Wednesday, February 26, 2014

4 வயது மகனின் வாய்க்கு பூட்டுபோட்டு கொன்ற கொடூரத் தந்தை

 நைஜீரியாவின் லகாஸ் நகரில் வசித்து வருபவர் சேரிஸ் எலிவிஸ்(30). இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது 4 வயது மகன் கார்டிச்சை காணவில்லை என்று போலீசில் புகார் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அச்சிறுவனை பல இடங்களில் தேடினர். பின்னர் சேரிஸ் எலிவிஸ்சிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குபின் முரணாக கூறியதால் வீடு முழுவதும் தேடினர்.

அப்போது எலிவிஸ் தனது 4 வயது மகனை கடுமையாக தாக்கி கொலை செய்து உடலை மறைந்து வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். மேலும் அவர் அடிக்கும் போது கத்தாமல் இருக்க சிறுவனின் வாய்க்கு பூட்டு போட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் எலிவிஸ்சை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது போலீஸார் தாக்கல் செய்த மனுவில், "எலிவிஸ், அவரது மகனை கடுமையாக தாக்கி உள்ளார். சூடான இரும்பு கம்பியால் உடல் முழுவதும் சூடு வைத்து உள்ளார். பின்னர் ஒரு பிளாஸ்டிக் டிரம்பில் போட்டு அடைத்து உள்ளார்" என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணையில் எல்விஸ்க்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தையே மகனை இவ்வாறு கொடுமைப்படுத்திய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாலைமலர்

5 வீரர்களைக் கொன்றபின் தற்கொலையும் செய்துகொண்ட இராணுவ வீரர்

காஷ்மீர் மாநிலம் கந்தெர்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள ராணுவ முகாமில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர், நள்ளிரவு 2 மணியளவில், முகாமுக்குள் உறங்கிக் கொண்டிருந்த வீரர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூடு நடத்திய வீரரும், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மிக மோசமான சூழ்நிலையில் பணி, மன அழுத்தம், குடும்பத்தை விட்டு வெகு நாட்கள் பிரிந்திருப்பதால் ஏற்படும் மன பாதிப்பு, அடிப்படை வசதிகள் இன்மை, மோசமான தலைமை, அதிகக் கட்டுப்பாடுகள் போன்றவை, இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது  

தினமணி

உமா மகேஸ்வரி கற்பழித்துக் கொலை : முக்கியக் குற்றவாளி கொல்கத்தா அருகே கைது


பெண் என்ஜினீயர் கற்பழித்து கொலை ரெயிலில் தப்பிய முக்கிய குற்றவாளி கொல்கத்தா அருகே கைது விமானத்தில் சென்னை கொண்டு வந்தனர் திடுக்கிடும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தை உலுக்கிய சென்னை பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

அந்த வழக்கில் உமா மகேஸ்வரியை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் உத்தம் மண்டல் (வயது 23), ராம் மண்டல் (23) ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த கொலை மற்றும் கற்பழிப்பு குற்ற செயலுக்கு தலைமை தாங்கி நடத்திய முக்கிய குற்றவாளியான உஜ்ஜன் மண்டல் (22) சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி தப்பி சென்றான்.

ரெயிலை விட்டு கொல்கத்தாவில் அவன் இறங்கும்போது கைது செய்வதற்காக சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் விமானத்தில் கொல்கத்தா சென்றனர்.

உஜ்ஜன் மண்டலை அடையாளம் காட்டுவதற்காக அவனோடு வேலை செய்த இன்னொரு கட்டிட தொழிலாளியையும் போலீசார் விமானத்தில் அழைத்து சென்றனர்.

நேற்று காலையில் கொல்கத்தா ரெயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் காத்திருந்தனர். ரெயில் வர தாமதமானது.

இதனால் போலீசார் ஒரு காரை வாடகைக்கு அமர்த்தி, ரெயில் கொல்கத்தா வருவதற்கு முன்பே அவனை மடக்கிப்பிடிக்கத் திட்டமிட்டனர். அதன்படி கொல்கத்தாவில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காரக்பூர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது உஜ்ஜன் மண்டலை ரெயிலிலேயே மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் உஜ்ஜன் மண்டலை கொல்கத்தா கொண்டு சென்றனர். கொல்கத்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவனை சென்னைக்கு கொண்டு வர கோர்ட்டில் உரிய வாரண்டு பெற்றனர்.

