Thursday, December 5, 2013

இணையத்தின் மூலம் ரூ. 45 கோடி மோசடி செய்த ஆசிரியர் அக்பர் அலி கைது


இணையத்தின் மூலம் ரூ. 45 கோடி மோசடி செய்ததாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஆசிரியர் திருவாரூரில் செவ்வாய்க்கிழமை பிடிபட்டார்.

நாகை மாவட்டம், ஏனங்குடி கேதாரிமங்கலம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த தாவுத்கான் மகன் அக்பர் அலி (34). இவர் ஏனங்குடியிலுள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே, தான் ஒரு பெரிய நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் பங்குதாரராக சேர்ந்தால் செலுத்தும் பணத்துக்கு இரட்டிப்புத் தொகை கொடுக்கப்படும் என்று இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டார்.

இதனை நம்பி ஏனங்குடி, கேதாரிமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புறப்பகுதியைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.45 கோடி வரை பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன்பு அக்பர் அலி தலைமறைவாகி விட்டார்.

பணம் செலுத்தியவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து, நாகப்பட்டினம் மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து அக்பர் அலியை தேடி வந்தனர்.

இந்நிலையில், திருவாரூர் நகரப் போலீஸார் வாழவாய்க்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்த போது, காரில் வந்த அக்பர் அலி பிடிபட்டார். பின்னர் அவர் நாகை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் அக்பர் அலிஒப்படைக்கப்பட்டார்.                                                                                           

நன்றி ;- தினமணி                                                                                       

                                                                                      


                                  

Wednesday, December 4, 2013

தற்கொலையை இணையத்தில் பரப்பிய வாலிபர் , காப்பாற்றப்பட்டார் !



கனடாவில் வாலிபர் ஒருவர் தனது தற்கொலைக்  காட்சியை இணையதளத்தில் ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வட அமெரிக்காவில் உள்ள கனடாவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (20). கல்லூரி மாணவரான இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.

மேலும் அதனை ஒரு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

அதன்படி தொடக்கத்தில் சில மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் குடித்தார். பின்னர் ஓட்கா மதுவைக் குடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது அறையில் தீ வைத்து கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்.

அக்காட்சியைக் குரூர புத்தி கொண்ட 200 பேர் நேரில் பார்த்து ரசித்தனர். மேலும் அவர் தற்கொலை முயற்சியை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் மனிதாபிமானம் உள்ள சிலர் பொலிசிற்கு தகவல் அளித்ததின் பேரில் அவர் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

http://www.newsonews.com

காஷ்மீருக்காக இந்தியாவுடன் போர்: நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத், டிச.4-

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்நேரமும் போர்வரும் வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியிருக்கிறார். “இந்தியாவிலுள்ள காஷ்மீர் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே எனது கனவு. அது எனது வாழ்நாளிலேயே நடக்கும் என நினைக்கிறேன்.

அணு ஆயுதங்களில் வல்லவர்களான இரு நாடுகளுக்கிடையே எந்நேரமும் போர் வரும் வாய்ப்புள்ளது” என்று நவாஸ் ஷெரீப் செய்தியாளரிடம் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இச்செய்தி இடம்பெறவில்லை.

அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஷ்மீர் விவகாரத்தில் மக்களின் விருப்பத்திற்கேற்பவும், ஐ.நா சபை தீர்மானத்தின் அடிப்படையிலும் அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாகவும், அணு ஆயத போட்டியை இந்தியாவே முதலில் தொடங்கியதாகவும் அதனாலேயே பாகிஸ்தானும் ஆயுதப்போட்டியில் ஈடுபட்டதாகவும், தங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் ஆயுதப் போட்டிக்காக செலவழித்த தொகையை பொதுத் துறை முன்னேற்றத்திற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் செலவழித்திருக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலைமை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதில் மனநிறைவு கொள்வதாகவும் அவர் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.                                                                                                               

மாலை மலர் ;- 04 - 12 - 2013

கேரள ரிசார்ட்டில் ஐ.டி. பெண் ஊழியர் கற்பழிப்பு: வெளி மாநில வாலிபர்கள் 2 பேர் கைது




திருவனந்தபுரம், டிச. 4–

குமரி மாவட்ட எல்லையையொட்டி உள்ள கேரள பகுதியில் பூவாறு என்ற இடத்தில் கடலும், காயலும் கலக்கிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் இங்கு கேரள சுற்றுலாத்துறை பயணிகளை கவர உல்லாச படகு சவாரி, ஆயுர்வேத ஆயில் மசாஜ் போன்றவற்றை ஏற்படுத்தியது.

இது வெளிமாநில சுற்றுலா பயணிகளை கவர்ந்ததால் ஏராளமானோர் இங்கு வரத் தொடங்கினர். இதையடுத்து இந்த பகுதியில் ரிசார்ட்டுக்கள், உல்லாச விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் வந்தன. கடந்த வாரம் இங்குள்ள ஒரு ரிசார்ட்டுக்கு பெங்களூரில் இருந்து தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் சுற்றுலா வந்தனர்.

இவர்களில் 41 வயது பெண் ஒருவர் ரிசார்ட்டில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார். அவரை இரவு நேரத்தில் மர்மநபர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுபற்றி அந்த பெண் பூவாறு போலீசில் புகார் செய்தார்.

