Friday, February 7, 2014

அதிகாரம் மிக்க 50 பெண்கள்: நூயி, சாந்தா கோச்சாருக்கு இடம்


தொழில் உலகில் அதிகாரமிக்க பெண்கள் பட்டியலில் பெப்சிகோ நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி இந்திரா நூயி, ஐசிஐசிஐ நிர்வாக இயக்குநர் சாந்தா கோச்சார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஃபார்ச்சூன் நிறுவனம் தொழில் உலகில் மிகுந்த அதிகாரமிக்க பெண்கள் 50 பேரடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஜெனரல் மோட்டார்ஸ் தலைமைச் செயல் அதிகாரி மேரி பாரா முதலிடத்தில் உள்ளார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இப்பதவிக்கு வந்துள்ள முதல் பெண்மணி என்ற பெருமையும் இவரையே சாரும்.

உயர் பதவிகளுக்கு பெண்களும் வர முடியும் என்ற புதிய தளத்தை ஏற்படுத்தி அதை எட்டிப்பிடித்துள்ள பெண்களில் சர்வதேச அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் பாரா.

6 கண்டங்களில் 396 ஆலைகளில் பணிபுரியும் 2.12 லட்சம் ஊழியர்களுக்கும் தலைவராக இவர் உள்ளார்.

இந்த வரிசையில் பெப்சிகோ நிறுவனத் தலைவர் இந்திரா நூயி, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதே வரிசையில் 18-வது இடத்தில் உள்ளார் சாந்தா கோச்சார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பெண்மணிகள் இவர்களிருவரே.

பெப்சிகோ நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக உள்ள நூயி, அமெரிக்காவுக்கு வெளியே பிற நாடுகளில் பெப்சி விற்பனையை இரு மடங்காக உயர்த்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளது. நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 6,550 கோடி டாலராக (சுமார் ரூ.40.87 லட்சம் கோடி) உள்ளது. இதில் 50 சதவீதத்துக்கும் மேல் வெளிநாடுகளிலிருந்து கிடைப்பவையாகும்.

இந்தியாவில் உள்ள 2-வது பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கிக்கு தலைமையேற்றுள்ளார் சாந்தா கோச்சார். 3,588 கிளைகளுடன் 12,400 கோடி டாலர் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கிறது ஐசிஐசிஐ வங்கி.

இந்தப் பட்டியலில் ஐபிஎம் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கினி ரொமெட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார். பெட்ரோபிராஸ் தலைமைச் செயல் அதிகாரி மரியா தாஸ் கிரா சில்வா பாஸ்டர் நான்காம் இடத்தில் உள்ளார்.

ஃபேஸ்புக் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) ஷெரில் சாண்பெர்க் 11- வது இடத்திலும், யாகூ தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மரிஸா மேயர் 14-வது இடத்திலும், கூகுளின் மூத்த துணைத் தலைவர் சூசன் வொஜிகிகி 20-வது இடத்திலும் உள்ளனர்.

தி இந்து 

No comments:

Post a Comment