைப் பார்ப்பதற்காக புதுச்சேரி வந்திருக்கிறார் பாதிக்கப்பட்ட இந்தப் பெண். தன்னுடன் வந்த தோழிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், இவர்கள் நண்பரின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வெளியே நின்றிருந்த அந்தப் பெண்ணை, மூன்று ஆண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அந்தப் பாலியல் வல்லுறவுத் தாக்குதல் முடிந்ததும், தகவல் அறிந்து அந்தப் பெண்ணை அவரது நண்பர்கள் மீட்பதற்குள், அப்பெண்ணை மற்றொரு கும்பல் இன்னோர் இடத்துக்கு அழைத்துச் சென்று ஆறு முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

இந்த வழக்கில் தொடக்கம் முதலே காரைக்கால் போலீஸார் கவனம் செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது. சிலரது யோசனையின் பேரில் வெளியே தெரியாமல் இந்த வழக்கில் பேசித் தீர்வு காண போலீஸார் முயன்றனராம். பின்னர், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை புதுச்சேரி மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என காரைக்காலைச் சேர்ந்த முகம்மது இர்பான், அப்துல்காசிம், முகம்மது அமீர் அலி, அக்பர் அலி, முகம்மது யூசுப், முப்பாயைத், அப்துல்நாசர், திருநள்ளாறைச் சேர்ந்த மதன், எழிலரசன், பாபுராஜன் ஆகிய 10 பேர்களைக் கைது செய்து வியாழக்கிழமை இரவு காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மீதமுள்ள 5 பேர்களில் இளம் குற்றவாளியை புதுச்சேரி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். தேடப்பட்ட 4 பேரில் பைசல் என்பவர் வெள்ளிக்கிழமை காரைக்கால் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஜெயகாந்தன் என்பவரை வேளாங்கண்ணியில் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் ஜெயகாந்தன் அளித்த தகவலின்பேரில் செல்லப்பா என்பவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில் தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநர் மணி என்பவரை குற்றப்புலனாய்வுத் துறையினர் தேடி வருகிறார்கள்.

சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் வேலையை செய்து வந்தவரான மணிக்கு, நகரில் உள்ள பல்வேறு கும்பலுடனும் தொடர்புள்ளதாம். வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்ட ஜெயகாந்தன்தான் முதலில் இளம்பெண்ணை மிரட்டி மணியின் அறையில் வைத்துக்கொண்டு, தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஜெயகாந்தன் மீது ஒரு பெண்ணைத் தாக்கியது உள்ளிட்ட 2 வழக்குகள் உள்ளன. கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் 1994-ம் ஆண்டு ஒரு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டில் 18 மாத சிறை தண்டனை பெற்றவர். ரூ.5 ஆயிரம் பிணைத்தொகை கட்டி வெளியே வந்தநிலையில் மீண்டும் வல்லுறவு வழக்கில் அவர் சிக்கியுள்ளார்.

முன்னர் பா.ம.க பிரமுகர் ஒருவரின் ஆதரவில் வலம் வந்து கொண்டிருந்த அப்துல் நாசர் கடந்த சில ஆண்டுகளாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நாஜிமின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.                                                                     

செய்தி : தி  இந்து                                                              


இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இயற்கை எய்தினார்


நம்மாழ்வார்
 
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இன்று (திங்கள்கிழமை) காலமானார். அவருக்கு வயது 75.

சமீப காலமாக மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்த அவர், பட்டுக்கோட்டையின் அத்திவெட்டி அருகே உள்ள பிச்சினிக்காட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இன்று இரவு சுமார் 9.30 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

தன் கடைசி காலம் வரை விவசாயிகளிடையே இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நம்மாழ்வார், தமிழகத்தில் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருவதில் பெரும் பங்கு வகித்தவர்.

உலக நாடுகள் புவி வெப்பமடைதல் பாதிப்பை குறைப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்தியதுடன், அதற்கு வித்திடும் இயற்கை வேளாண்மையைப் பரவலாக்குவதற்குப் பாடுபட்டவர்.

கோ. நம்மாழ்வார், தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் 1938 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை முடித்தார்.

சில காலம் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் பணியாற்றியவர், அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்து, அங்கிருந்து வெளியேறினார். அதன் பின், இயற்கை வேளாண்மை விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்காக தன் வாழ்க்கையையே முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்.

கரூர் மாவட்டம் வானகத்தில் ஒரு தன்னார்வ மாதிரி பண்ணை உருவாக்கி, அதனை மிகச் சிறப்பாக நடத்தி வந்த நம்மாழ்வார், இயற்கை வேளாண் முறைகளின் மூலம் பல்லுயிர் வாழும் கானகமாகவே அந்தப் பண்ணையை மாற்றினார்.

