Wednesday, December 11, 2013

சென்னை : காவல்துறை மீது 95 சதவீத புகார்கள்


மனித உரிமை மீறல்: காவல்துறை மீது 95 சதவீத புகார்கள்

     சென்னை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனித உரிமை தின விழாவில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட அதிகாரிகள்.

மனித உரிமை மீறல் தொடர்பாக காவல்துறை மீது 95 சதவீத புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஜெயந்தி தெரிவித்தார்.

மனித உரிமை தினத்தையொட்டி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய அரங்கில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் ஜெயந்தி பேசியது:
மனித உரிமை ஆணையம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறோம்.

கடந்த 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மனித உரிமை ஆணையத்தில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

அதில் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல் குறித்து தினமும் 80 முதல் 100 புகார்கள் வரை பெறப்படுகின்றன. அவற்றில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்துதல், போலியாக வழக்குப்பதிவு செய்தல் உள்பட 95 சதவீத புகார்கள் காவல்துறை சார்ந்த புகார்களாக உள்ளன.

இவை தவிர சான்றிதழ்கள் பெற பணம் கேட்டதாக வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாணவர்களை துன்புறுத்திய ஆசிரியர்கள், நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட புகார்களும் பெறப்படுகின்றன.

மனித உரிமை மீறல் குறித்து பொதுமக்கள் கடிதம் மூலமாகவோ அல்லது 143, பசுமை வழிச்சாலை (கிரீன் வே), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரில் நேரிலோ மனித உரிமை ஆணையத்திடம் தங்களது புகாரை தெரிவிக்கலாம்.

புகாரின் தன்மையைப் பொருத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார் அவர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கே.பாஸ்கரன், செயலர் அசோக் ரஞ்சன் மொகந்தி, சட்டத்துறைச் செயலர் ஜி.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.                                                                                                                          
தினமணி,  11 - 12 - 2013                                                                                                                  





No comments:

Post a Comment