Sunday, April 6, 2014

வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் உ.வாசுகி - பத்ரி சேஷாத்ரி நேர்முகம்

இன்று மதியம், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உ.வாசுகியைச் சந்தித்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். இவர் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உமாநாத் - பாப்பா உமாநாத் ஆகியோரின் மகள். உமாநாத், நான் நாகப்பட்டினத்தில் வசித்தபோது நாகை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் எழுதியுள்ள சிறு பிரசுரங்கள் சிலவற்றை எனக்குத் தந்தார்.


ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தேர்தல் பிரசாரங்களில் கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஓர் உறுப்பினரால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாக்குறுதி அளிப்பார்கள். உண்மையில், மக்களின் பெரும்பாலான தேவைகளை மாநகராட்சி (அல்லது அந்தந்த உள்ளாட்சி) மற்றும் மாநில அரசுதான் பூர்த்தி செய்யவேண்டியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொந்தத் தொகுதி நிதியைக் கொண்டு ஒருசில விஷயங்களைச் செய்யலாம். அவ்வளவுதான்.

வங்கி ஊழியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த வாசுகி, விருப்ப ஓய்வு பெற்றபின் தற்போது முழுநேரக் கட்சிப் பணியாளராக உள்ளார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். பெண்ணுரிமை, சிறுவர்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். தன் அனுபவங்களை ‘பெண் - வன்முறையற்ற வாழ்வை நோக்கி...: ஒரு களப்பணியாளரின் அனுபவங்களிலிருந்து’ என்ற சிறு நூலாக எழுதியுள்ளார் (பாரதி புத்தகாலயம்).

வட சென்னை தேர்தல் நிலவரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். தொழிற்சங்கங்கள் அப்பகுதியில் எம்மாதிரியான பங்காற்றியுள்ளன என்பது குறித்தும் அப்பகுதியின் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களின் பணி, மாநகராட்சி வார்ட் உறுப்பினர்களின் பணி ஆகியவை குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். இந்த நல்லுணர்வு வாக்குகளாக மாறவேண்டும்.

வாசுகி போன்றவர்கள் தேர்தலில் ஆதரிக்கப்படவேண்டும். இடதுசாரிப் பொருளாதாரக் கருத்துகள் எனக்கு ஏற்புடையன அல்ல என்றாலும் பொதுவாகவே இடதுசாரி இயக்கங்களின் அர்ப்பணிப்பு உணர்வு, தன்னலம் கருதா உழைப்பு, அப்பழுக்கற்ற வாழ்க்கை முறை ஆகியவைமீது எனக்குப் பெருத்த மரியாதை உண்டு. வட சென்னைவாசிகள் வாசுகிக்கு வாக்களித்து ஆதரவு அளிக்கவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment