Monday, November 3, 2014

மன முறிவால் வரும் மண முறிவு


திருமணம் என்பது வாழ்வில் முக்கிய கட்டம். "நான்' என்பது "நாம்' ஆகி "நாங்கள்' என்று வளரும் சிறப்பு. தன்னலம் தொலைந்த பொது நலத்தின் தொடக்கம். திருமணத் தொடக்கம் இனிக்கும். சிலரின் வாழ்வில் இந்த இனிப்பு முடிவு வரை இருக்கும். சிலரின் வாழ்க்கையில் இடையில் மனக் கசப்பு, வேதனை கொடுக்கும். மனமுறிவு மணமுறிவைத் தருகிறது. மனித வாழ்வின் இனிமையான பகுதி, ஒருத்தியை அல்லது ஒருவனை மீண்டும் தனிமை நரகத்தில் தள்ளுகிறது.
இன்று இந்தியாவில் மணவிலக்குத் துறையில் தமிழகம் தலைமை ஏற்றுள்ளதாகப் புள்ளி விவரம் எடுத்துரைக்கிறது. மணமுறிவு, விதவை நிலை என்ற முறையில் தில்லியின் அளவு 4.1 சதவீதம், மகாராஷ்டிரம் 7 சதவீதம், ஆந்திரம் 8.2 சதவீதம், தமிழ்நாடு 8.8. தமிழகத்தில் பலர் விவாகரத்துப் பெற்றுள்ளனர். இவர்களில் இளவயதினரே அதிகம் (23 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவர்கள்). வருங்காலக் கற்பனைக் கோட்டைகளைக் கானல் நீருக்கு விற்றவர்கள். இந்த வேதனைக்கும் துயரத்திற்கும் யார் காரணம்?
ஆண் என்பவன் ஆளப்பிறந்தவன் என்ற மனப்பான்மை சில குடும்பத் தலைவரின் உள்ளத்தில் ஆழப்பதிந்து கிடக்கிறது. அளவு மீறிய தன் உயர்வுத் தன்மையின் பார்வையில் மனைவி அடிமையாக எண்ணப்படுகிறாள். இது பழங்கால நிலை. இன்று காலம் மாறிவிட்டது. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற நிலை பிறந்துள்ளது. ஆனால், கணவன் பழைமைப் போக்கிலேயே ஊறிக் கிடந்தால், மனைவியை தரக்குறைவாக நடத்தினால் பொறுத்துப் பார்க்கும் பெண் ஒரு நாள் திருமண வாழ்க்கைக் கூண்டிலிருந்து வெளியேறி விடுகிறாள்.
களங்கமிலாத மனைவி மீது களங்கம் ஏற்றினால், பூசலும் போரும் நாளும் நடத்தினால், விவாகரத்து என்ற மேகத்துள், மனைநிலா மறைந்து விடுகிறது. மாமனாரின் பணப் பெட்டி மேல் குறி வைத்துத் திருமண அம்பைப் பற்றிக் கொண்டவன், மனைவியை வேகமாக விரட்டத் தொடங்கினாலும் வாழ்க்கை வட்டத்தைவிட்டு, அவள் வெளியேறி விடுகிறாள். வெல்வேறு பெயர் கொண்டு திருமணச் சந்தையில் சில பெண்களைக் கைப்பற்றும் தனித் திறமை சிலருக்கு உண்டு. உண்மை வெளிவரும்போது, மனம் உடைந்த மனைவி, மணவிலக்கில் அடைக்கலம் புகுகிறாள். இப்படிப்பட்ட பல காரணங்கள் மணவிலக்கு அடிப்படை ஆகின்றன.
பெண்களுக்கு அணிகள் (நகைகள்) போடுவது அழகை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டும் அல்ல, பொருளாதாரப் பின்னடைவு நேரும்போது கை கொடுப்பதற்காகவும் தான். முன்பு மனைவி வேலைக்குச் செல்லும் நிலை இல்லையே இன்று. பெண்ணும் வேலைக்குச் செல்கிறாள். அன்று பணத் தேவைக்கு கணவனிடம் கை ஏந்தும் நிலையில் இருந்தவள். இன்று கை நிறைய பணம் சம்பாதிக்கிறாள். இன்று, பொருளாதாரத்தைப் பொறுத்த மட்டில் அவள் சுதந்திரம் பெற்றுவிட்டாள். அவளால் தன் காலில் நிற்க முடியும். அவளுக்கு வெளி உலகம் தெரியும். ஆகவே, கணவனின் அதிகாரக் கை நீண்டால், அவள் இல்லறத்தை விட்டு வெளியேறுகிறாள்.
முன்பு சமுதாயம் பெண்ணைப் பயமுறுத்தி வைத்திருந்தது, அவளுக்கு உரிமை தரப்படவில்லை. ஆனால், அந்த நிலை இன்று இல்லை. பெண் மிகுந்த உரிமை பெற்று விட்டாள். தன் வருங்காலக் கணவனைத் தானே தேர்ந்தெடுப்பதற்கும் அவள் உரிமை மேற்கொண்டிருக்கிறாள்.
தன் உரிமையைத் துணைவன் பறித்தால், அவனை விட்டு அடியோடு விலகவும் அவன் உரிமை கொண்டிருக்கிறாள். ஆண் மகனைப் போலவே, பெண் மகளும் தன் வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொள்கிறாள். வாழ்வைத் தொடங்குகிறாள். ஆனால், தன்னுடைய கற்பனைக் கோட்டையை ஆண் ஆதிக்கம் தகர்ப்பதாக உணரும்போது, மண உறவை அறுத்தெறிகிறாள். இக்காலத்தில் காதல் திருமணம் பரவலாக உள்ளது. காதலுக்கு கண் இல்லை. அதன் விளைவாக, எதிர்காலப் பார்வை குருடாகி விடுகிறது. முதலில் அன்புக்கே இடம் தந்த வாழ்வு மெல்ல மாறுகிறது. வெறுப்பு பிறக்கிறது. வளர்கிறது. பெண்ணிடம் உள்ள அளவுக்கு மீறிய தன்முனைப்பும் மணவிலக்குக்கு வழி காட்டுகிறது.
குடும்ப நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் மணவிலக்கு வழக்குகள் ஆண்டு தோறும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. சென்னையிலுள்ள குடும்ப நீதிமன்றத்தில் பதிவான வழக்குகள் 2000-ஆம் ஆண்டில் 1919, 2005-இல் 2723, 2009-இல் 5,265.
மணவிலக்கு பெற்றுவிட்டால் வாழ்க்கையில் பிடிப்பு அற்றுப்போகிறது. மணவிலக்கு பெற்றவர்களின் குழந்தைகளுடைய நெஞ்சங்களில் தாங்கள் ஆதரவற்றவர்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது.
இந்தப் பின் விளைவுகளை மணவிலக்கு கோருவோர் எண்ணிப் பார்க்க வேண்டும். கணவன் - மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். விட்டுத் தரும் மனப்பான்மை வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும்.
முனைவர் மலையமான், சென்னை, கருத்துக்களம், தினமணி

No comments:

Post a Comment