Tuesday, October 6, 2015

காதலை மற... கற்றதை நினை!


எனது வயது 27. நான் எனது உறவுக்காரப் பெண்ணை கடந்த‌ 7 மாதமாக காதலித்துவருகிறேன். பள்ளி, கல்லூரியில் பெண்களுடன் அதிகம் பேசியதில்லை. அவள் ஒரு நாள் ஃபேஸ்புக்கில் எனக்கு செய்தி அனுப்பியிருந்தாள். அன்றிலிருந்து நாங்கள் இருவரும் தொலைபேசியிலும் பேசிவந்தோம்.

இந்த நிலையில் ஒரு நாள் அவளிடம் என் காதலைச் சொன்னேன். ஆனால் அவளோ 'எனது பெற்றோர் சொல்படிதான் நடப்பேன்' என்கிறாள். இதுவரை அவள் என்னை காதலிப்பதாகக் கூறியதில்லை. நான்தான் ‘இவளே என் மனைவி' என்று நிறைய கனவுகளுடன் ஆழமாக அவளைக் காதலிக்கிறேன்.

இப்போது அவள் என்னிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசுவதில்லை. ஆனால் நானோ அவளிடம் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது வலியச் சென்று பேசுகிறேன். கடந்த சில நாட்களாக எங்கள் இருவருக்கும் இடையில் அதிகம் சண்டை வருகிறது. இவள் எனக்கு ஏற்றவள் இல்லையோ என தோன்றுகிறது. இருந்தாலும் அவளை மறக்க முடியாமல் திணறுகிறேன்.

அவள் அதீதமாக‌ப் பெற்றோருக்குப் பயப்படுகிறாளோ என்று நினைக்கிறேன். நான் அவளிடம் காட்டும் அன்பில் சிறிதளவுகூட அவள் என் மீது காட்டியது இல்லை. இதையெல்லாம் நினைத்து நினைத்து என்னால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியவில்லை. நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு இதைப் பற்றியெல்லாம் யோசிக்கும்போது தலைவலி வருகிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேனோ என்று அஞ்சுகிறேன். இதிலிருந்து மீள வழி சொல்லுங்கள். ப்ளீஸ்...

ஒரு பெண் தானாக ஃபேஸ்புக்கில் பேச ஆரம்பித்ததை மட்டும் வைத்து காதலிக்கிறார் என்ற முடிவுக்கு வந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்! ‘விண்ணைத் தாண்டி வருவாயா' நாயகி ஜெஸ்ஸி மாதிரி நடந்துகொள்கிறாரே உங்கள் காதலி?!

உங்களுக்கு ஏற்றவள் இல்லை என்று தோன்ற ஆரம்பித்த பின் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை. அடுத்து என்ன என்று குழப்பமாக இருக்கிறது இப்போது! அவரது காதல் ஆழமாக இருந்திருந்தால் பயத்தையும் மீறி பெற்றோரிடம் போராடியிருப்பாரே!

உங்களையும் காதலையும் பெற்றோருக்காகத் தியாகம் செய்யத் தயாராக இருப்பவருக்காக உங்களை ஏன் வருத்திக்கொள்கிறீர்கள்? காதலி உங்கள் வாழ்வில் வருவதற்கு முன்பு நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையா? அவரால் வந்த சந்தோஷம் மட்டுமே காணாமல் போயிருக்கிறது. அப்போதிருந்த மகிழ்ச்சியை எப்படித் திரும்பக் கொண்டுவருவது என்று பாருங்கள்.

