Saturday, October 31, 2015

தாவூத் - நிழல் உலகத்தின் குரூர நிஜம்


தாவூதின் முன்னாள் கூட்டாளி சோட்டா ராஜன் கைதுசெய்யப் பட்டிருக்கும் சூழலில் மீண்டும் அதிக வெளிச்சம் இந்த நிழலுலக மன்னன் மீது விழ ஆரம்பித்திருக்கிறது.

தாவூதின் வாழ்க்கையைத் துல்லியமான தரவுகளுடன் ‘தாவூத் இப்ராகிம்: டோங்கிரி டூ துபாய்’ என்ற தலைப்பில் ஒரு நூலாக எழுதியிருக்கிறார் எஸ். ஹுஸேன் ஸைதி. சுவாரஸ்யம் குன்றாமல் தமிழிலும் கார்த்திகா குமாரியின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கிறது இந்த நூல். நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து சில பகுதிகள் இங்கே.

“2004-ம் ஆண்டு அமெரிக்காவின் கருவூலத்துறை அதிகாரிகளால் உலகளாவிய பயங்கரவாதியாக மாஃபியா கும்பலின் தலைவன் தாவூத் அறிவிக்கப்பட்டபோது, உலகெங்கும் பரவியுள்ள தாவூத்தின் அடியாட்கள் கொஞ்சமும் முகம் சுளிக்கவில்லை... ஏன் தெரியுமா? ‘நான் அமெரிக்க அதிபருக்குச் சமமானவன்’ என்ற தாவூதின் நம்பிக்கையை அந்த அறிவிப்பு உறுதிப்படுத்துவதாகவே அவர்கள் சொன்னார்கள்...

அது மட்டுமல்ல,...பல ஆண்டுகளாகத் தான் கட்டிய மாளிகைகளுக்கெல்லாம் ‘வெள்ளை மாளிகை’ என்று பெயர் வைப்பதுதான் தாவூதின் வழக்கம்… வெள்ளை மாளிகையில் வாழ்பவரைப் போல தாவூதும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் பலருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தான். ஒரே ஒரு வித்தியாசம், அவர்கள் அனைவரும் நிழலுலகைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் பல குற்றங்களுக்காகத் தேடப்படுகிறான் தாவூத். அதிலும் குறிப்பாக, 1993-ம் ஆண்டு நடந்த பம்பாய் தொடர் குண்டு வெடிப்பு. அதில் 257 பேர் உயிரிழந்தார்கள். 700 பேர் காயமடைந்தார்கள். சமீபத்தில் நடந்த (26/11) மும்பை குண்டு வெடிப்பில்கூட தாவூதின் பங்கு இருக்கிறது என்ற சந்தேகம் இருக்கிறது.

1986-ல் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்ட இந்தக் கடத்தல் மன்னன் பலமுறை இங்கு திரும்பி வருவதற்காக முயற்சி செய்திருக்கிறான். துபாயில் இருந்தபோதும் பாலிவுட் நடிகர்களை வரவழைத்து ஆட வைப்பது, அல்லது ஷார்ஜாவுக்கு வரும் கிரிக்கெட் வீரர்களை தன் விருப்பப்படி ஆட வைப்பது என அங்கே அவனுக்கான பிரத்யேக இந்தியாவை உருவாக்கியிருக்கிறான்.

1993 மார்ச் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன… தாவூத் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். அப்போதுதான் இந்தியாவுடனான தனது தொப்புள்கொடி உறவு அறுந்துவிட்டது என்பது தாவூதுக்குப் புரிந்தது. 1992-க்குப் பிறகுதான் சர்வதேச அளவுக்கு உயர்ந்தான் தாவூத். அதற்குமுன் ரியல் எஸ்டேட், தங்கம், வெள்ளி, மின்னணுப் பொருள்கள், கஞ்சாக் கடத்தல் ஆகியவற்றில் மட்டும்தான் ஈடுபட்டிருந்தான்.

