Tuesday, October 28, 2014

உலக மசாலா: பூனைகளுக்கான ஹோட்டல்



ஒவ்வோர் ஆண்டும் தாய்லாந்தில் உள்ள புகெட் பகுதியில் சைவத் திருவிழா ஒன்பது நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் ஒன்பது நாட்களும் சைவ உணவு உட்கொண்டு, விரதம் இருக்கிறார்கள். தாய்லாந்தில் வசிக்கும் சீனர்கள் மூலம் பழங்காலத்தில் இருந்து இந்தத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முக்கியமான விஷயமே அலகு குத்துதல்தான். ஆண்களும் பெண்களும் கத்தி, கடப்பாறை, கம்பி, குடை போன்றவற்றைக் கொண்டு அலகு குத்திக்கொள்கிறார்கள். அதுவும் 8, 10 என்று கம்பிகளைச் செருகிக்கொள்கிறார்கள். பார்ப்பவர்களுக்குக் கிலி ஏற்படுத்தும் இந்த வேண்டுதலால் நிறையைப் பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. 2011-ம் ஆண்டு ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஆனாலும் அலகு குத்தும் ஆர்வம் மக்களிடம் குறையவில்லை.

உங்க பக்திக்கும் ஓர் அளவு வேண்டாமா?

கலிஃபோர்னியாவில் ஒரு பெட்ரோல் பங்க்குக்கு 23 வயது சைல் வாரன் அப்பாட் வந்தார். அங்கிருந்தவர்களிடம் தனக்குப் பணம் தரச் சொல்லி மிரட்டினார். வேறு வழியின்றி பணம் கொடுத்தனர். இரண்டு பியர் பாட்டில்களை வாங்கிக்கொண்டு கிளம்பினார். மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு திரும்பி வந்தார் வாரன் அப்பாட். எல்லோருக்கும் ஆச்சரியம். அங்கிருந்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, செலவு செய்த பணம் போக மீதியைத் திருப்பித் தந்துவிட்டார். ஆனாலும் மிரட்டிப் பணம் பெற்ற குற்றத்துக்காக இப்போது சிறையில் இருக்கிறார் வாரன்.

இந்த நல்ல குணம் பணம் கேட்கறதுக்கு முன்னாலேயே வந்திருக்கலாம்…

ஸ்காட்லாந்தில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக மிகப் பெரிய ஃபேன்ஸி டிரஸ் விழா நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற இருக்கும் இந்த ஃபேன்ஸி டிரஸ் விழாவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். இதற்காகப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் ஏராளமான பணம் மருத்துவ ஆராய்ச்சி உட்பட 17 தொண்டு நிறுவனங்களுக்குப் பிரித்து வழங்கப்பட இருக்கிறது. ஃபேன்ஸி டிரஸ் விழாவில் கலந்துகொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நல்ல விஷயத்துக்கு தாராளமா வேஷம் போடலாம்!

அமெரிக்காவின் பூனைகளுக்கான முதல் ‘கேட் கஃபே’ ஆக்லாந்தில் ஆரம்பிக்கப்படுள்ளது. பூனைகளைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் பூனைகளுடன் இங்கே வந்து பொழுது போக்கலாம். பூனைகளை விளையாட வைக்கலாம். பூனைகளுக்குக் குடிக்க, சாப்பிட வாங்கிக் கொடுக்கலாம். ஆக்லாந்து பிராணிகள் அமைப்பு இதை ஆரம்பித்திருக்கிறது. இந்த அமைப்பு மூலம் இதுவரை 600 பூனைகள் காப்பாற்றப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூனைகளைத் தத்தெடுக்கவும் இவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள்.

பால் விக்கிற விலைக்கு காபி, டீயை விட்டுடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கோம்… இதுல பூனைகளுக்கு…

Keywords: உலக மசாலா, தி இந்து

No comments:

Post a Comment