ஆரம்ப காலக் காதல், போதை மாதிரி கிறங்க வைக்கும். சில காலத்தில் போதை இறங்கிய பின் துணைவரிடம் உள்ள குறைகள் தெரிய ஆரம்பிக்கும். அதனால் கோபம், சண்டை எல்லாம் அதிகமாகிவிடும். உங்கள் நல்லகாலம், இப்போதே புரிந்துவிட்ட

பேசினால் அவரை மறக்க முடியாது. கசப்பான அனுவங்களை அசைபோடுவதால் மேலும் மன அழுத்தமும், சோர்வும் அதிகரிக்கும். அவற்றை நினைக்காதீர்கள். ஆனால் அவற்றில் கற்றுக்கொண்ட பாடத்தை மறக்காதீர்கள். ஆருயிர் காதலிக்கு எது வேண்டுமோ அதைச் செய்ய விடுங்கள். அவரை மறக்க முடியும் என்று நினைக்க ஆரம்பியுங்கள்.

தினசரி வாழ்வில் காலை முதல் இரவு வரை உங்களை ‘பிஸி'யாக வைத்துக்கொள்ளுங்கள். அவரைப் பற்றி நினைக்கக்கூட நேரமில்லாதபடிக்கு, வேலை, யோகா, தியானம், நுண்கலைப் பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்றவற்றைக் கற்றுக்கொண்டு உங்கள் கவனத்தை அவற்றில் செலுத்துங்கள். மனதின் வெறுமையைப் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் நிரப்புங்கள்!

Image result for உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்


என் வயது 22. 2010-ம் வருடம் தனியார் கல்லூரி ஒன்றில் சேர்ந்தேன். தமிழ் வழிக் கல்வி பயின்றதால் தொடக்கத்தில் சற்று பதற்றத்துடன் இருப்பேன். வகுப்பில் பெண்களுடன் பேச மிகவும் தயங்குவேன். அவர்கள் இருக்கும் பக்கம் கூடத் திரும்ப மாட்டேன். கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையும் இருந்தது.

பின், எனக்குக் கிடைத்த நண்பர்கள் இருவர் என்னை அதிலிருந்து ஓரளவு வெளியே கொண்டுவந்தனர். இரண்டாம் ஆண்டு படிக்கும்போது என் வகுப்புப் பெண் ஒருவரைக் காதலிக்கத் தொடங்கினேன். என் நண்பர்கள் மூலம் இந்த விஷயம் அவளுக்குத் தெரிந்தது.
பின்னர் என் நண்பர்களிடம், 'என் மனதில் அப்படியான எண்ணம் எதுவும் இல்லை' என்று கோபமாகக் கூறிவிட்டாள். கல்லூரி முடியும் கடைசி நாள் அவளிடம் என் காதலைச் சொல்லலாம் என முடிவெடுத்தேன். ஆனால், என்னால் அது முடியவில்லை.

அவள் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இப்போது வேலை செய்கிறாள். நான், இப்போது மேற்படிப்பு இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன்.

இடைப்பட்ட காலத்தில் நாங்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவள் அஞ்சல் வழியில் படித்துக்கொண்டிருந்ததால் அவளுக்குச் சில புத்தகங்கள் தேவைப்பட்டது. என்னிடமிருந்த சில புத்தகங்களைக் கொடுத்தேன். அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் நீண்ட நேரம் போனில் பேசிக்கொள்ளத் தொடங்கினோம். போன் பேச்சுகள் எனது காதலை மேலும் அதிகபடுத்தின. ஆனால், அதே அளவு பயமும் இருந்தது. எங்கே காதலைச் சொன்னால் நம்மிடம் இருந்து பிரிந்து சென்றுவிடுவாளோ, பிறகு நம்மால் பேசக்கூட இயலாதோ என பயந்தேன்.

இருந்தாலும் அவள் பிறந்த நாளில் அவளிடம் என் காதலை தெரிவித்தேன். அவளோ, ‘உனக்கு என்னைவிட நல்ல பெண் கிடைப்பாள். எங்கள் வீடு பற்றி உனக்குத் தெரியாது. நான் என் தாய் தந்தை பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் மணந்துகொள்வேன்' என்றாள்.