நேற்று இரவு 8.50 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து உஜ்ஜன் மண்டலுடன் தனிப்படை போலீசார் சென்னைக்கு வரும் விமானத்தில் ஏறினார்கள். நள்ளிரவில் அந்த விமானம் சென்னை மீனம்பாக்கம் வந்தடைந்தது.

விமான நிலையத்தில் இருந்து உஜ்ஜன் மண்டல் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) உஜ்ஜன் மண்டல் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உமா மகேஸ்வரி கொலை வழக்கில், இவர்கள் மூன்று பேரையும் தவிர இந்திரஜித் மண்டல் என்பவனையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பிடித்தனர். ஆனால், அவனை கைது செய்ததாக போலீசார் அறிவிக்கவில்லை.

உமா மகேஸ்வரியை காட்டுக்குள் தூக்கிச்சென்று கற்பழித்து, கொடூரமாக கொலை செய்ததில் உஜ்ஜன் மண்டல், உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய மூவருக்கும்தான் முக்கிய பங்கு உள்ளது. இதனால் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்துவிட்டதாக போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்திரஜித் மண்டல் கொலை மற்றும் கற்பழிப்பை யாராவது பார்க்கிறார்களா? என்று சற்று தூரத்தில் நின்று காவல் காத்து இருக்கிறான். இதனால் அவனை இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கலாமா?, அல்லது முக்கிய சாட்சியாக சேர்க்கலாமா? என்று போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

உமா மகேஸ்வரி கற்பழித்து, கொலை செய்யப்பட்டு சிதைக்கப்பட்ட சம்பவம் ½ மணி நேரத்தில் நடந்து முடிந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சரியாக 10.30 மணிக்கு உமா மகேஸ்வரி அவர் வேலைபார்க்கும் கம்பெனியில் இருந்து வெளியில் வந்தார். கம்பெனி வாசலில் இருந்து 700 மீட்டர் தூரம் நடந்து சென்று இருக்கிறார். அப்போது இரவு 10.45 மணி.

அந்த நேரத்தில்தான் உமா மகேஸ்வரியை கொலை கும்பலைச் சேர்ந்தவர்கள் குண்டுகட்டாக காட்டுக்குள் தூக்கிச் சென்றனர். 11.15 மணிக்கு காரியத்தை முடித்துக் கொண்டு கொலையாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர். உமா மகேஸ்வரியின் கிரெடிட் கார்டை எடுத்துச் சென்ற கொலையாளிகள் அந்த பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு சரியாக 11.35 மணிக்கு வந்துள்ளனர்.

கொலையாளி உத்தம் மண்டல் வங்கி கிரெடிட் கார்டோடு ஏ.டி.எம். மையத்துக்கு சென்று இருக்கிறான். கிரெடிட் கார்டு மூலம் பணத்தை எடுக்க முயன்றபோது பணம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் அவன் ஏ.டி.எம். மையத்தைவிட்டு வெளியே வந்தான். உத்தம் மண்டல் ஏ.டி.எம்.

மையத்துக்குள் நுழையும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கேமராவில் அப்போதைய நேரம் இரவு 11.35 என்று பதிவாகி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட ராம் மண்டல், உத்தம் மண்டல் ஆகிய இருவரையும் கொலை நடந்த இடத்திற்கு போலீசார் நேற்று அழைத்துச் சென்றனர். முதலில் உமாமகேஸ்வரி வேலை பார்த்த டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.

உமா மகேஸ்வரியை எந்த இடத்தில் மடக்கித் தூக்கிச் சென்றனர்? எந்த இடத்தில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்? என்பதை அவர்கள் இருவரும் காரில் இருந்தபடியே அடையாளம் காட்டினார்கள். யார்–யார் பாலியல் பலாத்காரத்தில ஈடுபட்டது என்ற விவரத்தையும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

உமாமகேஸ்வரியின் உடலில் கழுத்து, அடிவயிறு ஆகிய இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை 60 ரூபாய் கொடுத்து சிறுசேரி அருகில் உள்ள ஏகாட்டூரில் கொலையாளிகள் வாங்கி உள்ளனர். அந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் உமா மகேஸ்வரியிடம் இருந்து அவர்கள் பறித்துச் சென்ற தோடு, மோதிரம் மற்றும் செல்போன், கிரடிட் கார்டு ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

கொலையாளிகள் மீது விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திகை தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அலை செய்திகள்

Sunday, February 23, 2014

பாளையில் காருக்குள் சிலிண்டரை வெடிக்கச்செய்து 3 பேர் தற்கொலை: தாய்–மகன் உள்பட 4பேர் மீது வழக்குபாளை கே.டி.சி.நகருக்கு சற்றுதொலைவில் நெல்லை–தூத்துக்குடி பிரதான சாலையில் இருந்து வலதுபுறத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் சாந்தினி நகர் உள்ளது. இந்த பகுதியில் நேற்றுமாலை ஒரு ஆம்னிவேன், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனைக்கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேவந்து பார்த்தபோது, ஆம்னி வேன் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இதுகுறித்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயை அணைத்துவிட்டு வேனுக்குள் பார்த்தபோது வேனின் பின் இருக்கையில் 3பேர் உடல்கருகி எலும்புக் கூடான நிலையில் பிணமாக கிடந்தனர். 

இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவஇடத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் மாதவன், பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் பாளை கே.டி.சி. நகரில் இருக்கும் ரவிசங்கர் நகரை சேர்ந்த ரியல்எஸ்டேட் அதிபராக தொழிலதிபர் பரிபூரணம் என்கிற கண்ணன் (வயது39), அவரது மனைவி மல்லிகா (33), 6–ம் வகுப்பு மாணவியான அவர்களது மகள் சுமதி (12) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் காருக்குள் கியாஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்து தற்கொலை செய்ததும் தெரிந்தது.

இதையடுத்து 3பேரின் உடல்களையும் போலீசார் சம்பவஇடத்தலிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கண்ணன் தனது மனைவி மற்றும் மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களது தற்கொலைக்கான காரணம் தெரியவந்தது. கண்ணனிடம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பகுதியை சேர்ந்த இருவர் ரூ1.75கோடி கடன் வாங்கியுள்ளனர். அதனை அவர்கள் திருப்பி தராமல் ஏமாற்றி விட்டனர். மேலும் கடன் வாங்கிய அவர்களே, கண்ணன் மீது ஏரல் போலீஸ் நிலையத்தில் கந்துவட்டி புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்த கண்ணனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். அதன்படி நேற்றுமுன்தினமும், நேற்றும் ஏரல் போலீஸ் நிலையத்திற்கு சென்று வந்திருக்கிறார். தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்ப தராமல் ஏமாற்றியது மட்டுமின்றி, தனது மீதே போலீசில் புகார் கூறியதால் கண்ணனுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கிறது.

அதன் காரணமாகவே கண்ணன் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் கண்ணன் வீட்டில் போலீசார் சோதனைசெய்தனர். அப்போது அவர் கைப்பட எழுதிவைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. ‘‘மரண வாக்கு மூலம்’’ என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:–

நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தேன். உடல்நலம் பாதிப்பு காரணமாக தொழில் செய்ய முடியாததால், ஏரல் சிவகளை கிராமத்தைசேர்ந்த உறவினருடன் சேர்ந்த தொழில் செய்தேன். 

அவர் அறிமுகம் செய்துவைத்த இருவருக்கு சீட்டு எடுத்து ரூ1.70கோடியும், ரொக்கப் பணம் ரூ5லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ1.75கோடி கடன் கொடுத்தேன்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த பணத்திற்கான வட்டியும் தரவில்லை. அசல் பணத்தையும் தரவில்லை. என்னை ஏமாற்றி விட்டார்கள். இதுதொடர்பாக ஏரல் போலீசில் புகார்செய்தேன். ஆனாலும் எனது பணம் கிடைக்கவில்லை.

இதற்கிடையே கடன் தொகையை கேட்டு தொல்லை செய்வதாக என்னிடம் பணம் வாங்கியவர்கள் என்மீது போலீசில் புகார் செய்தனர். இந்த பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளானதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து பெருமாள் புரம் போலீசார், ஏரல் சிவகளையை சேர்ந்த லட்சுமணன், அவரது தாய் பேச்சியம்மாள், சுப்பிர மணியன், மாணிக்கவாசகம் ஆகிய 4பேர் மீதும் வழக்கு பதிந்தனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. 

