Tuesday, September 2, 2014

ரூ.20 லட்சம் பணத்துக்காக கணவனை சங்கிலியால் கட்டிப்போட்ட மனைவி கைது: உடந்தையாக இருந்த மகன்களும் கைது


ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் 20 லட்சம் பணம் கேட்டு வீட்டுக்குள் நாய் சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர்.17 நாட்கள் அவரை மனிதாபிமானமற்ற முறையில் சித்ரவதை செய்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூரில் உள்ள ஸ்ரீனிவாசநகரை சேர்ந்த வெங்க டேஷ்(60). கர்நாடக‌ காவல் துறையில் உதவி காவல் ஆய்வாள‌ராக 35 ஆண்டுகள் பணியாற்றிய இவர் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். வெங்கடேஷூக்கு நாகரத்னா என்ற மனைவியும் சேத்தன், ரஞ்சன் என்ற இரு மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு ஜே.பி.நகர் அருகே 5 வீடுகள் உள்ளன.

இதன் மூலம் மாதம் ரூ. 50 ஆயிரம் வாடகை வருகிறது. மேலும் கனகபுரா அருகே இருக்கும் 5 ஏக்கர் நிலத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் கிடைக்கிறது. எம்.டெக் படித்துள்ள அவரது மூத்த மகன் சேத்தன் ஹெச்.பி. மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 

மென்பொருள் பொறியியலாளரான இளைய மகன் ரஞ்சன், இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.திருமணம் ஆகாத இருவரும் மாதம் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். ஆதலால் வெங்கடேஷ் குடும்பத்தில் பணத்திற்கு பஞ்சமில்லை.

பணத்துக்காகச் சண்டை

வெங்கடேஷ் ஓய்வு பெற்றதில் இருந்து வீட்டில் பணம் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடந்த ஜூலை மாத இறுதியில் அவருக்கு ஓய்வுக்கால நிதியாக ரூ.20 லட்சம் கிடைத்தது. இந்தப் பணத்தில் இன்னொரு வீடு வாங்க அவரது மனைவியும் மகன்களும் விரும்பியுள்ளனர். அதற்கு வெங்கடேஷ் மறுத்துள்ளார்.

கடந்த மாதம் 11-ம் தேதி இரவு ரூ.20 லட்சம் பணத்தை வழங்கும்படி வெங்கடேஷிடம் மனைவியும் மகன்களும் கேட்டுள்ளனர். இப்போதைக்கு வீடு தேவையில்லை என வெங்கடேஷ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி மற்றும் மகன்கள் சேர்ந்து அவரை அடித்துள்ளனர். அதன் பிறகு அவருடைய படுக்கையறையில் நாய் சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர்.

‘ரூ.20 லட்சம் பணத்தை எங்கள் பேரில் காசோலை எழுதி கொடு. எங்களுக்கு பணம் கிடைத்த உடனே, உன்னை அவிழ்த்து விடுகிறோம்.இல்லையென்றால் சாகும் வரை இதே கதிதான்' என அவரது மூத்த மகன் சேத்தன் கூறியுள்ளார்.சரியான முறையில் உணவும் நீரும் வழங்கவும் மறுத்துள்ளனர். வெங்கடேஷ் பசியால் துடித்து சத்தமிட்டபோது அவரது மனைவி நாகரத்னா உணவு கொடுத்துள்ளார். மேலும் இயற்கை உபாதைகளை கழிக்கவும் விடவில்லை.ஆதலால் அதே இடத்தில் கழித்துள்ளார்.

17 நாட்களுக்கு பிறகு விடுதலை

இந்நிலையில் அவரது தம்பி ராமசந்திரா வெங்கடேஷைத் தேடி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் காணாமல் போய்விட்டதாக இளையமகன் ரஞ்சன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் வெங்கடேஷின் அறைக்குள் ராமசந்திராவை நுழைய அனுமதிக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பெங்களூர் மாநகர கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து கிரிநகர் போலீஸாருக்கு வெங்கடேஷை தேடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி போலீஸார் வெங்கடேஷின் வீட்டில் சோதனை நடத்தினர்.அப்போது ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது.அதனை திறந்தபோது துர்நாற்றம் வீசியது.உள்ளே ஒரு கட்டிலில் நாய் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் வெங்கடேஷ் தாடியுடன் இருந்துள்ளார்.

அவரை அங்கிருந்து மீட்ட போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 30-ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நாகரத்னா, மூத்த மகன் சேத்தனை போலீஸார் கைது செய்த‌னர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்த இளையமகன் ரஞ்சன் திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.

சேர்ந்து வாழ விரும்பவில்லை

சம்பவம் குறித்து வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது,

“பணத்துக்காக சொந்த குடும்பமே என்னை கொல்ல முயற்சித்தது. இனி இவர்களுடன் சேர்ந்து வாழ மாட்டேன். இவர்களுக்காக காலம் முழுக்க கஷ்டப்பட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்திருக்கிறேன். ஆனால் என்னை ஒரு கைதியை விட மிக மோசமாக வீட்டுக்குள்ளே சிறை வைத்துவிட்டனர். அவர்கள் மூவருக்கும் சட்டப்படி தக்க தண்டனை வழங்க வேண்டும்''என்றார்.
ரூ.20 லட்சம் பணத்தை எங்கள் பேரில் காசோலை எழுதி கொடு. எங்களுக்கு பணம் கிடைத்த உடனே உன்னை அவிழ்த்து விடுகிறோம்.இல்லையென்றால் சாகும் வரை இதே கதிதான்' என அவரது மூத்த மகன் சேத்தன் கூறியுள்ளார்.சரியான முறையில் உணவும் நீரும் வழங்கவும் மறுத்துள்ளனர்.

நன்றி : தி இந்து

No comments:

Post a Comment