Sunday, June 8, 2014

மீண்டும் மீண்டும் காதல்




தெலுங்கின் பிரதான கவிஞராக அறியப்படும் முத்துப்பழனி தஞ்சாவூரை ஆண்ட பிரதாபசிங்க மன்னரின் அரண்மனையில் தேவதாசியாக இருந்தவர். ‘ராதிகா சாந்தவனம்’ என்கிற காவியத்தின் மூலம் தெலுங்கு இலக்கியத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியவர் முத்துப்பழனி. இலாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளும் கிருஷ்ணன் முதல் மனைவியான ராதாவை சமாதானப் படுத்துவது போல அமைந்த பாடல்களைக் கொண்டதால் ‘ராதிகா சாந்தவனம்’ என்று அழைக்கப்பட்டது இந்நூல்.

பாலியல் உறவில் முதல் அடியை ஒரு பெண் எடுப்பது போல அமைந்த ஒரு பாடல் தெலுங்கு இலக்கியத்தில் கிட்டத்தட்ட ஒரு புரட்சியை உண்டு பண்ணியது. அதுவரை, அது போன்ற ஒரு பாடலை ஆண் கவிஞர் களே எழுதியதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அவளை முத்தமிட வேண்டாம் என்று சொன்னால்

எனது கன்னங்களை வருடியபடி

அவளது உதடுகளை எனது உதடுகள் மீது

அழுத்தமாகப் பதிக்கிறாள்.

என்னைத் தொட வேண்டாம் என்றால்

அவளது உறுதியான மார்பகத்தை என்மீது பதியவைத்து

என்னை அணைக்கிறாள்.

என்னை நெருங்க வேண்டாம்

அது நாகரிகமில்லை என்றால்

என்னை அவதூறு செய்கிறாள்.

எனது படுக்கையில் பெண்ணிற்கு

இடமில்லை என்கிற சத்தியத்தைச் சொன்னால்

அதன் மீதேறி தனது காம விளையாட்டை தொடங்குகிறாள்.

தனது உதடுகளிலிருந்து

நான் அருந்தவும்

கொஞ்சவும் பேசவும் செய்கிறாள்.

மீண்டும் மீண்டும் காதல் செய்கிறாள்.

அவளிடமிருந்து நான் எப்படி விலகியிருப்பது?

போன்ற பல கவிதைகளைக் கொண்டது ‘ராதிகா சாந்தவனம்’. 1887-ல் முதன் முறையாகப் பதிப்பிக்கப்பட்டாலும் ராதிகா சாந்தவனம் முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. பின்னர், தேவதாசி மரபில் வந்த நாகரத்தினம்மா அந்தக் கவிதைகளை முழுமையாகக் கண்டுபிடித்து 1910-ல் பதிப்பித்தார். அப்போது கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது அந்நூல். ஆபாசமான பிரதி எனவும் அதை எழுதியிருப்பவர் ‘தரம் கெட்டவர்' எனவும் எதிர்ப்பாளர்கள் சொன்னார்கள். இதற்கு எதிராகக் கடுமையாகப் போராடினார் நாகரத்தினம்மா. ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லை. 1911-ல் தடை செய்யப்பட்டது ராதிகா சாந்தவனம். சுதந்திரத்துக்கு பின்னரே அந்தத் தடை விலக்கப்பட்டது.

ஒரு பெண்ணின் முதல் பாலியல் அனுபவம், இன்னொரு பெண் மீது கணவன் விருப்பம் கொள்ளும்போது எழும் பொறாமையுணர்வு என்று பெண்ணின் அகவுணர்வைப் பரந்துபட்ட வெளியில் துல்லியமாக முன் வைத்த கவிதைகள் முத்துப்பழனியுடையவை. சமஸ்கிருதத்திலும் புலமை பெற்ற முத்துப்பழனி தன்னைப் பற்றிய சுயவிவரக் கவிதையொன்றில் ‘ஈடு இணையற்றவர்' என்று தன்னை சொல்லிக்கொள்கிறார்.

முழுநிலவு போல ஒளிரும் முகம்

அந்த முகத்திற்கு இணையான விவாதத்திறன்

கனிவு கொண்ட கண்கள்

அதே போன்ற பேச்சு.

பார்வையையொத்த பரந்த மனப்பான்மை

இதெல்லாம்தான் பழனியை அலங்கரிக்கும் நகைகள்

என்று ஒரு பாடலில் தன்னைப் பற்றிச் சொல்கிறார் முத்துப்பழனி. அதே போல, தன்னைப் பற்றிப் பேசும்போது தனது பாட்டி, அம்மா, அத்தை போன்ற பெண்களின் திறமைகளைச் சொல்லி அதன் மூலம் தன்னை நிறுவிக்கொள்ளும் போது முத்துப்பழனியின் கவிதைகளில் ஒரு பெண்ணிய சலனம் தெரிகிறது. நாகரத்தினம்மா போன்றவர்களின் முயற்சி இல்லாமலிருந்தால் இன்று காணாமலே போயிருக்கும், பெண்ணியலாளர்களால் முக்கியமானவை என்று கொண்டாடப்படும் முத்துப்பழனியின் கவிதைகள்.

ராதிகா சாந்தவனம், காவியம், தெலுங்கு இலக்கியம், மொழிபெயர்ப்பு, கவிதை

தி இந்து

No comments:

Post a Comment