இயற்கை வேளாண்மையையொட்டிய பல்வேறு நூல்களை எழுதிய இவர், தனது வயதையும் பொருட்படுத்தாமல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கருத்தரங்குகளில் பங்கேற்று, அடுத்தத் தலைமுறைக்கு இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்மாழ்வாரின் மறைவிற்கு பல்வேறு ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் இணையச் சூழலில், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு நினைவாஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.                                                                                                                             
செய்தி : தி இந்து

தின இதழ்-மோசடிப் பணம் உண்மை உரைக்காது...!


மீனாட்சி அம்மன் அறக்கட்டளை குழுமம் சென்னையைத் தலைமையிடமாக கொண்டு மருத்துவம்,பொறியியல்,கலை,பிசியோதெரபி தொழிற்கல்வி உள்ளிட்டு பல்வேறு சுயநிதிக் கல்லூரிகளை நடத்துகிறது.

இது போன்ற சுயநிதிக் கல்லுரிகள் என்றால் கணக்கு வழக்கற்ற வசூலுக்கும்,கருப்புப் பணத்துக்கும் முறைகேட்டுக்கும் பஞ்சமா என்ன..?

இந்நிலையில் மீனாட்சி அம்மன் குழுமம் நடத்தும் கல்லூரிகள் மற்றும் அதனை நிர்வகிக்கும் ஏ.என்.ராதாகிருஷ்ணன் வீடு மற்றும் இந்தக் குழுமம் தொடர்புடைய 30 க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ள‌து தொடர்பில் நேற்று (30-07-2013) வருமான வரிச் சோதனை நடைபெற்றது.


தினமலர்-ஜூலை 31,2013 சென்னைப் பதிப்பு


இந்த நிறுவனம் ஊடகத்துறையில் சமீபத்தில் நுழைந்து உள்ளது.பத்திரிகைத் துறையில் புதிய சகாப்தம் தொடங்கி விட்டது என்று சொல்லிக் கொண்டு தின இதழ் என்னும் பெயரில் ஒரு நாளிதழைத் தொடங்கி நடத்தி வருகிறது.விகேஷ் தான் இதன் ஆசிரியர்.இப்பொழுதைக்கு சென்னை பதிப்பு மட்டும்.விரைவில் பல ஊர்களில் இருந்து வெளியிடத் திட்டம்.




எஸ்.ஆர்.எம்.,பச்சமுத்து இத்துறையில் நுழைந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,அவரது வழியில் பல்வேறு பண முதலைகள் அடியெடுத்து வைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இதில் நுழைந்த‌வர் தான் இதன் அதிபர் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.



இவரது கல்விச் சேவையைப் பார்ப்போம்.

1983-Meenakshi ammal polytechnic college.
1985-Arulmigu meenakshi amman college of engineering.
1990-Meenakshi amman dental college.
1993-M.G.R.institute of Hotel management &techmology.
1995-Sri muthukumaran institute of technology.
1998-Meenakshi ammal matriculation Hr.sec.school,meenakshi college of Nursing,Meenakshi college of    
        -physiotheraphy.
2001-Meenakshi college of engineering,Meenakshi ammal Arts and science college,Sri muthukumaran Arts and science college.
2002-Vani Vidhyalaya sr.secondary&junior college.
2003-Meenakshi Medical college hospital&Research institute.
2005-Meenakshi ammal Teacher Training Institute.
2006-Arulmigu Meenakshi college of Education,sri muthukumaran college of education.
2010-Sri muthukumaran Medical college Hospital&Research Institute.
2011-Mangadu Public school.
2012-Arulmigu Meenakshi amman public school,Meenakshi ammal Global school.

இது தான் இவரது வளர்ச்சி விகிதம்.

1983 ஆம் ஆண்டில் சில ஆயிரத்தில் வாடகை கட்டிடத்தில் ஆரம்பித்த கல்வி வியாபாரம் ஒவ்வொரு வருடமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து இன்று பல ஆயிரம் கோடிகளை அக்குழுமத்தின் சந்தை மதிப்பாய்த் தொட்டிருக்கிறது.இந்த பணம் முழுவதும் அவரது கல்லூரிகளில் படித்த ஏழை,நடுத்தட்டு,உயர்தட்டு மாணவர்களிடம் இருந்து சுரண்ட‌ப்பட்டது.

இவ்வளவு காலம் கல்வி ஏகபோக வணிகத்தில் சம்பாதித்த பணத்திற்கு உரிய பாதுகாப்புத் தேடியும்,இவரது கல்வி நிறுவனங்களுக்கு அரசு அதிகாரிகள் முதல் அதிகார மையங்கள் வரை அனைவரிடமும் இருந்து சிக்கல்கள் வராமல் தடுக்கவும்,'பார்மாலிட்டிஸ்' இல்லாமல் இனிமேல் காரியம் முடிக்கவும் தொடங்கப்பட்டது தான் இந்த தின இதழ்.

