Monday, December 30, 2013

காரைக்காலில் இரு கும்பலால் இளம்பெண் பாலியல் வல்லுறவு: இதுவரை 14 பேர் கைதுகாரைக்காலில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இளம்பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில், இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இரண்டு கும்பல்களால் வல்லுறவு

பாண்டிச்சேரியை அடுத்த காரைக்காலுக்கு தோழியுடன் வந்த திருவாரூரைச் சேர்ந்த 21 வயது பெண், அடுத்தடுத்து இரண்டு முறை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவம் டிசம்பர் 25-ல் நடந்துள்ளது.

தனது நண்பரைப் பார்ப்பதற்காக புதுச்சேரி வந்திருக்கிறார் பாதிக்கப்பட்ட இந்தப் பெண். தன்னுடன் வந்த தோழிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், இவர்கள் நண்பரின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வெளியே நின்றிருந்த அந்தப் பெண்ணை, மூன்று ஆண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அந்தப் பாலியல் வல்லுறவுத் தாக்குதல் முடிந்ததும், தகவல் அறிந்து அந்தப் பெண்ணை அவரது நண்பர்கள் மீட்பதற்குள், அப்பெண்ணை மற்றொரு கும்பல் இன்னோர் இடத்துக்கு அழைத்துச் சென்று ஆறு முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

இந்த வழக்கில் தொடக்கம் முதலே காரைக்கால் போலீஸார் கவனம் செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது. சிலரது யோசனையின் பேரில் வெளியே தெரியாமல் இந்த வழக்கில் பேசித் தீர்வு காண போலீஸார் முயன்றனராம். பின்னர், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை புதுச்சேரி மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என காரைக்காலைச் சேர்ந்த முகம்மது இர்பான், அப்துல்காசிம், முகம்மது அமீர் அலி, அக்பர் அலி, முகம்மது யூசுப், முப்பாயைத், அப்துல்நாசர், திருநள்ளாறைச் சேர்ந்த மதன், எழிலரசன், பாபுராஜன் ஆகிய 10 பேர்களைக் கைது செய்து வியாழக்கிழமை இரவு காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மீதமுள்ள 5 பேர்களில் இளம் குற்றவாளியை புதுச்சேரி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். தேடப்பட்ட 4 பேரில் பைசல் என்பவர் வெள்ளிக்கிழமை காரைக்கால் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஜெயகாந்தன் என்பவரை வேளாங்கண்ணியில் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் ஜெயகாந்தன் அளித்த தகவலின்பேரில் செல்லப்பா என்பவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில் தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநர் மணி என்பவரை குற்றப்புலனாய்வுத் துறையினர் தேடி வருகிறார்கள்.

சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் வேலையை செய்து வந்தவரான மணிக்கு, நகரில் உள்ள பல்வேறு கும்பலுடனும் தொடர்புள்ளதாம். வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்ட ஜெயகாந்தன்தான் முதலில் இளம்பெண்ணை மிரட்டி மணியின் அறையில் வைத்துக்கொண்டு, தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஜெயகாந்தன் மீது ஒரு பெண்ணைத் தாக்கியது உள்ளிட்ட 2 வழக்குகள் உள்ளன. கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் 1994-ம் ஆண்டு ஒரு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டில் 18 மாத சிறை தண்டனை பெற்றவர். ரூ.5 ஆயிரம் பிணைத்தொகை கட்டி வெளியே வந்தநிலையில் மீண்டும் வல்லுறவு வழக்கில் அவர் சிக்கியுள்ளார்.

முன்னர் பா.ம.க பிரமுகர் ஒருவரின் ஆதரவில் வலம் வந்து கொண்டிருந்த அப்துல் நாசர் கடந்த சில ஆண்டுகளாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நாஜிமின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.                                                                     

செய்தி : தி  இந்து                                                              


No comments:

Post a Comment