பாகிஸ்தான் தாவூதுக்கு புதிய பெயர், புதிய பாஸ்போர்ட், புதிய வாழ்க்கை என எல்லாம் தருவதற்குத் தயாராக இருந்தது. அதில் ஒரு சிக்கலும் இருந்தது. அங்கே தாவூத் அவர்களுடைய கையில் ஒரு பகடைக்காயாக இருக்கவேண்டும். ஆனால் அவன், தாவூத் இப்ராகிம். பாகிஸ்தானை தன்னுடைய பாட்டுக்கு ஏற்ப ஆடவைக்க முடியும் என்ற நம்பிக்கை தாவூதுக்கு இருந்தது. அதுவும் பணப்பையின் கயிறு தாவூதின் பிடியில் இருந்ததால், அதில் சிரமம் இருக்கும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அதனால் தனக்குப் பிடித்த மும்பையை விட்டு, எல்லை தாண்டுவதென்று முடிவெடுத்தான்.

இப்படித்தான் இந்தியாவின் எதிரி தேசமாகக் கருதப்படும் பாகிஸ்தானுக்குக் குடிபோனான் தாவூத். கடந்த நாற்பது வருடங்களில் இந்தியா-பாகிஸ்தான் உறவை மாற்றியமைத்தவர்கள் இருவர். ஒருவன், தாவூத் இப்ராகிம். இன்னொருவர் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் ஜியா-உல்-ஹக். சலாஃபி இயக்கத்தை காஷ்மீருக்குள் புகுத்தி, அங்கிருந்த சூஃபி முஸ்லீம்களை தீவிரவாதத்தின் பக்கம் ஜியா-உல்-ஹக் திருப்பினார் என்றால், இந்த இருநாடுகளுக்கு இடையேயான உறவை திரும்பவும் சரிசெய்ய முடியாதபடிக்குக் கசக்க வைத்தான் தாவூத்.

அந்தச் சூழ்நிலை ஒரு நிலையான, தொடர் நகைச்சுவையாக மாறியது. ஒவ்வொரு முறை இந்தியா ஈனமான குரலில் தாவூதைக் கேட்கும்போதும், பாகிஸ்தான் ‘நேர் கொண்ட பார்வை’யுடன் அவன் தங்கள் மண்ணில் இருப்பதை மறுத்துவிடும். அதேநேரம் தேவைப்படும்போது, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தும் துருப்புச்சீட்டாகவும் இருக்கிறான் தாவூத். இந்தியா, பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாவி தாவூத் என்பது இரு நாடுகளுக்குமே தெரிந்துதான் இருக்கிறது.

…அகதியாகவும், சட்டத்தை மீறியவனாகவும் இந்தியச் சட்டத்தின் பிடிக்கு வெளியே அவன் தங்கியிருப்பது இந்தியா வில் பலருக்கு வசதியாக இருக்கலாம். அவனுடைய பணத்தில் கட்டப்பட்ட பலரது ராஜ்யங்கள், அவன் இந்தியாவுக்குத் திரும்பி வந்தால் தரைமட்டமாகலாம். பழைய கதைகள் தோண்டி எடுக்கப்படலாம். தாவூத் பாகிஸ்தானிலேயே தங்க நேர்ந்ததற்கு மேற்படி நபர்களுடைய அதிகாரம்கூட காரணமாக இருக்கலாம். அதன் மூலம் தாவூதின் மரபு நிலைத்திருக்க அவர்கள் வழி செய்திருக்கலாம்.

அவனது டிரேட் மார்க் மீசையும், உதடுகளுக்கு இடையே பொருத்திய சிகாரும் தொடர்ச்சியாக பாலிவுட்டில் படமாக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அவனைப் பற்றி பேச்சு தொடர்ந்துகொண்டே இருக்கும். தாவூத் தொடர்ந்து நழுவிக்கொண்டே இருப்பான். உண்மையான தாவூத் ஒரு புதிர்தான். அவனையும், அவனுடைய உலகத்தையும் புரிந்துகொள்ளச் செய்யும் ஒரு சிறு முயற்சியாக இந்தப் புத்தகம் இருக்கும்.''


நன்றி :- தி இந்து

No comments:

Post a Comment