அப்படி நினைக்காமல் இவ்வளவு காலம் கல்வியை கடைச்சரக்காக்கி விற்பனை செய்தவர் திடீர் 'ஞானோதயம்' பெற்று சமூகத் தொண்டாற்ற பத்திரிகை ஆரம்பித்திருக்கிறார் என்றா நினைக்க முடியும்.

இவருக்கு இதில் எஸ்.ஆர்.எம்.அதிபர் பச்சமுத்து முன்னோடி என்றால் மிகையாகாது.


ந்தப் பின்னணியில் ஆரம்பிக்கப்பட்டு ஆயிரம் காப்பி கூட விற்பனை ஆகாத தின இதழ் நாளிதழுக்கு அதை விட அதிக அளவில் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு சென்னை நகர வீதிகள்,அடுத்தவன் வீட்டுச் சுவர்களும் அசிங்கப்படுத்தப்படுகின்றன.இதைத் தவிர நாளிதழைக் கலை நயத்துடன் அச்சிட சில‌ கோடிகளுக்கு அச்சு இயந்திரமும் வாங்கப் பட்டுள்ளன என்றால் இத்துறையில் எவ்வளவு முதலீட்டினை முதலைகள் செய்துள்ளார்கள் என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறோம்.

இவரது கல்லூரி லோகோவில் 'வாய்மையே வெல்லும்' என்று இருக்கிறது.சுயநிதிக் கல்லூரிக்கும் வாய்மைக்கும் என்ன தொடர்பு என்பது ஊரறிந்த வெளிச்சம்.அதனால் தான் வரி ஏய்ப்பு தொடர்பாக 30 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடந்துள்ளது.


இந்நிலையில் பத்திரிகை உலகில் புதிய சகாப்தம் தொடங்கி விட்டது என்றும் உரைக்கும் உண்மைகள் என முகப்பில் லோகோவில் அச்சிட்டும் விளம்பப்படுத்தி நாளிதழ் நடத்துவதாகச் சொல்லிக் கொள்கின்றனர்.

மோசடிப் பணம் உண்மையை உரைக்காது என்பதை உங்களைப் போல் நாமும் நன்கு அறிவோம்....!

தொடர்புடைய இணைப்புக்கள்

http://www.deccanchronicle.com/130731/news-current-affairs/article/income-tax-raids-meenakshi-colleges

http://www.dinamalar.com/news_detail.asp?id=769974&Print=1
http://www.maalaisudar.com/newsindex.php?id=43066%20&%20section=1

http://en.wikipedia.org/wiki/Arulmigu_Meenakshi_Amman_College_of_Engineering                                

  http://kalakakkural.blogspot.in/2013/07/blog-post_30.html



Sunday, December 22, 2013

பாலியல் புகார் : டிவி செய்தி ஆசிரியர் கைது


:பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் கேப்டன்  தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் தினேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.
.
ஓட்டேரியை சேர்ந்தவர் மோகனா (வயது 30) இவர் கேப்டன் தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று மாலை மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில்,  நான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.  இதில், செய்தி ஆசிரியராக உள்ள தினேஷ் குமார்  பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். இது தொடர்பாக நிறுவனத்திடம் ஏற்கனவே புகார் அளித்தேன். ஆனால், இன்றுவரை அவர் மீது  நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், தினேஷ் குமார் நீ யாரிடம் புகார் அளித்தாலும், என்னை யாராலும் ஒன்று செய்துவிட முடியாது எனக்கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்.  இதனால்,  மனரீதியாகப் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன்.
 
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் தொடர்பாக மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஆனந்த பாபு பெண் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இந்நிலையில், இது தொடர்பாக, செய்தி ஆசிரியர் தினேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.
| |
செய்தி : மாலைச் சுடர்
   

Thursday, December 12, 2013

ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

ஐஏஎஸ் அதிகாரி 
உமா சங்கர் மீது 
தலைமைச் செயலர் வழங்கிய குற்றச்சாட்டு குறிப்பாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
ஐஏஎஸ் அதிகாரி உமா சங்கர் கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் (பஐஐஇ) தலைவராக இருந்தார். அப்போது, பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் உடன்பாட்டில் டிக் இருந்தது. இதைப் பயன்படுத்தி திருவான்மியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தனது மனைவி சூரியகலாவுக்கு முக்கிய பதவியை பெற்றுத் தந்ததாக உமா சங்கர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதனால், அரசு பணியின் போது நேர்மையாக இல்லை, அர்பணிப்புடன் செயல்படவில்லை. அகில இந்திய பணிகள் நடத்தை விதியை மீறியதாகவும் உமா சங்கருக்கு தலைமைச் செயலர் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி குற்றச்சாட்டு குறிப்பாணை (மெமோ) வழங்கினார்.

