Saturday, November 1, 2014

உலக மசாலா: தனிமனிதனால் உருவான 2,087 அடி சுரங்கப்பாதைஉலக லண்டனில் உள்ள ஜார்ஜியன் ஹவுஸ் ஹோட்டல் 163 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கே ஹாரி பாட்டர் தீமில் புதிய அறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த அறைகளில் ஹாரி பாட்டர் திரைப்படங்களில் பார்க்கப்பட்ட பொருள்கள், படுக்கை, ட்ரங் பெட்டி, தேநீர் குவளை, திரைச் சீலைகள் என்று அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சுவர்களும் தரைகளும் கூட அப்படியே ஹாரி பாட்டர் அறை போலவே காட்சியளிக்கின்றன. 3 பேர் தங்கக்கூடிய இந்த அறையின் ஓர் இரவு வாடகை 15 ஆயிரம் ரூபாய். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் ஹாரி பாட்டர் அறைகளை விரும்புவதால் வருமானம் கொட்டுவதாகச் சொல்கிறார்கள் உரிமையாளர்கள்.

ஹாரி பாட்டர் மவுசு குறையாதவரை, எந்த பிசினஸிலும் துணிச்சலாக இறங்கலாம்…
கலிஃபோர்னியாவில் உள்ள மோஹாவே பாலைவனத்தில் 2,087 அடிகள் நீளம் கொண்ட ஒரு சுரங்கப் பாதை தோண்டப்பட்டது. அது இன்று பிரபல சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது. இந்தச் சுரங்கத்தை வில்லியம் ஹென்றி ஸ்மித் தனி மனிதனாக உருவாக்கினார். 32 ஆண்டுகள் கைகளாலேயே கிரானைட் மலையை உடைத்து, அரை மைல் அளவுக்குச் சுரங்கத்தைத் தோண்டியிருக்கிறார்.

யாருக்காக, எதற்காக இந்தச் சுரங்கம் தோண்டப்படுகிறது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. குறுக்கு வழிக்காகவே சுரங்கம் தோண்டுவதாகத் தெரிவித்திருக்கிறார். பல முறை மோசமாகக் காயமடைந்தும் கூட அவர் சுரங்கம் தோண்டுவதை நிறுத்தவில்லை. காரணம் தெரியாவிட்டாலும் இந்தச் சுரங்கத்தைப் பற்றி ஏராளமான செய்திகள் உலாவுவதால், இன்று சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான சுரங்கமாக மாறிவிட்டது.

காரணம் தெரியாமல் உங்க உழைப்பு வீணாகுதே ஸ்மித்…

பிரபலமான விமான ஓட்டியும் சாகசப் பயணியுமான அமெலியா எர்ஹார்ட், விமானத்தில் உலகைச் சுற்றி வரும் முயற்சியில் காணாமல் போனார். 1937ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அமெலியாவையும் விமானத்தையும் தேடும் முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 1991ம் ஆண்டு நிகுமரோரோ பகுதியில் இருந்து ஓர் அலுமினியத் துண்டு கண்டெடுக்கப்பட்டது. அந்த அலுமினியத் துண்டை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமெலியா ஓட்டிய விமானத்தின் ஒரு பகுதிதான் அந்த அலுமினியத் துண்டு என்பது இப்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுயமரியாதை கொண்டவராகவும், சாகசக்காரராகவும் என்ன ஓர் அற்புதமான மனுஷி அமெலியா!

ஹபர்ட் ரோசெரியா பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர். 1918ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகப் போரில், 21 வயது ஹபர்ட் இறந்து போனார். மகனின் மரணச் செய்தியால் உடைந்து போன பெற்றோர், அவருடைய அறையை அப்படியே பூட்டி வைத்துவிட்டனர். 1936ம் ஆண்டு வீட்டை விற்கும்போது, அந்த அறையை மட்டும் இன்னும் 500 ஆண்டுகளுக்கு இடிக்கக்கூடாது என்று உறுதி மொழி வாங்கிவிட்டனர். அதற்குப் பிறகு பலர் கைக்கு அந்த வீடு மாறிவிட்டது. ஆனால் ஒருவரும் அந்த அறையைத் திறக்கவோ, இடிக்கவோ முயற்சி செய்யவில்லை.

தற்போதைய வீட்டின் உரிமையாளர் அறையைத் திறந்தார். ஹபர்டின் புகைப்படங்கள், அவர் சேகரித்த கருவிகள், ராணுவ உடை, தொப்பி, கட்டில், மெத்தை, படிக்கும் மேஜை என்று நூறு வருடங்களுக்கு முன்பு எப்படி வைக்கப்பட்டதோ, அப்படியே இருந்திருக்கிறது அறை. ஆங்காங்கே சிலந்தி வலை, தூசி தவிர எந்த மாற்றமும் இல்லை. நூறு ஆண்டுகளாகத் திறக்கப்படாத இந்த அறையைத் திறந்து, செய்தியை வெளியிட்டிருக்கிறார் வீட்டின் உரிமையாளர்.

நூறு வருஷங்களுக்குப் பிறகு உங்களைப் பத்தி உலகமே பேச வச்சிட்டீங்களே ஹபர்ட்!


நன்றி :- தி இந்து

No comments:

Post a Comment