நான் ‘எனக்கு இரண்டு வருடம் அவகாசம் கொடு. உன் வீட்டில் வந்து பேசுகிறேன்' என்றேன். அவள் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். பதில் ஏதும் சொல்லவில்லை.
அவளின் அப்பா கண்டிப்பானவர். அவள் தன் தாய் தந்தையர் மீது உயிரையே வைத்திருக்கிறாள். இதனால் அவள் மீதான மரியாதை மேலும் அதிகரித்தது.
அவளை மறக்க இயலாமல் மனதுக்குக் கஷ்டமாக உள்ளது. தற்போது மேற்படிப்பை முடிக்க உள்ளேன். ஒரு நல்ல பணியில் சேர்ந்த பின்பு மீண்டும் அவளிடம் பேசலாம் என தோன்றுகிறது. இருந்தாலும் ஒருபுறம் ‘நான் மட்டும்தான் காதலித்தேனோ, அவள் என்னை காதலிக்கவில்லயோ? என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாளோ?' என்று குழப்பமாக உள்ளது. உங்கள் ஆலோசனை வேண்டுகிறேன்.

காதல் கிரிக்கெட்டில் விக்கெட் விழுந்து, டக் அவுட் ஆயாச்சு. ஆனால் விளையாட்டு இன்னும் முடியவில்லையே! அதற்குள் ஏன் மறப்பதைப் பற்றி நினைக்கிறீர்கள்? உங்களைப் பிடிக்கவில்லை என்று அவர் சொல்லவில்லையே! காதலுக்குத் திரை போட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
இனி அவரிடம் பேச வேண்டாம். காதலில் வெற்றியா, தோல்வியா என்று தெரியாத இந்த நேரத்தில் இருவரும் மேலும் ஆசையை வளர்த்துக்கொள்வது நல்லதல்ல. உங்கள் கவனம் படிப்பிலும் வேலையிலும் இருக்க வேண்டும்.

வேலையில் அமர்ந்த பின் அவரது பெற்றோரிடம் முறையாகப் பெண் கேளுங்கள். சாமர்த்தியமாகக் காயை நகர்த்துங்கள். யார் மூலம் அவர்களை நெருங்கினால் நடக்கக்கூடுமோ, அவரை அணுகுங்கள். நடந்தால் காதலுக்கு வெற்றி. பெற்றோரை மீறிக் காதலி வர சம்மதித்தாலும் வெற்றியே! ஆனால் வர மாட்டார் என்றுதான் தோன்றுகிறது.

வாழ்வில் வெற்றி, தோல்வி இரண்டையும் எதிர்கொள்ளப் பழக வேண்டும். முக்கியமாக, காதல் இருவர் சம்பந்தப்பட்டது. ஆனால் திருமணம் இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. அதனால் காதலின் எதிர்காலம் என்ன என்று காதலர்கள் குறிசொல்ல இயலாது. காதல் தானாக அரும்புவது. பெற்றொரின் சம்மதம் கேட்டா காதலிக்க முடியும்? வேறு பல சூழ்நிலைகளைப் பொறுத்து காதல் வெல்வதும் தோற்பதும் இருக்கையில், இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
இப்போதே ஏன் தோற்றுவிட்டதாக முடிவு செய்துவிட்டீர்கள்? பின்னால் தோற்றாலும், ‘என்னால் முடிந்தவரை முயன்றுவிட்டேன்' என்கிற திருப்தியாவது இருக்கும். அவரிடம் பேசாமல் இருக்கும் காலகட்டத்தில் அவருக்கும் நீங்கள் வேண்டுமா, இல்லையா என்பதில் ஒரு தெளிவு பிறக்கும். நாளை என்ன நடக்கும் என்கிற கவலையில் இன்றைய தினத்தைக் கோட்டைவிடாதீர்கள். பிரச்சினை வரும்போது கவலைப்படலாமே!

Image result for உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். 

உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். 

முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 

124, வாலாஜா சாலை, சென்னை-600 002. 

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

No comments:

Post a Comment