மேலும், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்ய அதிகாரியும் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து உமா சங்கருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது.

இந்த குற்றச்சாட்டு மற்றும் அகில இந்திய பணிகள் நடத்தை விதியை ரத்து செய்யக் கோரி சென்னை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் உமாசங்கர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் உமாசங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோர் முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விசாரணை அதிகாரியின் அறிக்கையில் உமாசங்கர் நடத்தை விதியை மீறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டது அதில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், விதியை மீறியதாக உமா சங்கர் மீது எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை. அதனால், அவர் மீதான குற்றச்சாட்டை ஏற்கமுடியாது. எனவே அவர் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்படுகிறது.

மேலும், அகில இந்திய நடத்தை விதிகளை ரத்து செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அரசு அதிகாரிகள் நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது அந்த விதி. அதனால் அதை ரத்து செயய் முடியாது. எனவே, கடந்த 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதியின் தலைமைச் செயலர் வழங்கிய குற்றச்சாட்டு குறிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.                                           
தினமணி- 12 - 12 -2013                                    


Wednesday, December 11, 2013

சென்னை : காவல்துறை மீது 95 சதவீத புகார்கள்


மனித உரிமை மீறல்: காவல்துறை மீது 95 சதவீத புகார்கள்

     சென்னை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனித உரிமை தின விழாவில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட அதிகாரிகள்.

மனித உரிமை மீறல் தொடர்பாக காவல்துறை மீது 95 சதவீத புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஜெயந்தி தெரிவித்தார்.

மனித உரிமை தினத்தையொட்டி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய அரங்கில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் ஜெயந்தி பேசியது:
மனித உரிமை ஆணையம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறோம்.

கடந்த 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மனித உரிமை ஆணையத்தில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

அதில் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல் குறித்து தினமும் 80 முதல் 100 புகார்கள் வரை பெறப்படுகின்றன. அவற்றில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்துதல், போலியாக வழக்குப்பதிவு செய்தல் உள்பட 95 சதவீத புகார்கள் காவல்துறை சார்ந்த புகார்களாக உள்ளன.

இவை தவிர சான்றிதழ்கள் பெற பணம் கேட்டதாக வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாணவர்களை துன்புறுத்திய ஆசிரியர்கள், நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட புகார்களும் பெறப்படுகின்றன.

மனித உரிமை மீறல் குறித்து பொதுமக்கள் கடிதம் மூலமாகவோ அல்லது 143, பசுமை வழிச்சாலை (கிரீன் வே), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரில் நேரிலோ மனித உரிமை ஆணையத்திடம் தங்களது புகாரை தெரிவிக்கலாம்.

புகாரின் தன்மையைப் பொருத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார் அவர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கே.பாஸ்கரன், செயலர் அசோக் ரஞ்சன் மொகந்தி, சட்டத்துறைச் செயலர் ஜி.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.                                                                                                                          
தினமணி,  11 - 12 - 2013                                                                                                                  





சென்னை : நடப்பாண்டில் குண்டர் சட்டத்தில் 1800 பேர் கைது


சென்னையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடப்பாண்டு இதுவரை 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகரக்  காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகரக்  காவல்துறை கடந்த ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 904 பேரைக்  கைது செய்தது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

2002ம் ஆண்டு 1143 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதே, அதிக எண்ணிக்கையாக கூறப்பட்டது. ஆனால் இந்தாண்டு அதையும் தாண்டி 1,800 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சென்னையில் 632 தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன. இந்தாண்டு இதுவரை 511 தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வழிப்பறிச் சம்பவங்கள் கடந்த ஆண்டு 85 நடந்தன. இந்த ஆண்டு 71 சம்பவங்கள் நடந்துள்ளன.

ஆதாயக் கொலைகள் கடந்த ஆண்டு 17 நடந்தன. இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது. அதேவேளையில் திருட்டு வழக்குகளில் கடந்த ஆண்டு ரூ. 16 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த ஆண்டு ரூ. 20 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு குற்ற வழக்குகளில் 91 சதவீத குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு போலீசாரின் தீவிர நடவடிக்கைகளால் 93 சதவீத குற்றவாளிகள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பெருநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி, 11-12-2013

