Tuesday, November 4, 2014

கோவை அருகே உதவி பேராசிரியை படுகொலை: போலீஸ் விசாரணை

கோவை அருகே உதவி பேராசிரியை படுகொலை: போலீஸ் விசாரணை

கோவை அருகே உதவி பேராசிரியை படுகொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற தாய்க்கும் வெட்டு விழுந்தது. பேராசிரியை கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை மாவட்டம் காரமடை கணேஷ்நகரை சேர்ந்தவர் தர்மராஜ். கோத்தகிரியில் மின்வாரிய இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள்கள் ரம்யா (வயது 24), பிரேமா (17). ரம்யா என்ஜினீயரிங் படித்து விட்டு ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். ஈச்சனாரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். விடுமுறை நாட்களில் தனது வீட்டுக்கு வருவது வழக்கம்.

பிரேமா கோத்தகிரியில் தந்தையுடன் தங்கி அங்கு பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முஹர்ரம் விடுமுறை என்பதால் ரம்யா நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். இரவு 9.30 மணிக்கு தர்மராஜ், ரம்யாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது, பஸ்சில் வீட்டுக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினார்.

அதன்பிறகு நேற்று காலை வரை தர்மராஜ் பலமுறை ரம்யாவை செல்போனில் தொடர்பு கொண்டும் மறுமுனையில் பதில் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த தர்மராஜ் கோத்தகிரியில் இருந்து உடனடியாக புறப்பட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவை தட்டியும் திறக்காததால், மதில் சுவரை ஏறிக்குதித்து வீட்டிற்குள் சென்றார். கதவை திறந்ததும் அவர் கண்ட காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வீட்டின் முன்பக்க அறையில் அவரது மனைவி மாலதி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உள்ளே படுக்கையில் ரம்யா ரத்தவெள்ளத்தில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் தர்மராஜ் கதறி அழுதபடி காரமடை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாலதியை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடய அறிவியல் நிபுணர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொலை நடந்த வீட்டில் கிடைத்த தடயங்கள் மற்றும் ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது, யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

விசாரணையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்ததும் ரம்யாவும், அவரது தாய் மாலதியும் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது யாரோ அடையாளம் தெரியாத சில மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து ரம்யாவை கூர்மையான கத்தி அல்லது அரிவாள் போன்ற ஆயுதத்தால் கழுத்து மற்றும் தலையில் தாக்கியதாக தெரிகிறது.

இதை தடுக்க சென்ற மாலதிக்கும் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தாய் மகள் 2 பேரும் கொலையாளிகளுடன் நீண்ட நேரம் போராடியதற்கான அறிகுறிகளும் காணப்பட்டது. பீரோ திறந்து கிடந்தது. விலை உயர்ந்த கேமரா மட்டும் திருட்டு போயுள்ளது. நகை, பணம் திருட்டு போகவில்லை. இதனால் திருட்டுக்காக இந்த கொலை நடக்கவில்லை. சிகிச்சை பெறும் ரம்யாவின் தாயிடம் விசாரணை நடத்தினால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொலைக்கு முன்விரோதம் காரணமா? காதல் தகராறா? கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. இந்த கொலையில் துப்புதுலக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள். கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தான் ரம்யா கற்பழிக்கப்பட்டாரா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

நன்றி :மாலை மலர்

No comments:

Post a Comment