Saturday, September 13, 2014

கல்லூரி மாணவிகள் இருவர் மீது ஆசிட் வீச்சு: மதுரை அருகே பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் பயங்கரம்





மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடந்து சென்ற கல்லூரி மாணவிகள் மீது மர்ம நபர் ஆசிட் வீசியதில் 2 மாணவிகள் காயமடைந்தனர். அவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ள சின்ன பூலாம்பட்டியைச் சேர்ந்த உதயசூரியன் மகள் மீனா (17). இவர், திருமங்கலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த சங்கரபாண்டி மகள் அங்காளஈஸ்வரி (18), அதே கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
மாணவி முகம் கருகியது

தினமும் பேருந்து மூலம் கல்லூரிக்குச் சென்று வரும் இவர்கள், வெள்ளிக்கிழமை வழக்கம்போல வகுப்புகள் முடிந்து பகல் 2 மணியளவில் கல்லூரியிலிருந்து திருமங்கலம் பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த மாணவிகள் பிரியா, புவனா, சூரியா உள்ளிட்டோரும் சென்றனர்.

பெருமாள்கோயில் அருகே சென்றபோது குறுகிய தெருவில் இருந்து சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் மாணவிகளுக்கு எதிரே நடந்து வந்தார்.

மாணவிகளை நெருங்கி வந்தபோது அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து மாணவிகளை நோக்கி வீசிவிட்டு தப்பியோடி விட்டார். இதில், மீனாவுக்கு முகத்தின் வலதுபுறம், தோள்பட்டை, வயிறு உள்ளிட்ட உறுப்புகள் கருகின. மேலும், ஆசிட் சிதறி தெறித்ததில் அருகில் சென்ற அங்காள ஈஸ்வரிக்கும் தோள்பட்டை, கைகள் வெந்தன.

சந்தேக நபரிடம் விசாரணை

ஆசிட் வீச்சால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் கூச்சலிட்டபடியே அங்கிருந்து பேருந்து நிலையம் நோக்கி ஓடினர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், மாணவிகளை தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து எஸ்பி விஜயேந்திர பிதாரி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
அப்போது ஆசிட் வீசிய நபர் பிரவுன் கலர் சட்டை மற்றும் பேன்ட் அணிந்திருந்ததாக தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அதே போல உடையணிந்திருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். ஆனால், அவர் தனக்கும், ஆசிட் வீச்சுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார்.

எனினும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிரமணியன், தென் மண்டல ஐ.ஜி அபய்குமார் சிங், மதுரை சரக டிஐஜி ஆனந்த்குமார் சோமானி, மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர், துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா உள்ளிட்டோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து 2 மாணவிகளையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதுபற்றி ஐஜி அபய்குமார்சிங் கூறும்போது, ‘மாணவிகள் கல்லூரியிலிருந்து திரும்பியபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆசிட் வீசிச் சென்றுள்ளார்.

பகல் நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் கண்டிப்பாக ஏதாவது தடயம் கிடைக்கும். இதுபற்றி எஸ்பி சம்பவ இடத்தில் விசாரித்து வருகிறார். 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.

சிறப்பு மருத்துவக் குழு…

மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிர மணியன் கூறும்போது, ‘மாணவி களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் மாணவிகளைக் கண்காணித்து சிகிச்சை அளிப்பர்’ என்றார்.

கண்களுக்கு பாதிப்பில்லை

அரசு மருத்துவமனை டீன் சாந்தகுமார் கூறும்போது, ‘ஆசிட் வீச்சு காரணமாக மாணவி மீனாவுக்கு 25 முதல் 30 சதவீதம் வரையிலும், மாணவி அங்காள ஈஸ்வரிக்கு 13 முதல் 15 சதவீதம் வரையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இருவருக்கும் கண் பார்வை நன்றாக உள்ளது. காயத்தின் தன்மையைப் பார்க்கும்போது வீரியம் குறைந்த ஆசிட் ஆக இருக்கலாம் எனத் தெரிகிறது்’ என்றார்.

தென் தமிழகத்தில் முதல்முறை

தென் மாவட்டங்களில், முதல் முறையாக மாணவிகள் மீது ஆசிட் வீசியுள்ள சம்பவம் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாருக்கு வைத்த குறி?

சம்பவத்தை நேரில் பார்த்த மாணவி பிரியா கூறும்போது, ‘தினமும் அரசு பஸ்சில் நாங்கள் ஒன்றாக கல்லூரி வந்து செல்வது வழக்கம். இதுவரை யாரும் எங்களிடம் தகராறு செய்ததில்லை. வெள்ளிக்கிழமை கல்லூரி முடிந்ததும் 5 பேரும் ஒன்றாக நடந்து வந்தோம். மீனாவும், அங்காள ஈஸ்வரியும் எனக்கு முன்னால் சென்றனர். அப்போது எதிரே 35 வயது மதிக்கத்தக்க, பிரவுன் நிற சட்டை அணிந்த ஒருவர் இயல்பாக நடந்து வந்தார். கையில் எதுவுமில்லை. மீனாவுக்கு அருகே வந்ததும் அந்த நபர் திடீரென ஒரு பாட்டிலை எடுத்து அவர்கள் மீது வீசினார். மீனாவும், அங்காள ஈஸ்வரியும் வலியால் அலறியபடி ஓடியதால் நாங்களும் பயத்தில் ஓடிவிட்டோம். அந்த நபர் காலி பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டு வந்த வழியாக தப்பி ஓடிவிட்டார். அவரை இதற்கு முன் நாங்கள் பார்த்ததே இல்லை. அவர் யாரைக் குறிவைத்து ஆசிட்டை வீசினார் எனத் தெரியவில்லை’என்றார்.

தந்தை இறந்த 22-வது நாளில்..

மீனா மீது ஆசிட் வீசப்பட்டதை அறிந்த அவரது தாய் முருகேஸ்வரி அரசு மருத்துவமனைக்கு ஓடி வந்தார். முகம் கருகிய நிலையில் இருந்த மகளைப் பார்த்ததும் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு முதலுதவி செய்து, வெளியே அழைத்து வந்து அமைதிப்படுத்தினர்.

அப்போது முருகேஸ்வரி, ‘இதயக் கோளாறு காரணமா கணவர் இறந்து 22 நாளுதானே ஆகுது. அந்த துயரம் போவதுக்குள்ள அடுத்து ஒன்னு வந்துருச்சே. அப்பா இறந்தா என்ன, நான் படிச்சு, வேலை செஞ்சு குடும்பத்த காப்பாத்துறேன்னு என் மக சொன்னாளே.. இப்ப அவளையும் இப்பிடி பண்ணிட்டாங்களே..’ என்று கதறி அழுதார். மேலும், ‘எங்களுக்கு எதிரிகள்னு யாருமில்ல. யார் பிரச்சினைக்கும் போக மாட்டோம். இதுக்கு முன்னாடி காலேஜ் போயிட்டு வந்தப்ப, வழியில யாரும் வம்பு இழுத்ததாகூட மீனா சொன்னதில்லை. எதுக்காக இப்பிடி பண்ணினாங்கன்னு தெரியலேயே’என்று கூறினார்.

நன்றி : தி இந்து 

No comments:

Post a Comment