ஆன்லைன் வர்த்தகம்: ரூ.50 கோடி சுருட்டிய அண்ணன், தங்கை கைது




சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.50 கோடி சுருட்டிய கேரளத்தைச் சேர்ந்த அண்ணன் தங்கையை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த படூர் ஒய்.எம்.ஆர். சாலையில் வசித்து வருபவர் பிரகாசம் (வயது 37). ஆடிட்டர். இவரது தங்கை ரேகா (30), எம்.பி.ஏ. படித்து உள்ளார். இவர்களது சொந்த ஊர் கேரள மாநிலத்தில் கண்ணனூர் ஆகும். இவர்கள் இருவரும் ‘நாங்கள் தங்கம், வெள்ளி, மற்றும் ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்து வருகிறோம். ஆகையால் நீங்கள் பெருந்தொகையை எங்களிடம் அளித்தால், நாங்கள் அதிக விலைக்கு வரும்போது 40 சதவீதம் வரை கூடுதலாக பணம் தருகிறோம்' என்று ஆன்லைன் மூலம் கவர்ச்சிகரமாக விளம்பரத்தைத் தெரியபடுத்தினர்.

இதைப் பார்த்த காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே போஸ்டல் காலனியில் வசிக்கும் வக்கீல் அஜித்குமார் ரூ.10 லட்சத்தை ஆன்லைனில் கடந்த ஆண்டு அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் குறிப்பிட்ட சில மாதங்கள் ஆகியும் அஜித்குமாருக்கு, கட்டிய பணம் மற்றும் கூடுதல் பணம் கிடைக்கவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த அஜித்குமார் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அஞ்சாலட்சுமி, பார்வதி, ராஜேந்திரன், மற்றும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ஆன்லைன் மூலம் ஏமாற்றிய பிரகாசம், அவருடைய தங்கை ரேகா ஆகியோரை பிடிக்க போலீசார் சென்னைக்கு விரைந்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் அவர்களை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். பின்னர் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதையொட்டி அவர்கள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் சென்னை மற்றும் காஞ்சீபுரம் சுற்றுபுறப் பகுதிகளில் சுமார் ரூ.50 கோடி அளவுக்கு ஆன்லைன் மூலம் மோசடி செய்து இருப்பதாகத் தெரியவருகிறது. இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை அலுவலகம், காஞ்சீபுரம் மாவட்ட குற்றபிரிவு போலீஸ் அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில்தான் இந்த மோசடி வழக்கில் சென்னை நகர போலீசார் பிரகாசத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில தினங்களுக்கு முன்பு தான் இவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் தற்போது காஞ்சீபுரம் போலீசாரால் பிரகாசம், அவரது தங்கை ரேகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

tamil.oneindia.in

Monday, December 9, 2013

சென்னை: : கணவரைத் தீ வைத்து எரித்துக்கொன்ற மனைவி புழல் ஜெயிலில் அடைப்பு

புளியந் தோப்பு கண்ணிகாபுரம் ஜோசப் தெருவைச் சேர்ந்தவர் பாரத் (28). பெரிய மேட்டில் உள்ள தோல் மண்டியில் வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி பவானி (26). இருவரும் 9 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். நிலா (8), சஞ்சய் (5) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

பாரத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை சித்ரவதை செய்து வந்தார். இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதே போல நேற்று முன் தினம் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பாரத் வீட்டில் கேனில் இருந்த மண்எண்ணையை எடுத்து மனைவி பவானி மீது ஊற்ற முயன்றார். ஆனால் மண் எண்ணை பாரத் உடலிலேயே பட்டது. பயந்து போன பவானி வீட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார். ஆனால் பாரத் மனைவியை பிடிக்க முயன்றார். அவனது பிடியில் இருந்து தப்ப பவானி தீக்குச்சியை உரசி கணவர் மீது போட்டு விட்டு ஓடி விட்டார்.

ஏற்கனவே மண்எண்ணையில் நனைந்து இருந்த பாரத் மீது தீக்குச்சி விழுந்து உடல் பற்றி எரிந்தது. வலியால் துடித்தார். பின்னர் தீயை தானே அணைத்து பெரியமேட்டில் குடியிருக்கும் தனது தந்தை வீட்டுக்கு நடந்தே சென்றார்.

அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏற்றி பாரத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பாரத் நேற்று பரிதாபமாக இறந்தார். விசாரணையில் அவரை மனைவியே தீ வைத்தது தெரிய வந்தது.

இதையொட்டி பவானியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.                   

மாலைமலர்

Friday, December 6, 2013

கொலை வழக்கில் வழக்குரைஞர் தம்பதி சிறையில் அடைப்பு




பெண் கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் ராஜவேல், அவரது மனைவி ஆகியோர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பல்வேறு வழக்குகள் தொடர்பாக, இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.


கோவை ஹவுசிங்  யூனிட்ட்டில் வாழ்க்கை 

கோவை, சிட்கோ, குறிச்சி ஹவுசிங் யுனிட் - ஃபேஸ் 2 பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் இ.டி. ராஜவேல் (44). இவரது மனைவி மோகனா (41).

