Friday, December 6, 2013

கொலை வழக்கில் வழக்குரைஞர் தம்பதி சிறையில் அடைப்பு




பெண் கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் ராஜவேல், அவரது மனைவி ஆகியோர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பல்வேறு வழக்குகள் தொடர்பாக, இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.


கோவை ஹவுசிங்  யூனிட்ட்டில் வாழ்க்கை 

கோவை, சிட்கோ, குறிச்சி ஹவுசிங் யுனிட் - ஃபேஸ் 2 பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் இ.டி. ராஜவேல் (44). இவரது மனைவி மோகனா (41).

இவர்கள் இருவரும் ரத்தினபுரி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட சிவானந்தா காலனியைச் சேர்ந்த அம்மாசை (45) என்ற பெண் கொலை வழக்கு தொடர்பாகத் தேடப்பட்டு வந்தனர்.


கேரள மாநிலம் கோவளத்தில் கைது 

இந்த வழக்கு தொடர்பாக வழக்குரைஞரின் கார் ஓட்டுனர் பழனிசாமி, வி.சி.க. கட்சியின் குறிச்சி நகர நிர்வாகி பொன்ராஜ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வழக்குரைஞர் ராஜவேல், அவரது மனைவி ஆகியோர் கேரள மாநிலம், கோவளத்தில் வைத்து வியாழக்கிழமை பிடிபட்டனர்.

நீதிமன்றக் காவல்

 காவல் உதவி ஆணையர் ராமசந்திரன் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் ராஜவேல், கனகசபாபதி, வெங்கட்ராமன், உதவி ஆய்வாளர் சிவகுமார் அடங்கிய தனிப்படை போலீஸார், வெள்ளிக்கிழமை அவர்களை கேரள நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கோவைக்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் கோவை, ஜே.எம். 2 நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் உத்தரவிட்டார். 

அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கோவை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நால்வர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 201 (தடயங்களை மறைத்தல்), 302 (கொலை) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்குமூலம் பெறவில்லை:

கைது செய்யப்பட்டுள்ள ராஜவேலிடம் இதுவரை கொலை வழக்கு குறித்து எவ்வித வாக்குமூலமும் பெறவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து உதவி ஆணையர் ராமசந்திரனிடம் கேட்ட போது, ராஜவேலின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு அவரிடம் வாக்குமூலம் எதுவும் பெறப்படவில்லை என்றார்.

அம்மாசை கொலை வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வழக்குரைஞர் ராஜவேல் உள்பட கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரையும் ரத்தினபுரி போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பிற வழக்குகளிலும் கைது:

வழக்குரைஞர் ராஜவேல் அம்மாசை கொலை வழக்கு தவிர, ஏற்கனவே கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மணிவேல் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர். இவ்வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜவேல் அந்தக் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டது தெரிய வந்ததாகவும், மணிவேலுக்குச் சொந்தமான 26.5 சென்ட் நிலத்தை அபகரிக்கவே இந்தக் கொலை நடந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இவ் வழக்கில் ராஜவேல் விரைவில் கைது செய்யப்பட உள்ளார்.

மேலும் ராஜவேல், மோகனா ஆகியோர் மீது போத்தனூர் போலீஸில் மோசடியாக சான்று பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு ரூ. 12 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் மோகனாவை ஒடிசா போலீஸார் தேடி வருகின்றனர். அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ் வழக்குகள் தொடர்பாக ராஜவேலின் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீஸார் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

காவல்நிலையத்தில் மயக்கம்:

 ராஜவேல் ஏற்கெனவே சிறுநீரகக் கோளாரால் பாதிக்கப்பட்டு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை பகலில் ராமநாதபுரம் காவல்நிலையத்தில் அவரைப் போலீஸார் தனி அறையில் வைத்திருந்தபோது, ராஜவேலுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அவருக்கு தேனீர் வாங்கிக் கொடுத்துச்சரிப்படுத்தினர்.                                                                                                         

நன்றி ;-தினமணி ,  07 - 12 -2013                                                                                                       


No comments:

Post a Comment