Sunday, August 31, 2014

நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் திருட்டு


சென்னை எழும்பூரில் நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
எழும்பூர் பாந்தியன் சாலையில் பழைய காவல் ஆணையர் அலுவலகம் அருகே நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 60 நீதிபதியின் வீடுகள் உள்ளன. இங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குடியிருப்பில் டி பிளாக்கில் 3-ஆவது தளத்தில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டின் டேவிட், தனது குடும்பத்தினரோடு வசித்து வந்தார்.
டேவிட், கடந்த வியாழக்கிழமை குடும்பத்தினரோடு தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்குச் சென்றார். இந்நிலையில், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தடா நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் வெள்ளிக்கிழமை இரவு, டேவிட்டின் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், பெருநகர காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் அவரது வீட்டு பீரோவை உடைத்து, அதில் இருந்த 30 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்தனர். இதுகுறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பலத்த பாதுகாப்பை மீறி..
நீதிபதிகள் குடியிருப்பு பின்பகுதியில் எழும்பூர் நீதிமன்ற வளாகம் உள்ளது. குடியிருப்பையொட்டி உள்ள பழைய ஆணையர் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம், பெருநகர காவல்துறையின் வடக்கு, கிழக்கு மண்டலங்களின் இணை ஆணையர்களின் அலுவலகங்கள், ஆயுதப்படை வீரர்களின் பாரக்ஸ், குதிரைப்படை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் எப்போதும் போலீஸாரின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
இதன் காரணமாக நீதிபதிகள் குடியிருப்பு மிகுந்த பாதுகாப்புமிக்க பகுதியாக கருதப்பட்டது. ஆனால், அனைத்து பாதுகாப்புகளையும் மீறி நீதிபதி வீட்டில் நகைகள் திருடப்பட்டிருப்பது காவல்துறையினரிடமும் பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினமணி

No comments:

Post a Comment