Saturday, November 30, 2013

6-பேர் பலி. கூடங்குளம் அணு உலைப் பாதுகாப்பு ?

 

 பாதுகாக்கப்பட்ட பகுதியான கூடங்குளம் அணு உலை அருகே, இடிந்தகரை சுனாமி காலனியில், நாட்டு வெடிகுண்டு வெடித்து, 6 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் அணு உலை பாதுகாப்பு கேள்விக்குறி யாகியுள்ளது. இந்தக் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகளைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில், அணு உலை அமைந்திருக்கும் இடத்தி லிருந்து 2 கி.மீ. தொலைவில், இடிந்தகரை சுனாமி காலனி அமைந்துள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடை பெறும் போராட்டங்களில், சுனாமி காலனி மக்களும் பங்கெடுத்தனர். இப்போராட்டம் நடைபெற்றுவந்த நேரத்தில், அருகிலுள்ள கூத்தன்குழி கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதம், இரு தரப்பு மீனவர்கள் மோதல் உச்சத்தை அடைந்தது. இதனால், ஒரு தரப்பினர் அங்கிருந்து வெளியேறி, இடிந்தகரை சுனாமி குடியிருப்பு பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.

கூத்தன்குழி மீனவர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதும், அவை அவ்வப்போது வெடித்து உயிர் பலி, காயங்கள் நேருவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன், சுனாமி காலனிக்கு வந்து குடிபெயர்ந்தவர்களும் வெடிகுண்டுகள் தயாரிக்கக் கூடும் என்று அங்குள்ளவர்கள் அஞ்சினர்.

மாதா பெயரில் சத்தியம்

இதுகுறித்து ஊர் கமிட்டி நிர்வாகிகள் விவாதித்து, வெடிகுண்டு தயாரிக்க கூடாது என, கூத்தன்குழி பகுதியிலிருந்து வந்தவர்களிடம், மாதா கோயிலில் சத்தியம் வாங்கிய பிறகே, சுனாமி காலனியில் அவர்களை தொடர்ந்து தங்கவைத்தனர். ஆயினும், அங்கு வெடிகுண்டு தயாரிப்பது, மிகப்பெரிய தொழிலாகவே தொடர்ந்தது.

கூத்தன்குழி கிராமத்தை சேர்ந்த ஜெனி என்பவரது பெயரிலுள்ள வீட்டில், செவ்வாய்க்கிழமை மாலை சிலர், நாட்டு வெடிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தயாரான வெடிகுண்டுகளை வேறு சிலர் பெட்டிகளில் அடுக்கி, நாட்டுப்படகு மூலம், கூத்தன்குழிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில், அந்த வீடு தரைமட்ட மானது. அருகிலுள்ள ரோஸ்லின், ராணி, மரிய அல்போன்ஸ், அன்பரசி ஆகியோரது வீடுகளும் சேதமடைந்தன.

6 பேர் உயிரிழப்பு

வெடிகுண்டுகள் வெடித்து நாலாபுறமும் கற்கள் சிதறிய வேகத்தில், அருகில் பீடி சுற்றிக்கொண்டிருந்த, சகாயம் மனைவி ரோஸ்லின் (35), அவரது குழந்தைகள் சுபிசா (10), சுபிசன் (2) தூக்கி வீசப்பட்டனர். இதில் சுபிசாவும், சுபிசனும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். ரோஸ்லின் பலத்த காயமடைந்தார்.

இதுபோல், வெடிகுண்டுகள் வைக்கப் பட்டிருந்த வீட்டிலிருந்த கூத்தன்குழியை சேர்ந்த யாகப்பன்(32), மோசஸ் மகன் வளன் (27), சந்தானசூசை மகன் மகிமைராஜ் (31) ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். அவர்களில் வளன், மகிமைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கால்கள் துண்டிக்கப்பட்ட யாகப்பன், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேலும், சுனாமி காலனியை சேர்ந்த தொம்மை மனைவி பிரமிளா (35) என்பவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். வெடிகுண்டுகள் வெடித்த போது, அவ்வழியாக சென்றுகொண்டிருந்த சந்தியாகு மகன் விஜயன்(18), இயேசு

மரிய சூசை (45) பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மெட்டல் டிடெக்டர் சோதனை

திருநெல்வேலியிலிருந்து, மோப்ப நாயுடன் வந்திருந்த வெடிகுண்டு நிபுணர்கள், இடிபாடுகள் காணப்பட்ட பகுதியில் மெட்டல் டிடெக்டர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைகளில் அடைக்கப்பட்டிருந்த வெடி

மருந்து பொருட்கள் சிக்கின. 20 மீட்டர் தொலைவில் கிடந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது. வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட வீடுகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

கோரக்காட்சிகள்

வெடிகுண்டுகளும், வெடிப்பொருட்க ளும் ஒருசேர வெடித்ததால் அந்த காலனி பகுதியே நிலநடுக்கத்தால் அதிர்ந்தது போன்று உணர்ந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இடிபாடுகளுடன் இறந்தவர்களின் உடல் பாகங்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

அணு உலைக்கு ஆபத்து

இடிந்தகரையில் நடந்த இச்சம்பவம் மூலம், அங்கு வெடிகுண்டுகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய, கூடங்குளம் அணு உலைக்கு, 2 கி.மீ., தொலைவிலேயே வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதும், அவை வெடித்துச் சிதறியிருப்பதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை காலமாக, இதை எப்படி போலீசார் கட்டுப்படுத்த தவறினர் என்பதும், இதனால், அணு உலை பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதும், அந்தப் பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

நன்றி ;- தி இந்து ,  28 - 11 - 2013

No comments:

Post a Comment