Friday, November 7, 2014

சென்னையில் 58 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்


கீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூட்டமைப்பினர் ஒன்றிணைந்து 58 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு சென்னையில் நேற்று திருமணம் நடத்தி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில சமூகநலத்துறை அமைச்சர் பா. வளர்மதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூட்டமைப்பின் சார்பாக இந்த ஆண்டு 10 மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண சிறப்புமுகாம் நடந்தது. இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர், அவர்களில் 116 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சென்னையில் ஒரே இடத்தில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இந்த திருமணத்தில் அவர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் செயலாளர் டி. மகேஸ்வரி கூறும்போது, “திருமணத்துக்கு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்ப வாழ்க்கையை நடத்த தேவையான மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து அறிந்துகொள்ள கலந்தாய்வு, மனோதத்துவம், மருத்துவப் பரிசோதனை மற்றும் சட்ட ஆலோசனை ஆகியவை நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது” என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த சுரேஷ், மீனா தம்பதியினர் இந்தத் திருமணம் பற்றி கூறும்போது, “பல கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறோம். நடக்க முடியாத நாங்கள் வாழ்க்கைஓட்டத்தைத் தன்னம்பிக்கையுடன் சந்திக்க ஒன்றிணைந்து இருக்கிறோம்” என்றனர்.

ஸ்ரீகீதாபவன் டிரஸ்ட் சார்பில் சென்னை கோபாலபுரத்தில், 58 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.


நன்றி :- தி இந்து

No comments:

Post a Comment