மாலைமலர் 

Wednesday, February 19, 2014

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் எதிர்ப்பு1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்பூதூரில் குண்டுவைத்து கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில், குற்றவாளிகள் 7 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு அப்போது குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மேலும்  ராஜிவ் கொலை வழக்கில், தமிழர்கள் என்ற அடிப்படையில் குற்றவாளிகள் 7 பேரும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் ராஜிவுடன் சேர்ந்து உயிரிழந்தவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தமிழர்கள் இல்லையா என்று வேதனையுடன்  அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தினமணி

Tuesday, February 18, 2014

பெங்களூரிலும் அம்மா உணவகம்: முதல் நாளில் 6,600 இட்லிகள் விற்பனை


தமிழக‌த்தில் இருப்பது போலவே, பெங்களூரிலும் 'அம்மா உணவகம்' என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை கர்நாடக மாநில அதிமுக நிர்வாகி ஒருவர் தொடங்கி உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் முதல் நாளிலேயே 6,680 இட்லிகள் விற்பனையாகி பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக‌ முதல்வர் ஜெயலலிதா தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்திய 'அம்மா உணவகம்' பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த உணவகங்களில் ரூ.1-க்கு ஒரு இட்லி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, கர்நாடக மாநில அதிமுக முன்னாள் செயலாளர் கே.ஆர்.கிருஷ்ணராஜு கூறியதாவது:

1985-ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெங்களூரில் வெகுசிறப்பாக கொண்டாடி வருகிறேன். இந்த ஆண்டு அவரது 66-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகத்தை பெங்களூரில் உள்ள கலாசிபாளையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

எனக்கு சொந்தமான கட்டிடத்திலேயே இதைத் தொடங்கி உள்ளேன். இங்கு காலை 7 மணி முதல் 10.30 மணி வரை இட்லி மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் மலிவு விலை உணவகங்களைத் திறக்க வேண்டும் என வருகிற 23-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து மனு அளிக்க இருக்கிறோம் என்றார்.​

இரா.வினோத், தி இந்து  

ரூ.5 லட்சத்துக்கு கணவனின் கிட்னியை விற்ற ‘பாசக்கார’ மனைவி

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வேட்டபாளையம் மண்டலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கிருபாராவ். இவரது மனைவி கவுரிதேவி. 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

சில மாதங்களுக்கு முன்பு கவுரிதேவி, கணவர் கிருபாராவை போனில் தொடர்பு கொண்டு, எனக்கு ரூ.3 லட்சம் கடன் உள்ளது. கடன் கொடுத்தவர்கள் என்னை துன்புறுத்துகின்றனர். உங்களது கிட்னியை ரூ.5 லட்சத்துக்கு விற்றால் கடனை அடைத்து விடலாம். அதன்பிறகு நாம் சேர்ந்து சந்தோஷமாக வாழலாம் என்று கூறியுள்ளார். மனைவியின் பேச்சை நம்பிய கிருபாராவ்வும், அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கிருபாராவ் அறுவை சிகிச்சை செய்து கிட்னியை அதே மருத்துவமனையில் ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார். இந்த பணத்தை பெற்ற கவுரிதேவி தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி விட்டார். கடந்த ஜனவரி மாதம் கிருபாராவ் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வெளியே வந்தார்.

அப்போதுதான் அவருக்கு தனது மனைவி கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி விட்டார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பிரகாசம் மாவட்ட எஸ்பி சமோத்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்படி வேட்டபாளையம் போலீசாரிடம் புகார் செய்ய சென்றார். 

இந்த வழக்குக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை. நீங்கள் விசாகப்பட்டினம் போலீசாரிடம் புகார் செய்ய வேண்டும் என கூறினர். இதனால் என்ன செய்வது என்று அறியாது கிருபாராவ் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கு சென்றாலும் எனது புகாரை ஏற்று கொள்ள மறுக்கிறார்கள். 

இனியாவது எனக்கு நியாயம் கிடைக்கும்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தலைமறைவாகி உள்ள எனது மனைவியை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றார்.                                            

தினகரன்

Sunday, February 16, 2014

பள்ளி நண்பர்கள் 60 பேர் சேர்ந்து தயாரித்த படம்


பள்ளியில் படிக்கும்போது சினிமாவுக்கு வர ஆசைப்பட்ட 60 மாணவ நண்பர்கள் 30 வருடங்களுக்குபிறகு சினிமாவில் இணைந்தனர். இது பற்றி மறுமுகம் பட இயக்குனர் கமல் கூறியதாவது: 80களில் கொடைக்கானலில் ஒரே கான்வென்ட்டில் படித்த 40 மாணவர்கள் நண்பர்களாகவே இன்றுவரை நீடிக்கிறோம். பள்ளி பருவத்தில் எல்லோரும் இயக்குனர் ஸ்ரீதரின் ரசிகர்கள். ஓஹோ புரடக்ஷன் என்ற பெயரில் நாங்களே கம்பெனி தொடங்கி அதில் அவரது படங்களை நாடகங்களாக நடிப்போம்.

