Saturday, November 30, 2013

இலங்கையில் பத்திரிகையாளர் மையத்தில் தீ விபத்து

இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் மையம் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சாம்பலானது.

"மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது, தற்போது தீ அணைக்கப்பட்டு விட்டது' என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் அஜீத் ரோஹானா தெரிவித்தார்.

"தீ விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. அதேசமயம், உள்ளே இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து விட்டன' என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை முன்னாள் அதிபர் பண்டாரநாயகே நினைவாக அமைக்கப்பட்டிருந்த இந்த மையத்தில், காமன்வெல்த் மாநாடு நடைபெற்றபோது, வெளிநாட்டுச் செய்தியாளர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.


நன்றி ;- தினமணி , 01-12-2013

ஆருஷி கொலை வழக்க்கு : கண்ணீர்விட்டு அழுத மருத்துவத் தம்பதிகள் !


டாக்டர் ராஜேஷ் தல்வார் – நுபுர் தல்வார்

ஆருஷி கொலை வழக்கில், அவரது பெற்றோரும் மருத்துவத் தம்பதிகளுமான டாக்டர் ராஜேஷ் தல்வார் – நுபுர் தல்வார் ஆகியோர் குற்றவாளிகள் என காஜியாபாத்தின் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

தங்கள் வீட்டில் பணிபுரிந்த ஹேமராஜ் கொலையிலும் இவர்களே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, போலீஸாரால் கைது செய்யப்பட்ட ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் ஆகியோர் காஜியாபாத்திலுள்ள தாஸ்னா சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, மருத்துவத் தம்பதிகள் இருவரும் கண்ணீர்விட்டு அழுததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வெளியாவதையொட்டி, காஜியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 3 டி.எஸ்.பி.க்கள், 90 காவலர்கள் காசியாபாத் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

ஆருஷி கொலை வழக்கின் பின்னணி

டெல்லிக்கு மிக அருகாமையில் உள்ள நொய்டாவின் மருத்துவத் தம்பதிகள் டாக்டர் ராஜேஷ் தல்வார் – நுபுர் தல்வார். இவர்களது ஜல்வாயு விஹார் வீட்டில் 2008 மே 13-ல் இவர்களது ஒரே மகளான ஆருஷி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்த சம்பவம் நடந்தவுடன் அங்கு வந்த நொய்டா போலீஸ், முறையாக விசாரிக்காமல் அவரது வீட்டு வேலைக்காரனான ஹேமராஜ் எனும் நேபாளிதான் கொலையாளி எனவும், அவரை தேடி வருவதாகவும் அவசரக் கோலத்தில் அறிவித்தது. மறுநாள், தல்வார் வீட்டின் மேல் மாடிக் கதவை திறந்து பார்த்தபோது அங்கு ஹேமராஜ் இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

இந்த சம்பவம் நடந்த இரவில் தனது மனைவி நுபுர் தல்வாருடன் ராஜேஷ் வீட்டில் இருந்ததால், உபி போலீசாரின் அடுத்த சந்தேகம் அவர் மீது திரும்பியது. இவருடன் பணியாற்றும் மற்றொரு மருத்துவரும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருமான அனிதா துரானிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதை மகள் ஆருஷி எதிர்த்ததால் கொலை செய்யப்பட்டார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், மே 23, 2008-ல் ராஜேஷ் தல்வார்தான் அவரது மகள் அரூஷியைக் கொன்றார் என கைது செய்து செய்யப்பட்டார். பின்னர் 50 நாட்களுக்கு பின் ஜாமீன் பெற்றார்.

அதன் பிறகு ஜூன் 1, 2008-ல் சிபிஐயிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ராஜேஷ் தல்வாரின் கம்பவுண்டர் கிருஷ்ணா, பக்கத்து வீட்டு வேலைக்காரன் ராஜ்குமார் மற்றும் இவரது நண்பன் விஜய் மண்டல் ஆகியோர் ஜூன் 13-ல் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. தல்வார் தம்பதிகளுக்கும் இந்த சோதனை 2 முறை நடத்தப்பட்டது. இதிலும் சிபிஐக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆருஷி கொலையின்போது கிடைத்த தடயங்களிலும் சிபிஐயால் எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் கைவிரிக்கும் நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த மே 29, 2010-ல் காஜியாபாத்தின் சிறப்பு நீதிமன்றத்தில், ‘தடயங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாததால் வழக்கை முடித்து விட வேண்டும்’ என சிபிஐ கோரியது. இதை, நீதிமன்றம் ஏற்க மறுத்து ராஜேஷ் தல்வாரிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் சென்ற ராஜேஷ் தல்வாருக்கு பலன் எதுவும் கிடைக்காமல் தொடர்ந்த விசாரணையின் தீர்ப்பு இன்று வெளியானது.

