Tuesday, March 11, 2014

மதுரை: தினமும் 100 குடம் தண்ணீர் சுமந்த கொத்தடிமைச் சிறுவன் மீட்பு




பீகாரில் இருந்து அழைத்து வரப்பட்டு, தினமும் 100 குடம் தண்ணீர் சுமக்க வைக்கப்பட்ட கொத்தடிமைச் சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

மதுரை ஹாஜிமார் தெருவில் உள்ள ஒரு பணக்காரர் வீட்டில் பீகாரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் வேலைபார்த்து வந்தான். தற்போது தண்ணீர் தட்டுப்பாடு என்பதால், தினமும் பொதுக்குழாயில் இருந்து 100 குடம் தண்ணீர் எடுக்கச் சொல்லி வேலை வாங்கியுள்ளனர். மேலும் அந்த வீட்டில் இச்சிறுவனை கொத்தடிமையாக நடத்தியுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில், சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த செல்வகுமார், திடீர் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயசூரியன் மற்றும் போலீஸாருடன் சென்று அச்சிறுவனை மீட்டார். தற்போது முத்துப்பட்டியில் உள்ள சக்தி விடியல் மையத்தில் சிறுவன் தங்க வைக்கப்பட்டுள்ளான்.

இது குறித்து மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் ஜிம் ஜேசுதாஸ் கூறுகையில், "இச்சிறுவனை பீகார் மாநிலத்தில் இருந்து மதுரையைச் சேர்ந்த முகம்மது பக்கீர், முகம்மது தௌசீக் ஆகியோர் அழைத்து வந்துள்ளனர். விசாரணையில், அவனது பெற்றோர் பெயர் முகம்மது ஜாப்பிடி-சாந்தினி என்றும், அவர்களுக்கு 5 குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது.

அவர்களிடம் எவ்வளவு பணம் கொடுத்து, இவர்கள் சிறுவனை அழைத்து வந்தார்கள் என்று தெரியவில்லை. செவ்வாய்க்கிழமை குழந்தைகள் நலக் குழுமத்தில் விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் சிறுவனின் பெற்றோருடன் தொடர்பு கொள்ளவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

மதுரையைச் சேர்ந்த முகம்மது பக்கீர், முகம்மது தௌசீக் ஆகியோர் அழைத்து வந்துள்ளனர். அவனது பெற்றோர் பெயர் முகம்மது ஜாப்பிடி-சாந்தினி என்றும் தெரிய வந்துள்ளது. 

தி இந்து 

No comments:

Post a Comment