சுற்றுலா வந்த பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கேரள மாநில மகளிர் கமிஷன் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான ரோசக்குட்டி தலைமையிலான உறுப்பினர்கள் சம்பவம் நடந்த ரிசார்ட்டிற்கு நேரில் சென்று விசாரித்தனர்.

பின்னர் அவர்கள் கூறும் போது, இங்குள்ள ரிசார்ட்டில் தங்குபவர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், இதை மாநில அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறினர்.

இதற்கிடையே பெண் ஊழியர் கற்பழிப்பு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், பெண் கற்பழிக்கப்பட்ட ரிசார்ட்டில் பணிபுரியும் 2 அசாம் மாநில வாலிபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

உடனே போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் இருவரும் அந்த பெண்ணை கற்பழித்தது தெரிய வந்தது. இதையடுத்து அசாமை சேர்ந்த லாகின்நாத் (வயது 20), பெர்ஸ்சோனாபாம் (22) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:–

ரிசார்ட்டில் பணிபுரிந்து வந்தபோது, அங்கு பெங்களூர் பெண் ஊழியர் தனியாக தங்கியிருப்பதை அறிந்தோம். அவரை இரவில் தனியாக சந்திக்க விரும்பினோம். இதற்காக அந்த பெண் தனது தோழிகளுடன் வெளியே செல்லும் முன்பு அறைக்குள் நுழைந்து அங்குள்ள ஜன்னல் கதவின் தாழ்பாளை திறந்து வைத்தோம். இரவில் அவர் தூங்க வந்தபோது, ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்தோம்.

அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, அவர் சத்தம் போட்டார். நாங்கள் அவரது வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அவர்கள் இதுபோல வேறு பெண்களிடம் கைவரிசை காட்டினார்களா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மாலைமலர் 04-12-2013

பெங்களூரூ :- ஏ டி எம் மையத்தில் பெண் அதிகாரியை வெட்டியவன் அடையாளம் தெரிந்தது



பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் அதிகாரியை மர்ம ஆசாமி அரிவாளால் வெட்டி பணம், செல்போன், கிரெடிட் கார்டுகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த மர்ம ஆசாமியை கர்நாடக போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த நபர் ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த நாராயணன் ரெட்டி என்பது தெரிய வந்தது. தலைமறைவாகி இருக்கும் அவனை போலீசார் தேடி வருகிறார்கள்

மாலைமலர் - 04- 12 -2013

Tuesday, December 3, 2013

பீகாரில் மாவோயிஸ்ட் கண்ணிவெடி தாக்குதல் : 6 போலீசார் பலி



 பீகாரின் அவுரங்கபாத் மாவட்டத்தில், ரோந்துப் பணி மேற்கொண்டிருந்த 6 போலீசார், மாவோயிஸ்ட்களின் கண்ணி வெடித் தாக்குதலில் பலியாகியுள்ளதாகவும், இறந்தவர்களில் தண்ட்வா காவல் நிலைய அதிகாரி அஜய் குமாரும் ஒருவர் என்றும் காவல்துறை ஆய்வாளர் சுஷில் கோப்டே தெரிவித்துள்ளார்.

நபிநகர் பகுதியிலிருந்து, தண்ட்வா காவல் நிலையத்திற்கு 6 போலீசாரும் திரும்புகையில், உத்ரி கோல் நகர் என்ற இடத்தின் அருகே குண்டு வெடித்தது. இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம் என கோப்டே தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான அவுரங்கபாத், பாட்னாவிலிருந்து 200கிமீ தொலைவில், ஜார்கண்ட் மாநிலத்தின், பலமு மாவட்ட எல்லையை ஒட்டியுள்ளது                                                                                     

தி இந்து - 04 - 12 - 2013

Sunday, December 1, 2013

ஓடும் ரயிலில் ௩ ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை

ஓடும் ரயிலில் 3 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை



பிகாரில் ஓடும் ரயிலில் 3 ராணுவ வீரர்களை மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனர். மேலும் அவர்களிடம் இருந்த 5 துப்பாக்கிகளை பறித்துச் சென்றனர்.

பிகார் மாநிலம் ஆஷிக்பூர்-ஜமால்பூர் இடையே சாகேப்கஞ்ச்-பாட்னா இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் சனிக்கிழமை ஜமால்பூரில் இருந்து புறப்பட்டது. அதில் ஏராளமான பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர்.

இந்நிலையில், அந்த ரயில் பிகார் மாநிலம் ஆஷிக்பூர்-ஜமால்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு கும்பலாக வந்த மாவோயிஸ்டுகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ராணுவ வீரர்களான அசோக்குமார், போலா தாக்குர், உதய் சிங் ஆகிய 3 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். முகமது இம்தியாஸ், வினய்குமார் ஆகிய இருவர் காயமடைந்தனர்.

பின்னர் அவர்கள் வைத்திருந்த 5 துப்பாக்கிகளை மாவோயிஸ்டுகள் பறித்துச் சென்றனர்.

இது பற்றி ஜமால்பூர் ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் அமிதாப் குமார் தாஸ் கூறுகையில், ""மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்குள்ளான ராணுவ போலீஸார் பாகல்பூரில் உள்ள 12-வது யூனிட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ரயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது'' என்றார்.                                                       

தினமணி ,  01-12 - 2013