இவர்கள் இருவரும் ரத்தினபுரி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட சிவானந்தா காலனியைச் சேர்ந்த அம்மாசை (45) என்ற பெண் கொலை வழக்கு தொடர்பாகத் தேடப்பட்டு வந்தனர்.


கேரள மாநிலம் கோவளத்தில் கைது 

இந்த வழக்கு தொடர்பாக வழக்குரைஞரின் கார் ஓட்டுனர் பழனிசாமி, வி.சி.க. கட்சியின் குறிச்சி நகர நிர்வாகி பொன்ராஜ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வழக்குரைஞர் ராஜவேல், அவரது மனைவி ஆகியோர் கேரள மாநிலம், கோவளத்தில் வைத்து வியாழக்கிழமை பிடிபட்டனர்.

நீதிமன்றக் காவல்

 காவல் உதவி ஆணையர் ராமசந்திரன் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் ராஜவேல், கனகசபாபதி, வெங்கட்ராமன், உதவி ஆய்வாளர் சிவகுமார் அடங்கிய தனிப்படை போலீஸார், வெள்ளிக்கிழமை அவர்களை கேரள நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கோவைக்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் கோவை, ஜே.எம். 2 நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் உத்தரவிட்டார். 

அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கோவை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நால்வர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 201 (தடயங்களை மறைத்தல்), 302 (கொலை) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்குமூலம் பெறவில்லை:

கைது செய்யப்பட்டுள்ள ராஜவேலிடம் இதுவரை கொலை வழக்கு குறித்து எவ்வித வாக்குமூலமும் பெறவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து உதவி ஆணையர் ராமசந்திரனிடம் கேட்ட போது, ராஜவேலின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு அவரிடம் வாக்குமூலம் எதுவும் பெறப்படவில்லை என்றார்.

அம்மாசை கொலை வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வழக்குரைஞர் ராஜவேல் உள்பட கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரையும் ரத்தினபுரி போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பிற வழக்குகளிலும் கைது:

வழக்குரைஞர் ராஜவேல் அம்மாசை கொலை வழக்கு தவிர, ஏற்கனவே கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மணிவேல் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர். இவ்வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜவேல் அந்தக் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டது தெரிய வந்ததாகவும், மணிவேலுக்குச் சொந்தமான 26.5 சென்ட் நிலத்தை அபகரிக்கவே இந்தக் கொலை நடந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இவ் வழக்கில் ராஜவேல் விரைவில் கைது செய்யப்பட உள்ளார்.

மேலும் ராஜவேல், மோகனா ஆகியோர் மீது போத்தனூர் போலீஸில் மோசடியாக சான்று பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு ரூ. 12 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் மோகனாவை ஒடிசா போலீஸார் தேடி வருகின்றனர். அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ் வழக்குகள் தொடர்பாக ராஜவேலின் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீஸார் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

காவல்நிலையத்தில் மயக்கம்:

 ராஜவேல் ஏற்கெனவே சிறுநீரகக் கோளாரால் பாதிக்கப்பட்டு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை பகலில் ராமநாதபுரம் காவல்நிலையத்தில் அவரைப் போலீஸார் தனி அறையில் வைத்திருந்தபோது, ராஜவேலுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அவருக்கு தேனீர் வாங்கிக் கொடுத்துச்சரிப்படுத்தினர்.                                                                                                         

நன்றி ;-தினமணி ,  07 - 12 -2013                                                                                                       


Thursday, December 5, 2013

இணையத்தின் மூலம் ரூ. 45 கோடி மோசடி செய்த ஆசிரியர் அக்பர் அலி கைது


இணையத்தின் மூலம் ரூ. 45 கோடி மோசடி செய்ததாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஆசிரியர் திருவாரூரில் செவ்வாய்க்கிழமை பிடிபட்டார்.

நாகை மாவட்டம், ஏனங்குடி கேதாரிமங்கலம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த தாவுத்கான் மகன் அக்பர் அலி (34). இவர் ஏனங்குடியிலுள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே, தான் ஒரு பெரிய நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் பங்குதாரராக சேர்ந்தால் செலுத்தும் பணத்துக்கு இரட்டிப்புத் தொகை கொடுக்கப்படும் என்று இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டார்.

இதனை நம்பி ஏனங்குடி, கேதாரிமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புறப்பகுதியைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.45 கோடி வரை பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன்பு அக்பர் அலி தலைமறைவாகி விட்டார்.

பணம் செலுத்தியவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து, நாகப்பட்டினம் மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து அக்பர் அலியை தேடி வந்தனர்.

