Friday, November 20, 2015

மதுரையில் கர்ப்பிணியைக் கொன்று நகைகள் கொள்ளை


மதுரையில் கர்ப்பிணியைக் கொன்று நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை சின்னசொக்கிகுளம் பழைய அக்ரஹாரத்தெருவைச் சேர்ந்த பொறியாளர் ஜெயக்குமார்.  இவருக்கும், தல்லாகுளத்தைச் சேர்ந்த பவித்ராவுக்கும்(23) கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சில வாரங்களில் ஜெயக்குமார் துபை சென்றுவிட்டார்.

பவித்ரா, தனது மாமியார் மின்வாரிய ஊழியரான ஜெயந்தியுடன் வசித்து வந்தார்.  அலுவலகத்துக்கு ஜெயந்தி இன்று சென்றுவிட்டார். பவித்ரா வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலை 4 மணிக்கு ஜெயந்தி, செல்லிடப்பேசியில் பவித்ராவை அழைத்துள்ளார். ஆனால் பதில் இல்லாததைத் தொடர்ந்து, கீழ் வீட்டில் உள்ளவர்களுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அவர்கள் மாடிக்குச் சென்று பார்த்துள்ளனர். அதில் பவித்ரா கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து ஜெயந்திக்கு தெரிவித்துள்ளனர்.

 தகவலின்பேரில் தல்லாகுளம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். தேங்காய்த்துருவியால் கழுத்தில் குத்தியும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும் பவித்ரா கொல்லப்பட்டுள்ளார் என்றும், அவர் அணிந்திருந்த 7 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மாநகராட்சி அலுவலகம் வரை சென்றது. கர்ப்பிணியான பவித்ரா டிசம்பர் மாதம் கணவருடன் துபைக்கு செல்ல விமானடிக்கெட் எடுத்து இருந்ததாகவும் போலீஸார்  தெரிவித்தனர்..


No comments:

Post a Comment