Sunday, October 4, 2015

ரூ.3,770 கோடி கருப்புப் பணம் ! 638 பேர் ஒப்புக் கொண்டதாக மத்திய அரசு தகவல் !

வெளிநாடுகளில் ரூ.3,770 கோடி கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக 638 பேர் வருமான வரித் துறையிடம் ஒப்புக் கொண்டனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 கருப்புப் பணத்தை மீட்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமாக, சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வந்தது.

 இந்நிலையில், குறிப்பிட்ட காலத்துக்குள் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் தாமாக முன்வந்து தகவல்களைத் தெரிவித்தால், சிறைத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அவ்வாறு தகவல் அளிப்பவர்களிடமிருந்து 30 சதவீதம் வருமான வரி, 30 சதவீதம் அபராதம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 அதற்கான காலக்கெடு ஜூலை 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டது. கருப்புப் பணம் குறித்த தகவல்களை பகிரங்கரமாக தெரியப்படுத்துவதற்கு புதன்கிழமை இறுதி நாள் என்பதால், அன்றைய தினம் அதிக எண்ணிக்கையிலானோர், தங்களது தகவல்களை வருமான வரித் துறைக்குத் தெரியப்படுத்தியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இதுகுறித்து நிதித் துறை அமைச்சகம் வியாழக்கிழமû வெளியிட்ட செய்தி: வெளிநாடுகளில் சொத்துகள், கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள் 638 பேர், தங்களது தகவல்களை வெளியிட்டனர். அவர்கள் ரூ.3,770 கோடி பணத்தை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. 

 சம்பந்தப்பட்ட நபர்கள், தாங்கள் பதுக்கி வைத்த தொகையில் 30 சதவீதத்தை அபராதமாகவும், 30 சதவீதத்தை வருமான வரியாகவும் டிசம்பருக்குள் செலுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் அளித்த விவரங்களின் அடிப்படையில், 638 பேரிடம் உள்ள கருப்புப் பணத்தின் மதிப்பு ரூ.3,770 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. 

 துல்லியமாகக் கணக்கிடும்போது அதில் சிறிது மாற்றங்கள் இருக்க வாய்ப்புண்டு என மத்திய அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதுகுறித்து மத்திய வருவாய்த் துறைச் செயலர் ஹேஷ்முக் அதியா தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள், தங்களது விவரங்களை பகிரங்கமாக வெளியிட 90 நாள்கள் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் தாமாக முன்வந்து தகவல்களைத் தெரிவித்தனர்.

 தற்போது, கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளது தொடர்பான தகவல்களை வெளியிடாதவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் பணிகளைத் தொடங்க உள்ளது என்றார் அவர். 

 காங்கிரஸ் விமர்சனம்

 மத்திய அரசின் கருப்புப் பண மீட்பு நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை 100 நாள்களுக்குள் மீட்பதாக தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்னவாயிற்று? என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

 இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, தில்லியில் ஊடகங்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

 வெளிநாடுகளில் ரூ.80 லட்சம் கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்த மோடி, அதை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்துவதாக வாக்குறுதி அளித்தார்.

 அவர் பிரதமராகப் பொறுப்பேற்று 16 மாதங்கள் கடந்துள்ளன. கருப்புப் பண மீட்பு சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அவற்றால் நமக்குக் கிடைத்தது என்ன? கருப்புப் பண மீட்பு நடவடிக்கையில், ரூ. 3,770 கோடி இருப்பது மட்டுமே தற்போது தெரியவந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்றார் ரண்தீப் சுர்ஜேவாலா.
நன்றி :- தினமணீ

No comments:

Post a Comment