வழக்கின் ஓட்டைகள்

சம்பவம் நடந்த மறுநாள் மெத்தை தலையணை போன்றவைகளை மட்டும் கைப்பற்றி விட்டு, அவசரகோலத்தில் ஆருஷி கொலை செய்யப்பட்ட இடம் கழுவிவிடப்பட்டிருந்தது. ஆருஷி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டாரா என்பதைஅறிய, அவரது பிறப்பு உறுப்பிலிருந்து ஆதாரங்களாக எடுக்கப்பட்ட கண்ணாடி ஸ்லைடுகள் பரிசோதனை சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது இடையில் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. இதை சம்பந்தப்பட்ட ஆய்வகத்தின் அதிகாரிகளும் உறுதி செய்தனர்.

சுமார் ஐந்தரை வருடத்திற்கு முன் நடந்த கொலையின் வழக்கில் சிபிஐ தரப்பில் 39 சாட்சிகளும் எதிர்தரப்பில் வெறும் 7 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். வழக்கை துவக்கத்தில் விசாரித்த சிபிஐயின் குழு மாற்றப்பட்டு, சிபிஐ இணை இயக்குநர் ஜாவேத் அகமத் தலைமையில் மற்றொரு குழு அமர்த்தப்பட்டது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

தி இந்து

6-பேர் பலி. கூடங்குளம் அணு உலைப் பாதுகாப்பு ?

 

 பாதுகாக்கப்பட்ட பகுதியான கூடங்குளம் அணு உலை அருகே, இடிந்தகரை சுனாமி காலனியில், நாட்டு வெடிகுண்டு வெடித்து, 6 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் அணு உலை பாதுகாப்பு கேள்விக்குறி யாகியுள்ளது. இந்தக் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகளைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில், அணு உலை அமைந்திருக்கும் இடத்தி லிருந்து 2 கி.மீ. தொலைவில், இடிந்தகரை சுனாமி காலனி அமைந்துள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடை பெறும் போராட்டங்களில், சுனாமி காலனி மக்களும் பங்கெடுத்தனர். இப்போராட்டம் நடைபெற்றுவந்த நேரத்தில், அருகிலுள்ள கூத்தன்குழி கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதம், இரு தரப்பு மீனவர்கள் மோதல் உச்சத்தை அடைந்தது. இதனால், ஒரு தரப்பினர் அங்கிருந்து வெளியேறி, இடிந்தகரை சுனாமி குடியிருப்பு பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.

கூத்தன்குழி மீனவர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதும், அவை அவ்வப்போது வெடித்து உயிர் பலி, காயங்கள் நேருவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன், சுனாமி காலனிக்கு வந்து குடிபெயர்ந்தவர்களும் வெடிகுண்டுகள் தயாரிக்கக் கூடும் என்று அங்குள்ளவர்கள் அஞ்சினர்.

மாதா பெயரில் சத்தியம்

இதுகுறித்து ஊர் கமிட்டி நிர்வாகிகள் விவாதித்து, வெடிகுண்டு தயாரிக்க கூடாது என, கூத்தன்குழி பகுதியிலிருந்து வந்தவர்களிடம், மாதா கோயிலில் சத்தியம் வாங்கிய பிறகே, சுனாமி காலனியில் அவர்களை தொடர்ந்து தங்கவைத்தனர். ஆயினும், அங்கு வெடிகுண்டு தயாரிப்பது, மிகப்பெரிய தொழிலாகவே தொடர்ந்தது.

கூத்தன்குழி கிராமத்தை சேர்ந்த ஜெனி என்பவரது பெயரிலுள்ள வீட்டில், செவ்வாய்க்கிழமை மாலை சிலர், நாட்டு வெடிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தயாரான வெடிகுண்டுகளை வேறு சிலர் பெட்டிகளில் அடுக்கி, நாட்டுப்படகு மூலம், கூத்தன்குழிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில், அந்த வீடு தரைமட்ட மானது. அருகிலுள்ள ரோஸ்லின், ராணி, மரிய அல்போன்ஸ், அன்பரசி ஆகியோரது வீடுகளும் சேதமடைந்தன.

6 பேர் உயிரிழப்பு

வெடிகுண்டுகள் வெடித்து நாலாபுறமும் கற்கள் சிதறிய வேகத்தில், அருகில் பீடி சுற்றிக்கொண்டிருந்த, சகாயம் மனைவி ரோஸ்லின் (35), அவரது குழந்தைகள் சுபிசா (10), சுபிசன் (2) தூக்கி வீசப்பட்டனர். இதில் சுபிசாவும், சுபிசனும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். ரோஸ்லின் பலத்த காயமடைந்தார்.

இதுபோல், வெடிகுண்டுகள் வைக்கப் பட்டிருந்த வீட்டிலிருந்த கூத்தன்குழியை சேர்ந்த யாகப்பன்(32), மோசஸ் மகன் வளன் (27), சந்தானசூசை மகன் மகிமைராஜ் (31) ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். அவர்களில் வளன், மகிமைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கால்கள் துண்டிக்கப்பட்ட யாகப்பன், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேலும், சுனாமி காலனியை சேர்ந்த தொம்மை மனைவி பிரமிளா (35) என்பவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். வெடிகுண்டுகள் வெடித்த போது, அவ்வழியாக சென்றுகொண்டிருந்த சந்தியாகு மகன் விஜயன்(18), இயேசு

மரிய சூசை (45) பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மெட்டல் டிடெக்டர் சோதனை

திருநெல்வேலியிலிருந்து, மோப்ப நாயுடன் வந்திருந்த வெடிகுண்டு நிபுணர்கள், இடிபாடுகள் காணப்பட்ட பகுதியில் மெட்டல் டிடெக்டர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைகளில் அடைக்கப்பட்டிருந்த வெடி

மருந்து பொருட்கள் சிக்கின. 20 மீட்டர் தொலைவில் கிடந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது. வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட வீடுகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

கோரக்காட்சிகள்

வெடிகுண்டுகளும், வெடிப்பொருட்க ளும் ஒருசேர வெடித்ததால் அந்த காலனி பகுதியே நிலநடுக்கத்தால் அதிர்ந்தது போன்று உணர்ந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இடிபாடுகளுடன் இறந்தவர்களின் உடல் பாகங்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

அணு உலைக்கு ஆபத்து

இடிந்தகரையில் நடந்த இச்சம்பவம் மூலம், அங்கு வெடிகுண்டுகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய, கூடங்குளம் அணு உலைக்கு, 2 கி.மீ., தொலைவிலேயே வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதும், அவை வெடித்துச் சிதறியிருப்பதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை காலமாக, இதை எப்படி போலீசார் கட்டுப்படுத்த தவறினர் என்பதும், இதனால், அணு உலை பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதும், அந்தப் பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

நன்றி ;- தி இந்து ,  28 - 11 - 2013

நக்சல் தாக்குதல்: மத்திய ரிசர்வ் படையினர் 4 பேர் பலி


சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் புதன்கிழமையன்று காலை நடத்திய திடீர் தாக்குதலில், மத்திய ரிசர்வ் படை போலீசார் 4 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிஜப்பூர் மாவட்டம் முர்கினர் மற்றும் சேராமுங்கி இடையிலான காட்டுப் பகுதியில், மோடக்பல் என்னுமிடத்தில், அவர்கள் சென்று கொண்டிருந்தபோது நக்சல்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுபற்றிய தகவலின் பேரில், கூடுதல் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.                                                                                     

நன்றி :- தினமணி ,  28 - 11 -2013                                                  


மன்னவன் ஆணைக்கு மாற்று இல்லை - பழமொழி ( 311 ) இனிப்பு வழங்கிக் கொண்டாடும் பக்தர்கள்.



சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக புதுவை நீதிமன்றத்தில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

புதுச்சேரி நீதிமன்றத்தில் காலை 10 மணிக்கு நீதிபதி முருகன் வந்தார். முதலில் வேறு சில வழக்குகளை விசாரித்த அவர் 10.35 மணிக்கு சங்கரராமன் கொலை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட 23 பேரில் 21 பேர் மட்டுமே ஆஜராகி இருந்தனர். இதில் தில்பாண்டியன் கொலை வழக்கு ஒன்றில் தலைமறைவாகி விட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. சில்வஸ்டர் ஸ்டாலின் பஸ்சில் வந்து கொண்டிருக்கிறார் என அவரது வழக்குரைஞர் கூறியதால் நீதிபதி முருகன் தீர்ப்பை சிறிது நேரம் ஒத்தி வைத்தார். பின்னர் 10.50 மணிக்கு மீண்டும் நீதிபதி வந்து அமர்ந்தவுடன் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராயினர்.

நீதிமன்ற வளாகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் குழுமி இருந்தனர்.

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான சாதனங்களை கொண்டு வந்திருந்தன. தீர்ப்பு முடிந்து ஜயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் வெளிவந்தவுடன், அவர்களிடம் பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் அனைவரும் முண்டியடித்துச் சென்றனர். ஆனால் சுவாமிகள் இருவரும் எதுவும் கூறாமல் தங்கள் வாகனங்களில் ஏறிச் சென்றுவிட்டனர்.

சுவாமிகள் திருப்பதி செல்ல உள்ளார் . முன்னதாக திருச்ஸெந்தூர் செல்வார். மெள ந விரதத்துடன் ஜெபத்திலும் ஈடுபட்டுள்ளார்  என சிலர் தெரிவித்தனர்.


ஜயேந்திரர் மெüனவிரதம்: சங்கராச்சாரியார்கள் ஜயேந்திரர், விஜயேந்திரர் முதல் தளத்திலுள்ள நீதிமன்றத்தின் அலுவலக அறையில் வழக்கம்போல் காத்திருந்தனர். யாருடனும் அவர்கள் காலையில் பேசவில்லை. அனைவரும் விடுதலை என அறிவிக்கப்பட்ட உடன் விஜேயந்திரர் நீதிமன்ற பாதை வழியாக வெளியே சென்றார். ஜயேந்திரர் வழக்கம் போல் நீதிமன்ற அலுவலக பாதை வழியாக வெளியே வந்தார்.

அப்போது அவரிடம் கருத்தை அறிய முயன்ற போது, மிகவும் சோர்வுடன், காணப்பட்டதால் கையை மட்டும் அசைத்தார். அவருடன் வந்தவர்கள் மௌனவிரதம் இருப்பதால் பேச இயலாது என தெரிவித்தனர். அதற்குள் ஏராளமானோர் அவரை சூழத்தொடங்கினர்.

முதல் தளத்தில் இருந்து லிப்ட் வழியாக ஜயேந்திரர் தரைதளத்துக்கு வந்தார். நடக்கவே சிரமப்பட்ட அவர் பக்தர்கள், வழக்குரைஞர்கள் அமைத்த வளையத்தினுள் நடந்தவாறு காரில் ஏறி புறப்பட்டார்.



முக்கிய சாட்சி ரகு

ரவி சுப்பிரமணியன் : காஞ்சிபுரத்திலிருந்து அப்ரூவர் ரவிசுப்பிரமணியன்  14 பேர் கொண்ட காவலற்குழு பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டிருந்தார்

அப்ரூவர்  ரவிசுப்பிரமணியம்
------------------------------------------------------------------------------------------------------------------------

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக அவரது மகன் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சங்கரமடத்தின் பீடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரரின் சகோதரர் ரகு, தாதா அப்பு உள்ளிட்ட 23 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு புதுவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி முருகன், 23 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இத்தீர்ப்பு குறித்து காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரராமனின் மகன் ஆனந்த்சர்மா கூறியது: எனது தந்தையின் கொலை வழக்கில் வழங்கப்பட்டத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 23 பேரையும் விடுதலை செய்தது மிகவும் வேதனையாக உள்ளது. அப்படி என்றால், எனது தந்தை தானே வெட்டிக் கொண்டு இறந்தாரா? இந்த கொலை வழக்குத் தொடர்பாக விசாரித்த போலீஸார், சங்கர மடத்தில் நடக்கும் தவறு குறித்து எழுதிய கடிதங்களை கைப்பற்றிச் சென்றனர்.

அந்த சாட்சியங்கள் என்ன ஆனது? கடவுள் மேல் நம்பிக்கை உள்ளது. நிச்சயம் ஒருநாள் நல்லத் தீர்ப்பு வரும். மேல்முறையீடு செய்வது குறித்து கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றார் ஆனந்த்சர்மா.
 
 தீர்ப்பு  வழங்கியவுடன் புதுச்சேரி நீதிமன்றத்தில்  கற்பூரம் 
ஏற்றி வழிபடும் மடத்தின் ஆதரவாளர்கள் 

கற்பூரம் ஏற்றி வழிபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட வழக்குரைஞர்கள் 


புதுவை நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்புக்கு ஆதரவாக சிலர் தேங்காய் உடைத்து வழிபட்டதாலும், எதிராக சிலர் கண்டன கோஷமிட்டதாலும் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கின் விசாரணை கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து புதுவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை வழங்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்படாததால், குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

பகல் 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதும், சங்கராச்சாரியார் சுவாமிகள் தரப்பினர் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்து காரில் வேகமாக புறப்பட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வாயிலில் திரண்ட சங்கர மடத்தின் ஆதரவாளர்கள், நீதி வென்றதென கோஷமிட்டனர். மறுபுறம் வழக்குரைஞர்களில் சிலர், நீதி கிடைக்கவில்லை என கண்டன கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேங்காய் உடைத்து வழிபாடு: நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த தென்னிந்திய புரோகிதர்கள் சங்கச் செயலர் ஆ.செ.நரசிம்ம அய்யர் தலைமையிலான மடத்தின் ஆதரவாளர்கள் சிலர், நீதி தேவதை சிலைக்கு முன் திடீரென சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

அவர்கள் கூறும் போது: சங்கராச்சாரியார் சுவாமிகள் மீது வீண் பழி சுமத்தி வழக்கு நடைபெற்றது. இதில் இரு சுவாமிகளுக்கும் நீதி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பால் சங்கரமட பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறினர். இவர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டதை, வழக்குரைஞர்கள் சிலர் கண்டித்தனர். இதனையடுத்து அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

கண்டன கோஷம்: நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்குரைஞர்கள் ராமன், வேல்முருகன் உள்ளிட்டோர், இந்த வழக்கில் நீதி கிடைக்கவில்லை என கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர்.

அவர்கள் கூறியது: சங்கரராமன் கொலை வழக்கில் நீதி கிடைக்கவில்லை. சங்கரராமன் குடும்பத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஆவேசமாகக் கூறினர். இதனால் புதுவை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

---------------------------------------------------------------------------------------------------------------
 சங்கராச்சாரியார்கள் விடுதலை: காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

காமாட்சி அம்மன் கோயில் அருகே இனிப்பு வழங்கிக் கொண்டாடும் பக்தர்கள்.

காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து சங்கராச்சாரியார்கள் விடுதலையானதைத் தொடர்ந்து காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார்கள் உள்பட 23 பேரையும் புதுவை நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சியம்மன் விஸ்வரூப தரிசன டிரஸ்ட் சார்பில் காமாட்சியம்மன் கோயில் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து கோயில் குருக்கள் நடராஜ சாஸ்திரிகள் கோயில் முன்பு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து பகல் 12 மணி அளவில் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இது குறித்து நடராஜ சாஸ்திரிகள் செய்தியாளர்களிடம் கூறியது: "சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார்கள் விடுதலை ஆனது மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 2004-ஆம் ஆண்டு தீபாவளியன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 8 ஆண்டுகளாக நடந்த வந்த இந்த வழக்கில் புதன்கிழமை நல்லத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இன்றுதான் எங்களுக்கு உண்மையிலேயே தீபாவளி' என்றார்.

                                                                       
நன்றி ;- தினமணி ,  28 - 11 - 2013                                                        

சங்கரராமன் கொலை வழக்கு



     புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு
  வெளியே வரும் காஞ்சி சங்கராச்சாரியார் 
ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். 
                                            விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சுந்தரேசன், ரகு உள்பட குற்றம் சாட்டப்பட்ட 23 பேரையும் புதுவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது.

கொலைக்கான போதிய ஆதாரங்களை அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி தலைமை நீதிபதி சி.எஸ்.முருகன், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதன்கிழமை உத்தரவிட்டார்.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவரை மர்ம கும்பல் கோயில் அலுவலகத்திலேயே கடந்த 3.9.2004-ல் வெட்டிக் கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பியது.

இதுதொடர்பாக கோயில் கணக்காளராக இருந்த கணேஷ், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த மோகன்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

25 பேர் கைது: இக்கொலை தொடர்பாக, காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், என்.சுந்தரேசன், கே.ரகு, கே.ஜி.கிருஷ்ணசாமி என்ற அப்பு, கதிரவன், ரஜினிகாந்த் என்ற சின்னா, அம்பி என்ற அம்பிகாபதி, பாஸ்கர் என்ற மாட்டு பாஸ்கர், கே.எஸ்.குமார், ஆனந்தகுமார், அனில் என்ற அனில்குமார், மீனாட்சி சுந்தரம் என்ற சுந்தர், ஆர்.டி.பழனி, ரவி என்ற குருவி ரவி, ஆறுமுகம், பாண்டியன் என்ற தில் பாண்டியன், சதீஷ், தேவராஜ், அருண், ஆறுமுகம், சேகர், சில்வஸ்டர் ஸ்டாலின், செந்தில்குமார், ரவி சுப்பிரமணியன் ஆகிய 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறி விட்டார். ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரையும் முக்கியக் குற்றவாளிகளாக போலீஸார் வழக்கில் கூறியிருந்தனர்.

1,873 பக்கக் குற்றப்பத்திரிகை:

மொத்தம் 1,873 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 370 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். 712 ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன.

வழக்கு புதுவைக்கு மாற்றம்:

செங்கல்பட்டில் உள்ள மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கவிருந்த நிலையில் தமிழகத்தில் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறாது எனக் கூறி சங்கராச்சாரியார் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர்.

உச்சநீதிமன்ற ஆணையின்படி புதுவை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

கடந்த 28.10.2005-ல் இருந்து 8 ஆண்டுகளாக புதுவை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. மொத்தம் 370 சாட்சிகளில் 187 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டோரில் கதிரவன் என்பவர் சென்னையில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

83 பேர் பிறழ் சாட்சியம்: அப்ரூவர் ரவி சுப்பிரமணியன், சங்கரராமன் மனைவி பத்மா, மகள் உமா மைத்ரேயி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் மூவர் உள்பட 83 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை தற்போது நிறைவடைந்து இவ்வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அனைவரும் விடுதலை: சங்கரராமன் கொலை வழக்கு அரசுத் தரப்பில் முறையாக நிரூபிக்கப்படவில்லை. இதனால் அனைவரையும் விடுதலை செய்கிறேன் எனக்கூறி தலைமை நீதிபதி முருகன் தீர்ப்பு வழங்கினார்.

மேல்முறையீடு: அரசு முடிவு செய்யும்

சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக மாநில அரசு முடிவு செய்யும் என சிறப்பு அரசு வழக்குரைஞர் பி.தேவதாஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 23 பேரை விடுதலை செய்து புதுவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சிறப்பு வழக்குரைஞர் தேவதாஸ் கூறியதாவது: வழக்கில் அனைவரையும் விடுதலை செய்தது திருப்தி தரவில்லை. இவ்வழக்கு தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக அரசுத் தரப்பு கடினமாக பாடுபட்டது.

இவ்வழக்கில் அரசுத் தரப்பைச் சேர்ந்த 83 சாட்சியங்கள் பிறழ் சாட்சியம் அளித்தனர். பிறழ் சாட்சியம் தொடர்பாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை மேற்கோள் காட்டினோம். ஆனால் அதை நீதிபதி ஏற்கவில்லை. இதுதொடர்பாக அறிக்கை தயார் செய்து புதுவை அரசிடம் அளிப்போம்.

அப்ரூவர் ரவிசுப்பிரமணியம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பொய் சாட்சியம் அளித்தது தொடர்பாக பின்னர் தனியாக விசாரணை நடத்தப்படும். சங்கரராமன் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்வது குறித்து மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார் தேவதாஸ்.                                               

நன்றி ;- தினமணி , 27 - 11 - 2013