Sunday, August 31, 2014

விபத்துகளில் பலியான 14 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம்: ஜெயலலிதா


தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்தும், விஷவாயு தாக்கியும் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
திருக்கோவிலூர், தகடி கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பனின் மகன்கள் சிவகண்டன், பூமிநாதன் இருவரும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர்.
வேதாரண்யம், வெள்ளப்பள்ளம் ஊராட்சியைச் சேர்ந்த முருகையனின் மனைவி கருப்பாச்சி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பால் காலமானார்.
சென்னை பாடியைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் முருகன், ராமச்சந்திரனின் மகன் பாஸ்கரன் ஆகிய இருவரும் அம்பத்தூர், கஞ்சனாகுப்பம் பகுதி அருகே கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
மாதவரம் செங்குன்றம் நெடுஞ்சாலை அருகில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிமெண்ட் சுவர் இடையே சிக்கி, பெரியார் நகர் ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்த பொன்னுசாமியின் மகன் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை கொய்யாத்தோப்பு, குடிசைப்பகுதி மாற்று வாரியக் குடியிருப்பில் வசித்து வந்த மாநகராட்சி துப்புரவுப் பணியாளர் சீனிவாசன் பணியில் இருந்தபோது மயக்கம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தூத்துக்குடி அன்னை தெரசா மீனவர் காலனியில் கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கியதில் மாரியப்பனின் மகன் கலையரசன், சுப்பையாவின் மகன் மாரியப்பன், அமலதாசனின் மகன் பீட்டர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சங்கரன்கோவில், தெற்கு குருவிக்குளம் கிராமம் அருகே மின்னல் தாக்கியதில் வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கடற்கரையின் மகன் கருப்பையா, வடக்கு குருவிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னகுருசாமியின் மகன் நம்பிராஜன், செங்கோட்டை வட்டம், நெடுவயல் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமியின் மகன் சங்கர் கணேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பல்லிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நயினாரின் மனைவி பாப்பாத்தி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்தச் செய்திகளைக் கேட்டு நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த சம்பவங்களில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
நன்றி :தினமணி

No comments:

Post a Comment