Sunday, November 22, 2015

பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது: வீட்டில் தூங்கி கொண்டிருந்த வாலிபர் சாவு -



சென்னை பட்டாளத்தில் பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவருடைய தாயார் படுகாயமடைந்தார்.

பட்டாளத்தில் துயரம்

சென்னை பட்டாளம் பரசுராம் தெருவை சேர்ந்தவர் ராதாபாய் (வயது 45). மகன் ராஜீ(23). சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். 

நேற்று முன்தினம் வீட்டில் ராதாபாயும், மகன் ராஜீயும் நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து ராதாபாயின் ஓட்டு வீட்டின் மேல் விழுந்தது. பயங்கர சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தினர் அலறியடித்து வெளியே வந்தனர். ராதாபாயின் வீட்டின் மீது சுவர் இடிந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், பெரம்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ராதாபாயையும், ராஜீயையும் மீட்கும் முயற்சியில் இறங்கினர். 

ராஜீ பிணமாக மீட்பு

ஆனால், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ராஜீ மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய தாயார் ராதாபாயை பலத்த காயத்துடன் தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ராஜீவின் பிணமும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இடிபாடுகளால் வெளி வர முடியாமல் சிக்கி தவித்த அதே வரிசையில் வீடுகளில் வசித்து வரும் ஜெகநாதன், கோவிந்தம்மாள், சரஸ்வதி, கவிதா, மேனகா, உமாபதி, ரகு, பாக்கியராஜ், சீனிவாசன், ருக்மணி, பாலாஜி ஆகிய 11 பேரையும் தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

போலீசார் விசாரணை

சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:-

இடிந்து விழுந்த வீடு மீது அப்பகுதியில் வசிக்கும் சகோதரர்-சகோதரிகளுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது. இதுதொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் பாதி இடிக்கப்பட்ட நிலையில் அந்த வீடு இருந்துள்ளது. 

மழையால் அந்த வீடு மிகவும் சேதமடைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில் கட்டிடத்தின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளர்கள் சிலர் கூறும்போது, ‘ ராதாபாயும்-அவருடைய கணவரும் திருமணமான சிறிது காலத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். 

ராதாபாய் வீட்டு வேலை செய்து ராஜீவை படிக்க வைத்தார். ராஜீவுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிகளையும் மேற்கொண்டார். தனது வீட்டை விற்று விட வேண்டும் என்று ராதாபாய் எண்ணினார். ஆனால் அதற்குள் இந்த விபரீத சம்பவம் நடந்து விட்டது.’ என்றனர்.
நன்றி :- தினத்தந்தி

No comments:

Post a Comment