அன்று இணைந்த நாங்கள் 1986 முதல் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சந்தித்து வருகிறோம். ஒரு கட்டத்தில் 40 பேர் நண்பர்கள் குழுவில் மேலும் 20 பேர் சேர்ந்துகொண்டனர். 60 பேரும் இணைந்து கிரைம் டைம் என்ற படத்தை தயாரித்தோம். மலையாளத்தில் இப்படத்தை உருவாக்கினோம். படம் ஹிட்டாகாவிட்டாலும் எங்களின் சினிமா கனவு பலித்தது.தற்போது மறுமுகம் என்ற படத்தை இயக்குகிறேன்.

எங்கள் நண்பர் டீமில் இருக்கும் டேனியல் பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோ அனூப். பிரீத்தி தாஸ் ஹீரோயின். இப்படத்தை சஞ்சய் தயாரிக்கிறார். அகஸ்தியா இசை. இதுவொரு முக்கோண  காதல் த்ரில்லராக உருவாகி உள்ளது. 60 நாட்கள் படம் எடுக்க திட்டமிட்டு 30 நாட்களில் படத்தை முடித்தோம். 60 நண்பர்களின் உழைப்பும் இதில் இருக்கிறது. இவ்வாறு கமல் கூறினார்.                                                                                                        

தமிழ் முரசுFriday, February 14, 2014

வீடு இன்றி தவிக்கிறார் 101 வயது பாலிவுட் நடிகை


"பத்மவிபூஷன்' விருது பெற்றுள்ள, 101 வயதாகும், பாலிவுட் நடிகை, ஜோரா சேகல், தனக்கு சொந்த வீடு தருமாறு, டில்லி, மாநில அரசையும், மத்திய அரசையும், பல ஆண்டுகளாக கேட்டும், இது வரை அவருக்கு, வீடு கிடைக்கவில்லை. நடிகை ஜோரா சேகல், 1935ல், நடிக்கத் துவங்கினார்.

 பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ள இவர், சில ஆண்டுகளுக்கு முன் வரை, நடித்து வந்தும், சொந்த வீடு இல்லாமல், டில்லியில், தன் மகள் வசிக்கும், அடுக்கு மாடி குடியிருப்பில், பத்தாவது மாடியில் வசித்து வருகிறார். கடந்த, 2010ல், பத்மவிபூஷன் விருது பெற்ற இவர், தனக்கு சொந்தமாக, கீழ்தளத்தில் வீடு ஒதுக்கி தருமாறு, டில்லியின் முந்தைய, காங்கிரஸ் முதல்வர், ஷீலா தீட்சித்திடம், பலமுறை மனு கொடுத்தும், இது வரை வீடு கிடைக்கவில்லை. 

இதனால், ஜோரா சேகலின் மகள், கிரண் சேகல், தற்போதைய முதல்வர், "ஆம் ஆத்மி' கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவாலிடம் மனு கொடுத்துள்ளார். விரைவில் தன் தாய்க்கு, வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக, அவர் கூறியுள்ளார். 

தினமலர் 

Friday, February 7, 2014

அதிகாரம் மிக்க 50 பெண்கள்: நூயி, சாந்தா கோச்சாருக்கு இடம்


தொழில் உலகில் அதிகாரமிக்க பெண்கள் பட்டியலில் பெப்சிகோ நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி இந்திரா நூயி, ஐசிஐசிஐ நிர்வாக இயக்குநர் சாந்தா கோச்சார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஃபார்ச்சூன் நிறுவனம் தொழில் உலகில் மிகுந்த அதிகாரமிக்க பெண்கள் 50 பேரடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஜெனரல் மோட்டார்ஸ் தலைமைச் செயல் அதிகாரி மேரி பாரா முதலிடத்தில் உள்ளார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இப்பதவிக்கு வந்துள்ள முதல் பெண்மணி என்ற பெருமையும் இவரையே சாரும்.

உயர் பதவிகளுக்கு பெண்களும் வர முடியும் என்ற புதிய தளத்தை ஏற்படுத்தி அதை எட்டிப்பிடித்துள்ள பெண்களில் சர்வதேச அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் பாரா.

6 கண்டங்களில் 396 ஆலைகளில் பணிபுரியும் 2.12 லட்சம் ஊழியர்களுக்கும் தலைவராக இவர் உள்ளார்.

இந்த வரிசையில் பெப்சிகோ நிறுவனத் தலைவர் இந்திரா நூயி, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதே வரிசையில் 18-வது இடத்தில் உள்ளார் சாந்தா கோச்சார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பெண்மணிகள் இவர்களிருவரே.

பெப்சிகோ நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக உள்ள நூயி, அமெரிக்காவுக்கு வெளியே பிற நாடுகளில் பெப்சி விற்பனையை இரு மடங்காக உயர்த்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளது. நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 6,550 கோடி டாலராக (சுமார் ரூ.40.87 லட்சம் கோடி) உள்ளது. இதில் 50 சதவீதத்துக்கும் மேல் வெளிநாடுகளிலிருந்து கிடைப்பவையாகும்.

இந்தியாவில் உள்ள 2-வது பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கிக்கு தலைமையேற்றுள்ளார் சாந்தா கோச்சார். 3,588 கிளைகளுடன் 12,400 கோடி டாலர் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கிறது ஐசிஐசிஐ வங்கி.

இந்தப் பட்டியலில் ஐபிஎம் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கினி ரொமெட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார். பெட்ரோபிராஸ் தலைமைச் செயல் அதிகாரி மரியா தாஸ் கிரா சில்வா பாஸ்டர் நான்காம் இடத்தில் உள்ளார்.

ஃபேஸ்புக் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) ஷெரில் சாண்பெர்க் 11- வது இடத்திலும், யாகூ தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மரிஸா மேயர் 14-வது இடத்திலும், கூகுளின் மூத்த துணைத் தலைவர் சூசன் வொஜிகிகி 20-வது இடத்திலும் உள்ளனர்.

தி இந்து 

கள்ளக்காதல் தகராறில் பெண் போலீஸ் கொலை; கொலையாளி கைது

பெண் போலீசை கழுத்து நெரித்துக் கொலை செய்த கள்ளக்காதலனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள துலுக்கன்குறிச்சியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் சமுத்திரகனி (34). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கீழராஜகுலராமன் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றி வந்தார். ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் தெருவில் லட்சுமியின் அண்ணன் குருபாண்டியன் வசித்து வருகிறார். இவரது மகன் செந்தில்குமார் (35). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

சமுத்திரக்கனிக்கும், அத்தை மகன் செந்தில்குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்யாமலேயே வ.உ.சி. நகரில் வசித்து வந்தனர். நேற்றுமுன்தினம் மாலை இவர்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக, வாக்குவாதம், சண்டை ஏற்பட்டது. அப்போது சமுத்திரகனியின் கழுத்தை நெரித்து, செந்தில்குமார் கொலை செய்துவிட்டு வெளியே சென்றார். 

பின்னர், இரவு 10 மணிக்கு ‘மனைவி உடல்நலம் சரியில்லாமல் மயங்கி கிடக்கிறார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்‘ என ஒரு ஆட்டோ பேசி வ.உ.சி.நகர் வீட்டுக்கு செந்தில்குமார் வந்தார். இருவரும் மாடிக்கு சென்றனர். அப்போது சமுத்திரக்கனி இறந்து கிடந்தது கண்டு ஆட்டோ டிரைவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

காவல்துறையினர் விரைந்து சென்று கொலையான சமுத்திரக்கனியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார். இதில் சமுத்திரக்கனி கீழராஜகுலராமன் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றியது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரை காவல்துறையினர் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியா 

பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான இடம் வேண்டும்

சகல வசதிகளுடன் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான இடம் வேண்டும் அரசுக்கு, பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை,

ஏ.டி.எம்.வசதி உள்பட சகல வசதிகளுடன் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான இடத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு, பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலியல் தொழிலாளர்கள் கருத்தரங்கம்

இந்திரா பெண் முன்மாதிரி கல்வியாளர்கள் நலச்சங்கத்தின் (பாலியல் தொழிலாளர்கள் சங்கம்) கருத்தரங்க கூட்டம் சென்னை எழும்பூர் ‘இக்ஸா’ மையத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சங்கத்தின் தலைவர் பி.பேபி தலைமை தாங்கினார். செயலாளர் கே.கலைவாணி, பொருளாளர் பி.என்.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில் செயலாளர் கே.கலைவாணி பேசியதாவது:–

சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் சங்கத்தை சேர்ந்த 2,312 பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 1,800 பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். பாலியல் தொழிலை சட்ட விரோத தொழில் என்று சொல்வதே தவறு ஆகும். வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து தொழிலுக்கு அழைத்தால் தான் தவறு.

