Thursday, November 6, 2014

உலக மசாலா: 1000 அடி நீளத்தில் கண்ணாடிப் பாலம்




சீனாவின் யுனான் மாகாணத்தில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. 1,000 அடி நீளம் கொண்ட இந்தப் பாலம், மூன்று கால்பந்து மைதானங்களைக் கடக்கும் அளவுக்கு நீளமானது. பாலத்தின் அடிப்பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டு, 600 அடி கீழே இருக்கும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே செல்லும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது இந்தக் கண்ணாடிப் பாலம். உயரத்தைக் கண்டு பயப்படுகிறவர்களுக்கு கண்ணாடியில் கால் வைத்தவுடன், பயத்தில் கால்கள் தொடர்ந்து நடக்க மறுக்கவும் செய்கிறது என்கிறார்கள்.

இந்தப் பாலத்தை எப்படி உருவாக்கியிருப்பாங்கன்னு நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை!

பிரிட்டனைச் சேர்ந்த டியானே லீ, 80 நாட்களில் யுனைட்டட் கிங்டம் முழுவதையும் சுற்றி வந்திருக்கிறார். 4,034 மைல்களை 31 ரயில்கள், 19 பேருந்துகள், 16 படகுகள், 13 கார்கள், 2 விமானங்களில் பயணம் செய்து முடித்திருக்கிறார். சின்ன வயதிலேயே கேன்சரால் தாயை இழந்த டியானே, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். பிறகு 30 வயதில் உணவு சாப்பிட முடியாத நோயால் அவதிப்பட்டார். 40 வயதில் தன் தாயைப் போல கேன்சர் நோயால் இறக்க நேரிடுமோ என்ற பயத்தில் உழன்றார். பிறகு தன்னை மீட்டெடுத்து, இதுபோன்ற சாகசப் பயணங்களில், பிறருக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டார். 80 நாட்களில் உலகப் பயணம் என்ற நாவலை எழுதிய புகழ் பெற்ற எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்னுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தப் பயணத்தைத் திட்டமிட்டு, நிறைவு செய்திருக்கிறார். தன்னுடைய பயணங்களைப் புத்தகமாகவும் எழுதி வருகிறார்.

வெல்டன் டியானே! நீங்களும் மீண்டெழுந்து, மத்தவங்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கிறீங்க!

ஒரு காலத்தில் காஷ்மீர் கஸ்தூரி மானைப் போன்று 7 வகை மான்கள் ஆசியா முழுவதும் பரவியிருந்தன. மனிதர்களின் நடவடிக்கைகளால் இந்த இனம் அழிந்து வரக்கூடிய ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டது. 1948-ம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் எந்த வகை கஸ்தூரி மான்களும் கண்டறியப்படவில்லை. 66 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது 2 கோரைப் பற்கள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கக்கூடிய கஸ்தூரி மான் கண்டறியப்பட்டுள்ளது.

இனிமேலாவது அந்த மானை, பத்திரமா பாதுகாத்தால் சரிதான்…

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பாடகி கைட்டி மெலுவா. அவருடைய காதில் வித்தியாசமான சத்தமும், சில சமயங்களில் ஏதோ அசைவது போன்றும் தெரிந்தன. வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாததால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை கைட்டி. ஒரு வாரத்தில் சத்தம் அதிகமானது. மருத்துவரைப் பார்த்தார். காதுக்குள் இருந்து ஒரு சிலந்தியை வெளியே எடுத்தார் மருத்துவர். இயர் போன் வழியாகக் காதுக்குள் நுழைந்திருக்கிறது சிலந்தி.

ஐயோ… ஒருவாரம் வரைக்குமா சிலந்தியைக் காதுக்குள் வச்சிருக்கிறது?


நன்றி :- தி இந்து

No comments:

Post a Comment