இந்நிலையில், திருவாரூர் நகரப் போலீஸார் வாழவாய்க்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்த போது, காரில் வந்த அக்பர் அலி பிடிபட்டார். பின்னர் அவர் நாகை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் அக்பர் அலிஒப்படைக்கப்பட்டார்.                                                                                           

நன்றி ;- தினமணி                                                                                       

                                                                                      


                                  

Wednesday, December 4, 2013

தற்கொலையை இணையத்தில் பரப்பிய வாலிபர் , காப்பாற்றப்பட்டார் !



கனடாவில் வாலிபர் ஒருவர் தனது தற்கொலைக்  காட்சியை இணையதளத்தில் ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வட அமெரிக்காவில் உள்ள கனடாவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (20). கல்லூரி மாணவரான இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.

மேலும் அதனை ஒரு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

அதன்படி தொடக்கத்தில் சில மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் குடித்தார். பின்னர் ஓட்கா மதுவைக் குடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது அறையில் தீ வைத்து கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்.

அக்காட்சியைக் குரூர புத்தி கொண்ட 200 பேர் நேரில் பார்த்து ரசித்தனர். மேலும் அவர் தற்கொலை முயற்சியை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் மனிதாபிமானம் உள்ள சிலர் பொலிசிற்கு தகவல் அளித்ததின் பேரில் அவர் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

http://www.newsonews.com

காஷ்மீருக்காக இந்தியாவுடன் போர்: நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத், டிச.4-

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்நேரமும் போர்வரும் வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியிருக்கிறார். “இந்தியாவிலுள்ள காஷ்மீர் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே எனது கனவு. அது எனது வாழ்நாளிலேயே நடக்கும் என நினைக்கிறேன்.

அணு ஆயுதங்களில் வல்லவர்களான இரு நாடுகளுக்கிடையே எந்நேரமும் போர் வரும் வாய்ப்புள்ளது” என்று நவாஸ் ஷெரீப் செய்தியாளரிடம் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இச்செய்தி இடம்பெறவில்லை.

அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஷ்மீர் விவகாரத்தில் மக்களின் விருப்பத்திற்கேற்பவும், ஐ.நா சபை தீர்மானத்தின் அடிப்படையிலும் அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாகவும், அணு ஆயத போட்டியை இந்தியாவே முதலில் தொடங்கியதாகவும் அதனாலேயே பாகிஸ்தானும் ஆயுதப்போட்டியில் ஈடுபட்டதாகவும், தங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் ஆயுதப் போட்டிக்காக செலவழித்த தொகையை பொதுத் துறை முன்னேற்றத்திற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் செலவழித்திருக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலைமை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதில் மனநிறைவு கொள்வதாகவும் அவர் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.                                                                                                               

மாலை மலர் ;- 04 - 12 - 2013

கேரள ரிசார்ட்டில் ஐ.டி. பெண் ஊழியர் கற்பழிப்பு: வெளி மாநில வாலிபர்கள் 2 பேர் கைது




திருவனந்தபுரம், டிச. 4–

குமரி மாவட்ட எல்லையையொட்டி உள்ள கேரள பகுதியில் பூவாறு என்ற இடத்தில் கடலும், காயலும் கலக்கிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் இங்கு கேரள சுற்றுலாத்துறை பயணிகளை கவர உல்லாச படகு சவாரி, ஆயுர்வேத ஆயில் மசாஜ் போன்றவற்றை ஏற்படுத்தியது.

இது வெளிமாநில சுற்றுலா பயணிகளை கவர்ந்ததால் ஏராளமானோர் இங்கு வரத் தொடங்கினர். இதையடுத்து இந்த பகுதியில் ரிசார்ட்டுக்கள், உல்லாச விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் வந்தன. கடந்த வாரம் இங்குள்ள ஒரு ரிசார்ட்டுக்கு பெங்களூரில் இருந்து தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் சுற்றுலா வந்தனர்.

இவர்களில் 41 வயது பெண் ஒருவர் ரிசார்ட்டில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார். அவரை இரவு நேரத்தில் மர்மநபர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுபற்றி அந்த பெண் பூவாறு போலீசில் புகார் செய்தார்.

சுற்றுலா வந்த பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கேரள மாநில மகளிர் கமிஷன் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான ரோசக்குட்டி தலைமையிலான உறுப்பினர்கள் சம்பவம் நடந்த ரிசார்ட்டிற்கு நேரில் சென்று விசாரித்தனர்.

பின்னர் அவர்கள் கூறும் போது, இங்குள்ள ரிசார்ட்டில் தங்குபவர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், இதை மாநில அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறினர்.