பாதுகாப்பான இடம்

பாலியல் தொழிலாளர்கள் தியாகராய நகர், பாரிமுனை, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் நின்று தொழில் செய்ய முடியவில்லை. போலீசார் ‘கெடுபிடி’ அதிகமாக உள்ளது. இரவுநேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

எனவே பாலியல் தொழில் செய்வதற்காக அத்தியாவசிய வசதிகளான மின்சாரம், குடிநீர், கிளினிக், பெண் காவலர் வசதி, தங்கும் வசதி, கேண்டீன், போன் வசதி, பண பரிமாற்றத்துக்காக வங்கி, மற்றும் ஏ.டி.எம். வசதி, போக்குவரத்து வசதி உள்பட சகல வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான இடத்தை அரசு வழங்க வேண்டும்.

பயிற்சிகள்

பாலியல் தொழில்புரிவதற்கு பாதுகாப்பான இடம் ஒதுக்கப்படுவதன் மூலமாக காவல்துறை பிரச்சினை இருக்காது. மக்களால் இடையூறு இருக்காது. வாடிகையாளர்கள் ஏமாற்ற முடியாது, தரகரால் பிரச்சினை இருக்காது. குரூப் பாலியல் தொழில் இருக்காது.

பாலியல் தொழிலாளர்களுக்காக வழக்கறிஞர் உதவிகள் மையம், சுயதொழில் செய்வதற்கு கைத்தொழில் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி மையத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு கே.கலைவாணி கூறினார்.

ஒன இந்தியா 

Thursday, February 6, 2014

ஆபாச நடனத்தைக் கண்டு களித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள்


உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் வன்முறைச் சம்பவம், சமாஜ்வாதி அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய நிலையில், தற்போது, அக்கட்சியின் தலைவர்கள் ஆபாச நடனத்தை கண்டு களித்த புகைப்படம் வெளியாகி மேலும் அதிருப்தியை அதிகரிக்க வைத்துள்ளது.

அகிலேஷ் யாதவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சித்ரஞ்சன் ஸ்வரூப் மற்றும் உள்ளூர் சமாஜ்வாதி தலைவர்கள், ஒரு பெண்ணின் ஆபாச நடனத்தை கண்டு களிப்பதும், கூட்டத்தில் இருப்பவர்கள் அப்பெண் மீது 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுவதும் புகைப்படங்களாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தினமணி

அமெரிக்கா : பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றம்


காப்பீட்டுப் பணத்துக்கு ஆசைப்பட்டு, ஒருவரைத் திருமணம் செய்து, அவரைக் கொன்று கால்வாயில் வீசிய சுசன்னா பாசோ (59) என்ற பெண்ணுக்கு அமெரிக்காவில் விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

லூயிஸ் முசோ என்ற நபரை, 1998ஆம் ஆண்டு, அவரது காப்பீட்டுத் தொகைக்காகக் கொலை செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவரது மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுசன்னா பாசோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவில் 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 1400பேரில், 14வது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைவல்யாவை மணந்தார் நடிகர் கிருஷ்ணா


இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பியும், தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகரின் மகனுமான நடிகர் கிருஷ்ணாவுக்கு இன்று காலை கோவையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

கற்றது களவு, அலிபாபா, கழுகு ஆகியப் படங்களில் நாயகனாக நடித்தவர் கிருஷ்ணா. தற்போது 'வானவராயன் வல்லவராயன்', 'விழித்திரு', 'இல்ல ஆனாலும் இருக்கு', 'வன்மம்' ஆகியப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கிருஷ்ணாவுக்கும், கோவையை சேர்ந்த ரங்கநாதன் – வாசுகி தம்பதியரின் மகள் கைவல்யாவுக்கும் இருவீட்டார் சார்பில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் திருமணம் இன்று காலை கோவை ஜெனீஸ் கிளப்பில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற உள்ளது. கிருஷ்ணாவின் மனைவி கைவல்யா சாஃப்ட்வேர் இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி