Wednesday, November 25, 2015

நாமக்கல்லில் பள்ளி வளாகத்தில் மது அருந்தியதாக 4 மாணவிகள் நீக்கம்


Image result for teenage girls drinking alcohol in class rooms clip arts in india

நாமக்கல் அரசுப் பள்ளியில் வளாகத்திலேயே மது அருந்தியதாக 4 மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 4 மாணவிகள் தேர்வு அறையில் மது அருந்திய நிலையில் இருந்ததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். அந்த மாணவிகளுடன் இருந்த மேலும் 3 மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவிக்காமல் மறைத்ததால் நீக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த 21-ம் தேதி நடந்துள்ளது.

திருச்செங்கோடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 2,500 மாணவிகள் பயில்கின்றனர்.

பள்ளியில் கடந்த 16-ம் தேதி தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கனமழை காரணமாக அன்று தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மறுதேர்வு நவம்பர் 21-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 21-ம் தேதி கணினி அறிவியல், அறிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்றும் மாணவிகள் தேர்வு எழுத வருமாறும் பள்ளி அறிவுறுத்தியிருந்தது.

காலை 8.30 மணிக்கு மாணவிகள் பள்ளிக்கு வரத் துவங்கினர். அப்போது ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. பிளஸ் 1 மாணவிகள் சிலர் தாங்கள் கொண்டுவந்திருந்த மது பாட்டிலைத் திறந்து அதில் குளிர்பானத்தை கலந்து அருந்தியுள்ளனர். சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மாணவிகள் தேர்வு அறைக்குச் சென்றுள்ளனர். தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பாளர் மாணவிகள் நிலையைக் கண்டு அதிர்ந்துபோய் தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணியிடம் தெரிவித்தார். உடனடியாக பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து பள்ளி வளாகத்தில் மது அருந்தியதாக 4 மாணவிகளும், அதற்கு துணை போனதாக 3 மாணவிகளும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். கடந்த சனிக்கிழமை 4 மாணவிகளுக்கும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற மூன்று மாணவிகளின் பெற்றோர்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை வாங்கவில்லை.

இது தொடர்பாக பள்ளியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சி.இ.ஓ எஸ்.கோபிதாஸ் விசாரணை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியைகளிடம் விசாரணை மேற்கொண்டார்.

இன்று பள்ளியில் சி.இ.ஓ. விரிவான விசாரணை மேற்கொள்கிறார். ஆசிரியைகள், மற்ற மாணவிகள், நீக்கப்பட்ட 7 மாணவிகளிடமும் விசாரணை செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மூன்றாவது சம்பவம்:

கடந்த ஆண்டு திருச்செங்கோடு அரசு ஆண்கள் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் பள்ளி விழாவில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக நீக்கப்பட்டனர். கடந்த ஜூலையில் மாணிக்கம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற பிளஸ் 1 மாணவர்கள் 4 பேர் நீக்கப்பட்டனர்.

Keywords: பள்ளி வளாகம், மது அருந்தியது, 4 மாணவிகள் நீக்கம்
Topics: தமிழகம்|

தி   இந்து

No comments:

Post a Comment