Wednesday, September 17, 2014

அஸ்ஸாம் முன்னாள் டிஜிபி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

சங்கர் பரூவா

அஸ்ஸாம் மாநில முன்னாள் டிஜிபி சங்கர் பரூவா, துப்பாக்கியால் சுட்டு புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
சாரதா நிதி நிறுவன மோசடியில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, அஸ்ஸாமில் பாதுகாப்பு அளித்ததாக எழுந்த புகாரில், இவரை சி.பி.ஐ. கண்காணித்து வந்தது.
இதுகுறித்து குவாஹாட்டி நகர மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர் ஏ.பி. திவாரி புதன்கிழமை தெரிவித்ததாவது:
துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் உள்ளூர் மருத்துவமனைக்கு பரூவா கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆகையால் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க இயலாது. விசாரணை முடிவடைந்த பிறகே, முழுத் தகவலும் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.
கடந்த வாரம் நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் சங்கர் பரூவா அனுமதிக்கப்பட்டார். நீண்ட சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து புதன்கிழமை காலையில்தான் அவர் வீடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து பரூவாவின் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில், "மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அரை மணி நேரத்துக்குள், மொட்டை மாடிக்கு சென்ற பரூவா, கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். இதையடுத்து உள்ளூர் மருத்துவமனைக்கு அவரை உறவினர்கள் கொண்டு சென்றனர்' என்றார்.
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, அஸ்ஸாமில் சங்கர் பரூவா பாதுகாப்பு அளித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் சி.பி.ஐ. கடந்த மாதம் சோதனை நடத்தியது.
இதனால் மோசடியில் பரூவாவைத் தொடர்புபடுத்தி, ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டதால், மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தில்லியில் சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பரூவாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் இல்லை. அவருக்கு சம்மனும் அனுப்பவில்லை' என்றார்.
நன்றி : தினமணி

No comments:

Post a Comment