Monday, October 12, 2015

அந்தக் குடும்பத்துக்குக் கொடுத்து வைக்கலை ஜெனிபர்!


அமெரிக்காவில் வசிக்கும் 27 வயது ஜெனிபர் ப்ரிகர் அக்ரோபடிக்ஸ் கலைஞர். ருமேனியாவில் ஒரு தம்பதிக்கு மூன்று மகள்களில் ஒருவராகப் பிறந்தவர். பிறக்கும்போதே அவருக்குக் கால்கள் இல்லை. அதனால் அவரது தந்தை குழந்தையை வளர்க்க விரும்பவில்லை. அமெரிக்க தம்பதிகள் ஜெனிபரைத் தத்தெடுத்துக்கொண்டனர். அக்ரோபடிக்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் இயல்பிலேயே ஜெனிபருக்கு ஆர்வம் வந்தது. அதனால் அந்தக் கலைகளைக் கற்றுக்கொண்டார்.

‘‘என் பெற்றோர், என் குடும்பம், என் பள்ளி, என் பயிற்சியாளர் என்று யாருமே என் குறைபாட்டைச் சுட்டிக் காட்டியதில்லை. என் பெற்றோர் நான் குழந்தையாக இருந்தபோதே தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்று எனக்குப் புரிய வைத்துவிட்டனர். 11 வயதில் என் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற டொமினிக் மொசியனு போலவே இருப்பதாகச் சொன்னார்கள். சற்று வளர்ந்த பிறகு எனக்கும் அவருக்குமான தொடர்பு பற்றி ஆராய்ந்தேன்.

அவரும் ருமேனியாவைச் சேர்ந்தவர். இருவருக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் மீது ஆர்வம். என் பெற்றோரிடம் விசாரித்தபோது மொசியனு என்பதுதான் என்னைப் பெற்றவரின் பெயர் என்றனர். நான் சிறுவயதில் என் ரோல்மாடலாகக் கருதியவர் என் சகோதரி என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். நானும் டொமினிக்கும் சகோதரிகள் என்பதை உறுதி செய்துகொண்டேன்.

பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். பேச முடியவில்லை. ஒரு கடிதமாக எழுதி, பத்திரிகையில் பிரசுரம் செய்தேன். என்னைப் பெற்ற அப்பா இப்பொழுது உயிருடன் இல்லை. அம்மாவையும் சகோதரிகளையும் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். டிஎன்ஏ பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தேன். ஆனால் செய்தி அறிந்த டொமினிக் ஆத்திரம் அடைந்துவிட்டார். பிறகு, எனக்கென்று மிக அருமையான பெற்றோரும் சகோதரர்களும் இருக்கிறார்கள். நான் என்னை முன்னேற்றிக்கொள்வதில் கவனத்தைத் திருப்பினேன். இன்று எல்லோரும் பாராட்டும் பெண்ணாக உயர்ந்திருக்கிறேன். பலருக்கு ரோல்மாடலாக இருக்கிறேன்’’ என்கிறார் ஜெனிபர்.

அந்தக் குடும்பத்துக்குக் கொடுத்து வைக்கலை ஜெனிபர்!

நன்றி :- தி இந்து

No comments:

Post a Comment