திகில் தரும் பேய்ப் படங்கள் என்றால் சிலருக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுக்காகவே கலிஃபோர்னியாவில் மெக்கேமே மனார் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த திகில் மாளிகையில், திரைப் படங்களில் காட்டப்படும் சம்பவங்களை நேரிடையாகக் காண முடியும்! அதாவது மாளிகைக்குள் திகிலூட்டும் இசையுடன் மனிதர்கள் நடமாடுவார்கள். அவர்களின் முகம் கோரமாக இருக்கும்.

சில பொருட்களை வீசியடிப்பார்கள். பயங்கரமாகக் கத்துவார்கள். சில நேரங்களில் தொடக்கூடச் செய்வார்கள். 45 நிமிடங்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நிமிடத்துக்கு நிமிடம் திகில் அதிகரிக்கும். உள்ளே நுழைந்துவிட்டால் எக்காரணம் கொண்டும் வெளியில் வர முடியாது. உடல் ஆரோக்கியம், தைரியம் போன்றவற்றை எல்லாம் சோதித்த பிறகே நிகழ்ச்சிக்கு டிக்கெட் வழங்குகிறார்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இது இருக்கும் என்கிறார்கள். இந்தத் திகில் அனுபவத்தைப் பெற ஆயிரக்கணக்கானவர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்!

பேய், பிசாச வச்சு இப்படியும் சம்பாதிக்கலாம்!

சீனாவில் மிக விலை உயர்ந்த காரில் வந்து இறங்கிய ஓர் ஆணும் பெண்ணும், நடைபாதையில் ஸ்கார்ஃப் துணிகளைப் பரப்பினார்கள். உடனே வியாபாரம் சூடு பிடித்தது. சாலையோரக் கடைகள் தடை செய்யப்பட்டுள்ள பகுதி என்பதால், போலீஸார் விசாரணைக்கு வந்துவிட்டார்கள். ‘விலை உயர்ந்த காரை வாங்கித் தந்த பெற்றோர், காருக்கான எரிபொருள் வாங்க பணம் தரவில்லை.

எரிபொருள் போடுவதற்கான பணத்தைப் பெற, இந்த ஸ்கார்ஃப் விற்பனையை என் தோழியின் ஆலோசனையில் ஆரம்பித்தேன்’ என்று சொல்லியிருக்கிறார் அந்த இளைஞர். காரணத்தைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த போலீஸார், அங்கிருந்து செல்லும்படி கூறிவிட்டார். காரில் துணிகளைத் திணித்துக்கொண்டு சென்றவர்கள், சற்று தூரத்தில் இன்னொரு நடைபாதையில் தங்கள் கடையை விரித்துவிட்டார்கள்.

நல்ல பெற்றோர், நல்ல பிள்ளை!

சீனாவில் ஒட்டகங்கள் அருகி வருகின்றன. வயதான, நோயுற்ற, காயம் அடைந்த ஒட்டகங்களை வைத்து, பிச்சை கேட்டு வருவது அதிகரித்திருக்கிறது. ஒட்டகங்களைக் கண்டதும் மக்கள் மிகவும் இரக்கம்கொள்கிறார்கள். உடனே ஒட்டகத்தைக் காக்கும் நோக்கில் அதிகப் பணத்தைக் கொடுக்கிறார்கள். இதனால் பிச்சைக்காரர்களுக்கு வருமானம் அதிகரித்து வருகிறது. ஒட்டகத்தை வைத்து வித்தை காட்டாமல், தெரு ஓரத்தில் கட்டி வைத்துப் பிச்சை எடுப்பதைச் சட்டபூர்வமாகத் தடுக்க இயலவில்லை. ‘நீங்கள் கொடுக்கும் பணம் ஒட்டகத்துக்கு எந்தவிதத்திலும் பயனளிப்பதில்லை. எனவே பிச்சை போட வேண்டாம்’ என்று விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் மக்களிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இங்க யானை, அங்க ஒட்டகம்!

22 வயது ஜார்ஜியா ஹோராக்ஸ் லண்டனைச் சேர்ந்தவர். இ-பே ஆன்லைன் வர்த்தக தளத்தில் ஒரு விளம்பரம் செய்திருக்கிறார். அவருடைய கற்பனை நண்பன் பெர்னார்டை, இருபதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாகச் சொல்லியிருக்கிறார். ‘பிரமாதமான குணநலன்கள் கொண்ட நண்பனை விட்டுவிடும்படி என் மனநல மருத்துவர் சொல்லிவிட்டதால் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். அருமையான நண்பன், வேறு யாருக்காவது உதவலாம். டெலிவரி சார்ஜ் கூட இல்லை’ இல்லை என்கிறார் ஜார்ஜியா!

நண்பேண்டா!

Keywords: உலக மசாலா, தி இந்து