Saturday, November 30, 2013

சங்கரராமன் கொலை வழக்கு



     புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு
  வெளியே வரும் காஞ்சி சங்கராச்சாரியார் 
ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். 
                                            விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சுந்தரேசன், ரகு உள்பட குற்றம் சாட்டப்பட்ட 23 பேரையும் புதுவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது.

கொலைக்கான போதிய ஆதாரங்களை அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி தலைமை நீதிபதி சி.எஸ்.முருகன், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதன்கிழமை உத்தரவிட்டார்.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவரை மர்ம கும்பல் கோயில் அலுவலகத்திலேயே கடந்த 3.9.2004-ல் வெட்டிக் கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பியது.

இதுதொடர்பாக கோயில் கணக்காளராக இருந்த கணேஷ், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த மோகன்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

25 பேர் கைது: இக்கொலை தொடர்பாக, காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், என்.சுந்தரேசன், கே.ரகு, கே.ஜி.கிருஷ்ணசாமி என்ற அப்பு, கதிரவன், ரஜினிகாந்த் என்ற சின்னா, அம்பி என்ற அம்பிகாபதி, பாஸ்கர் என்ற மாட்டு பாஸ்கர், கே.எஸ்.குமார், ஆனந்தகுமார், அனில் என்ற அனில்குமார், மீனாட்சி சுந்தரம் என்ற சுந்தர், ஆர்.டி.பழனி, ரவி என்ற குருவி ரவி, ஆறுமுகம், பாண்டியன் என்ற தில் பாண்டியன், சதீஷ், தேவராஜ், அருண், ஆறுமுகம், சேகர், சில்வஸ்டர் ஸ்டாலின், செந்தில்குமார், ரவி சுப்பிரமணியன் ஆகிய 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறி விட்டார். ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரையும் முக்கியக் குற்றவாளிகளாக போலீஸார் வழக்கில் கூறியிருந்தனர்.

1,873 பக்கக் குற்றப்பத்திரிகை:

மொத்தம் 1,873 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 370 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். 712 ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன.

வழக்கு புதுவைக்கு மாற்றம்:

செங்கல்பட்டில் உள்ள மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கவிருந்த நிலையில் தமிழகத்தில் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறாது எனக் கூறி சங்கராச்சாரியார் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர்.

உச்சநீதிமன்ற ஆணையின்படி புதுவை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

கடந்த 28.10.2005-ல் இருந்து 8 ஆண்டுகளாக புதுவை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. மொத்தம் 370 சாட்சிகளில் 187 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டோரில் கதிரவன் என்பவர் சென்னையில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

83 பேர் பிறழ் சாட்சியம்: அப்ரூவர் ரவி சுப்பிரமணியன், சங்கரராமன் மனைவி பத்மா, மகள் உமா மைத்ரேயி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் மூவர் உள்பட 83 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை தற்போது நிறைவடைந்து இவ்வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அனைவரும் விடுதலை: சங்கரராமன் கொலை வழக்கு அரசுத் தரப்பில் முறையாக நிரூபிக்கப்படவில்லை. இதனால் அனைவரையும் விடுதலை செய்கிறேன் எனக்கூறி தலைமை நீதிபதி முருகன் தீர்ப்பு வழங்கினார்.

மேல்முறையீடு: அரசு முடிவு செய்யும்

சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக மாநில அரசு முடிவு செய்யும் என சிறப்பு அரசு வழக்குரைஞர் பி.தேவதாஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 23 பேரை விடுதலை செய்து புதுவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சிறப்பு வழக்குரைஞர் தேவதாஸ் கூறியதாவது: வழக்கில் அனைவரையும் விடுதலை செய்தது திருப்தி தரவில்லை. இவ்வழக்கு தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக அரசுத் தரப்பு கடினமாக பாடுபட்டது.

இவ்வழக்கில் அரசுத் தரப்பைச் சேர்ந்த 83 சாட்சியங்கள் பிறழ் சாட்சியம் அளித்தனர். பிறழ் சாட்சியம் தொடர்பாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை மேற்கோள் காட்டினோம். ஆனால் அதை நீதிபதி ஏற்கவில்லை. இதுதொடர்பாக அறிக்கை தயார் செய்து புதுவை அரசிடம் அளிப்போம்.

அப்ரூவர் ரவிசுப்பிரமணியம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பொய் சாட்சியம் அளித்தது தொடர்பாக பின்னர் தனியாக விசாரணை நடத்தப்படும். சங்கரராமன் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்வது குறித்து மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார் தேவதாஸ்.                                               

நன்றி ;- தினமணி , 27 - 11 - 2013

No comments:

Post a Comment