Sunday, February 23, 2014

பாளையில் காருக்குள் சிலிண்டரை வெடிக்கச்செய்து 3 பேர் தற்கொலை: தாய்–மகன் உள்பட 4பேர் மீது வழக்கு



பாளை கே.டி.சி.நகருக்கு சற்றுதொலைவில் நெல்லை–தூத்துக்குடி பிரதான சாலையில் இருந்து வலதுபுறத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் சாந்தினி நகர் உள்ளது. இந்த பகுதியில் நேற்றுமாலை ஒரு ஆம்னிவேன், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனைக்கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேவந்து பார்த்தபோது, ஆம்னி வேன் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இதுகுறித்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயை அணைத்துவிட்டு வேனுக்குள் பார்த்தபோது வேனின் பின் இருக்கையில் 3பேர் உடல்கருகி எலும்புக் கூடான நிலையில் பிணமாக கிடந்தனர். 

இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவஇடத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் மாதவன், பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் பாளை கே.டி.சி. நகரில் இருக்கும் ரவிசங்கர் நகரை சேர்ந்த ரியல்எஸ்டேட் அதிபராக தொழிலதிபர் பரிபூரணம் என்கிற கண்ணன் (வயது39), அவரது மனைவி மல்லிகா (33), 6–ம் வகுப்பு மாணவியான அவர்களது மகள் சுமதி (12) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் காருக்குள் கியாஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்து தற்கொலை செய்ததும் தெரிந்தது.

இதையடுத்து 3பேரின் உடல்களையும் போலீசார் சம்பவஇடத்தலிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கண்ணன் தனது மனைவி மற்றும் மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களது தற்கொலைக்கான காரணம் தெரியவந்தது. கண்ணனிடம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பகுதியை சேர்ந்த இருவர் ரூ1.75கோடி கடன் வாங்கியுள்ளனர். அதனை அவர்கள் திருப்பி தராமல் ஏமாற்றி விட்டனர். மேலும் கடன் வாங்கிய அவர்களே, கண்ணன் மீது ஏரல் போலீஸ் நிலையத்தில் கந்துவட்டி புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்த கண்ணனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். அதன்படி நேற்றுமுன்தினமும், நேற்றும் ஏரல் போலீஸ் நிலையத்திற்கு சென்று வந்திருக்கிறார். தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்ப தராமல் ஏமாற்றியது மட்டுமின்றி, தனது மீதே போலீசில் புகார் கூறியதால் கண்ணனுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கிறது.

அதன் காரணமாகவே கண்ணன் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் கண்ணன் வீட்டில் போலீசார் சோதனைசெய்தனர். அப்போது அவர் கைப்பட எழுதிவைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. ‘‘மரண வாக்கு மூலம்’’ என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:–

நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தேன். உடல்நலம் பாதிப்பு காரணமாக தொழில் செய்ய முடியாததால், ஏரல் சிவகளை கிராமத்தைசேர்ந்த உறவினருடன் சேர்ந்த தொழில் செய்தேன். 

அவர் அறிமுகம் செய்துவைத்த இருவருக்கு சீட்டு எடுத்து ரூ1.70கோடியும், ரொக்கப் பணம் ரூ5லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ1.75கோடி கடன் கொடுத்தேன்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த பணத்திற்கான வட்டியும் தரவில்லை. அசல் பணத்தையும் தரவில்லை. என்னை ஏமாற்றி விட்டார்கள். இதுதொடர்பாக ஏரல் போலீசில் புகார்செய்தேன். ஆனாலும் எனது பணம் கிடைக்கவில்லை.

இதற்கிடையே கடன் தொகையை கேட்டு தொல்லை செய்வதாக என்னிடம் பணம் வாங்கியவர்கள் என்மீது போலீசில் புகார் செய்தனர். இந்த பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளானதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து பெருமாள் புரம் போலீசார், ஏரல் சிவகளையை சேர்ந்த லட்சுமணன், அவரது தாய் பேச்சியம்மாள், சுப்பிர மணியன், மாணிக்கவாசகம் ஆகிய 4பேர் மீதும் வழக்கு பதிந்தனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. 

மாலைமலர் 

No comments:

Post a Comment