இதற்கிடையே பெண் ஊழியர் கற்பழிப்பு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், பெண் கற்பழிக்கப்பட்ட ரிசார்ட்டில் பணிபுரியும் 2 அசாம் மாநில வாலிபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

உடனே போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் இருவரும் அந்த பெண்ணை கற்பழித்தது தெரிய வந்தது. இதையடுத்து அசாமை சேர்ந்த லாகின்நாத் (வயது 20), பெர்ஸ்சோனாபாம் (22) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:–

ரிசார்ட்டில் பணிபுரிந்து வந்தபோது, அங்கு பெங்களூர் பெண் ஊழியர் தனியாக தங்கியிருப்பதை அறிந்தோம். அவரை இரவில் தனியாக சந்திக்க விரும்பினோம். இதற்காக அந்த பெண் தனது தோழிகளுடன் வெளியே செல்லும் முன்பு அறைக்குள் நுழைந்து அங்குள்ள ஜன்னல் கதவின் தாழ்பாளை திறந்து வைத்தோம். இரவில் அவர் தூங்க வந்தபோது, ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்தோம்.

அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, அவர் சத்தம் போட்டார். நாங்கள் அவரது வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அவர்கள் இதுபோல வேறு பெண்களிடம் கைவரிசை காட்டினார்களா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மாலைமலர் 04-12-2013

பெங்களூரூ :- ஏ டி எம் மையத்தில் பெண் அதிகாரியை வெட்டியவன் அடையாளம் தெரிந்தது



பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் அதிகாரியை மர்ம ஆசாமி அரிவாளால் வெட்டி பணம், செல்போன், கிரெடிட் கார்டுகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த மர்ம ஆசாமியை கர்நாடக போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த நபர் ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த நாராயணன் ரெட்டி என்பது தெரிய வந்தது. தலைமறைவாகி இருக்கும் அவனை போலீசார் தேடி வருகிறார்கள்

மாலைமலர் - 04- 12 -2013

Tuesday, December 3, 2013

பீகாரில் மாவோயிஸ்ட் கண்ணிவெடி தாக்குதல் : 6 போலீசார் பலி



 பீகாரின் அவுரங்கபாத் மாவட்டத்தில், ரோந்துப் பணி மேற்கொண்டிருந்த 6 போலீசார், மாவோயிஸ்ட்களின் கண்ணி வெடித் தாக்குதலில் பலியாகியுள்ளதாகவும், இறந்தவர்களில் தண்ட்வா காவல் நிலைய அதிகாரி அஜய் குமாரும் ஒருவர் என்றும் காவல்துறை ஆய்வாளர் சுஷில் கோப்டே தெரிவித்துள்ளார்.

நபிநகர் பகுதியிலிருந்து, தண்ட்வா காவல் நிலையத்திற்கு 6 போலீசாரும் திரும்புகையில், உத்ரி கோல் நகர் என்ற இடத்தின் அருகே குண்டு வெடித்தது. இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம் என கோப்டே தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான அவுரங்கபாத், பாட்னாவிலிருந்து 200கிமீ தொலைவில், ஜார்கண்ட் மாநிலத்தின், பலமு மாவட்ட எல்லையை ஒட்டியுள்ளது                                                                                     

தி இந்து - 04 - 12 - 2013

Sunday, December 1, 2013

ஓடும் ரயிலில் ௩ ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை

ஓடும் ரயிலில் 3 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை



பிகாரில் ஓடும் ரயிலில் 3 ராணுவ வீரர்களை மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனர். மேலும் அவர்களிடம் இருந்த 5 துப்பாக்கிகளை பறித்துச் சென்றனர்.

பிகார் மாநிலம் ஆஷிக்பூர்-ஜமால்பூர் இடையே சாகேப்கஞ்ச்-பாட்னா இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் சனிக்கிழமை ஜமால்பூரில் இருந்து புறப்பட்டது. அதில் ஏராளமான பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர்.

இந்நிலையில், அந்த ரயில் பிகார் மாநிலம் ஆஷிக்பூர்-ஜமால்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு கும்பலாக வந்த மாவோயிஸ்டுகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ராணுவ வீரர்களான அசோக்குமார், போலா தாக்குர், உதய் சிங் ஆகிய 3 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். முகமது இம்தியாஸ், வினய்குமார் ஆகிய இருவர் காயமடைந்தனர்.

பின்னர் அவர்கள் வைத்திருந்த 5 துப்பாக்கிகளை மாவோயிஸ்டுகள் பறித்துச் சென்றனர்.

இது பற்றி ஜமால்பூர் ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் அமிதாப் குமார் தாஸ் கூறுகையில், ""மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்குள்ளான ராணுவ போலீஸார் பாகல்பூரில் உள்ள 12-வது யூனிட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ரயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது'' என்றார்.                                                       

தினமணி ,  01-12 - 2013