Wednesday, February 26, 2014

உமா மகேஸ்வரி கற்பழித்துக் கொலை : முக்கியக் குற்றவாளி கொல்கத்தா அருகே கைது


பெண் என்ஜினீயர் கற்பழித்து கொலை ரெயிலில் தப்பிய முக்கிய குற்றவாளி கொல்கத்தா அருகே கைது விமானத்தில் சென்னை கொண்டு வந்தனர் திடுக்கிடும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தை உலுக்கிய சென்னை பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

அந்த வழக்கில் உமா மகேஸ்வரியை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் உத்தம் மண்டல் (வயது 23), ராம் மண்டல் (23) ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த கொலை மற்றும் கற்பழிப்பு குற்ற செயலுக்கு தலைமை தாங்கி நடத்திய முக்கிய குற்றவாளியான உஜ்ஜன் மண்டல் (22) சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி தப்பி சென்றான்.

ரெயிலை விட்டு கொல்கத்தாவில் அவன் இறங்கும்போது கைது செய்வதற்காக சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் விமானத்தில் கொல்கத்தா சென்றனர்.

உஜ்ஜன் மண்டலை அடையாளம் காட்டுவதற்காக அவனோடு வேலை செய்த இன்னொரு கட்டிட தொழிலாளியையும் போலீசார் விமானத்தில் அழைத்து சென்றனர்.

நேற்று காலையில் கொல்கத்தா ரெயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் காத்திருந்தனர். ரெயில் வர தாமதமானது.

இதனால் போலீசார் ஒரு காரை வாடகைக்கு அமர்த்தி, ரெயில் கொல்கத்தா வருவதற்கு முன்பே அவனை மடக்கிப்பிடிக்கத் திட்டமிட்டனர். அதன்படி கொல்கத்தாவில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காரக்பூர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது உஜ்ஜன் மண்டலை ரெயிலிலேயே மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் உஜ்ஜன் மண்டலை கொல்கத்தா கொண்டு சென்றனர். கொல்கத்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவனை சென்னைக்கு கொண்டு வர கோர்ட்டில் உரிய வாரண்டு பெற்றனர்.

நேற்று இரவு 8.50 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து உஜ்ஜன் மண்டலுடன் தனிப்படை போலீசார் சென்னைக்கு வரும் விமானத்தில் ஏறினார்கள். நள்ளிரவில் அந்த விமானம் சென்னை மீனம்பாக்கம் வந்தடைந்தது.

விமான நிலையத்தில் இருந்து உஜ்ஜன் மண்டல் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) உஜ்ஜன் மண்டல் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உமா மகேஸ்வரி கொலை வழக்கில், இவர்கள் மூன்று பேரையும் தவிர இந்திரஜித் மண்டல் என்பவனையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பிடித்தனர். ஆனால், அவனை கைது செய்ததாக போலீசார் அறிவிக்கவில்லை.

உமா மகேஸ்வரியை காட்டுக்குள் தூக்கிச்சென்று கற்பழித்து, கொடூரமாக கொலை செய்ததில் உஜ்ஜன் மண்டல், உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய மூவருக்கும்தான் முக்கிய பங்கு உள்ளது. இதனால் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்துவிட்டதாக போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்திரஜித் மண்டல் கொலை மற்றும் கற்பழிப்பை யாராவது பார்க்கிறார்களா? என்று சற்று தூரத்தில் நின்று காவல் காத்து இருக்கிறான். இதனால் அவனை இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கலாமா?, அல்லது முக்கிய சாட்சியாக சேர்க்கலாமா? என்று போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

உமா மகேஸ்வரி கற்பழித்து, கொலை செய்யப்பட்டு சிதைக்கப்பட்ட சம்பவம் ½ மணி நேரத்தில் நடந்து முடிந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சரியாக 10.30 மணிக்கு உமா மகேஸ்வரி அவர் வேலைபார்க்கும் கம்பெனியில் இருந்து வெளியில் வந்தார். கம்பெனி வாசலில் இருந்து 700 மீட்டர் தூரம் நடந்து சென்று இருக்கிறார். அப்போது இரவு 10.45 மணி.

அந்த நேரத்தில்தான் உமா மகேஸ்வரியை கொலை கும்பலைச் சேர்ந்தவர்கள் குண்டுகட்டாக காட்டுக்குள் தூக்கிச் சென்றனர். 11.15 மணிக்கு காரியத்தை முடித்துக் கொண்டு கொலையாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர். உமா மகேஸ்வரியின் கிரெடிட் கார்டை எடுத்துச் சென்ற கொலையாளிகள் அந்த பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு சரியாக 11.35 மணிக்கு வந்துள்ளனர்.

கொலையாளி உத்தம் மண்டல் வங்கி கிரெடிட் கார்டோடு ஏ.டி.எம். மையத்துக்கு சென்று இருக்கிறான். கிரெடிட் கார்டு மூலம் பணத்தை எடுக்க முயன்றபோது பணம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் அவன் ஏ.டி.எம். மையத்தைவிட்டு வெளியே வந்தான். உத்தம் மண்டல் ஏ.டி.எம்.

மையத்துக்குள் நுழையும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கேமராவில் அப்போதைய நேரம் இரவு 11.35 என்று பதிவாகி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட ராம் மண்டல், உத்தம் மண்டல் ஆகிய இருவரையும் கொலை நடந்த இடத்திற்கு போலீசார் நேற்று அழைத்துச் சென்றனர். முதலில் உமாமகேஸ்வரி வேலை பார்த்த டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.

உமா மகேஸ்வரியை எந்த இடத்தில் மடக்கித் தூக்கிச் சென்றனர்? எந்த இடத்தில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்? என்பதை அவர்கள் இருவரும் காரில் இருந்தபடியே அடையாளம் காட்டினார்கள். யார்–யார் பாலியல் பலாத்காரத்தில ஈடுபட்டது என்ற விவரத்தையும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

உமாமகேஸ்வரியின் உடலில் கழுத்து, அடிவயிறு ஆகிய இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை 60 ரூபாய் கொடுத்து சிறுசேரி அருகில் உள்ள ஏகாட்டூரில் கொலையாளிகள் வாங்கி உள்ளனர். அந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் உமா மகேஸ்வரியிடம் இருந்து அவர்கள் பறித்துச் சென்ற தோடு, மோதிரம் மற்றும் செல்போன், கிரடிட் கார்டு ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

கொலையாளிகள் மீது விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திகை தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அலை செய்திகள்

No comments:

Post a Comment