Wednesday, November 25, 2015

7 முறை தேர்தலில் வெற்றி பெற்றவர்: காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் காலமானார்

பொன்னம்மாள்


காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.பொன் னம்மாள் மதுரை மருத்துவ மனையில் நேற்று காலமானார். இவர், 7 முறை தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினராக பதவி வகித்தவர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அழகன் பட்டியைச் சேர்ந்தவர் ஏ.எஸ்.பொன்னம்மாள் (88). இவர் 1957-ம் ஆண்டு முதல்முறையாக காங்கிரஸ் சார்பில் நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 1962-ல் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1967, 1971-ம் ஆண்டுகளில் நிலக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திமுகவிடம் தோல்வியடைந்தார். 1980-ல் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று பழ.நெடுமாறன் தலைமையிலான காந்தி காமராஜ் கட்சி சார்பில் நிலக்கோட்டையில் ‘மீன்’ சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

1984-ல் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்து பழநியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1989, 1991-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பிலும், 1996-ல் தமாகா சார்பிலும் நிலக்கோட்டையில் வெற்றி பெற்றார். நிலக்கோட்டை தொகுதியில் 5 முறையும், பழநி, சோழவந்தான் தொகுதிகளில் தலா ஒரு முறையும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1996-ல் மூத்த உறுப்பினர் என்ற முறையில் சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக இருந்து புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொன்னம்மாள் கடந்த 3 வாரங்க ளாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பொன்னம்மாள், நேற்று மாலை இறந்தார். சொந்த ஊரான அழகன்பட்டியில் பொதுமக்கள், கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று நடக்கின்றன. இவரது ஒரே மகள் வசந்தி மீனா ஏற்கெனவே இறந்துவிட்டார்.

Keywords: 7 முறை, தேர்தலில் வெற்றி பெற்றவர், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள், பொன்னம்மாள் காலமானார். 

தி இந்து

Tuesday, November 24, 2015

யூடியூப் பகிர்வு: பிள்ளைகளிடம் பகிர வேண்டிய 'பகிரங்கங்கள்'! - காணொலி !

விடலைப் பையன்கள் செய்கின்ற பல காரியங்கள் விளையாட்டுத்தனமாகவே பார்க்கப்படுகின்றன. 'சின்னப் பசங்க அப்படித்தான் இருப்பாங்க.. போகப்போக சரியாயிடும்!'என்பதுதான் அவர்களைப் பற்றி உறவுகள், நண்பர்கள், குடும்பங்களுக்கிடையே சொல்லப்படுகிற கருத்தாக இருக்கிறது.

கண நேர மகிழ்ச்சிக்காகவும், தற்பெருமைக்காகவும் ஒரு பெண்ணைக் கிண்டலடிப்பதில் தொடங்குவது, மெல்ல மெல்ல அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இதனால் இளைஞர்களுக்கும், ஆண்களுக்கும் தாங்கள் என்ன செய்கிறோம்? அதனால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதே தெரிவதில்லை. பொதுவாகவே வீடுகளில், பாலியல் துன்புறுத்தல் குறித்த பேச்சுகள் அரிதாகத்தான் நிகழ்கின்றன. இந்தச் சுவரைத் தகர்க்க ஒரு முயற்சியை எடுத்திருக்கிறது பிரேக்த்ரூ எனும் மனித உரிமைகள் அமைப்பு.

தனக்கு நேரும் அனுபவங்கள் குறித்து, ஒவ்வொரு தாயும் தனது மகனிடம் சொல்ல வேண்டும் என்கிறது பிரேக்த்ரூ. ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டில் சொல்லத் தயங்கும் ஓர் உண்மைச் சம்பவக் காணொலி இதோ.

திருப்புமுனை என்ற பொருள் கொண்ட பிரேக்த்ரூ அமைப்பு, பெண்களும் சிறுமிகளும் சந்திக்கின்ற வன்முறைகளுக்கெதிராக தொடர்ந்து இயங்கி வருகிறது. ஒரு பெண், தன்னுடைய தினசரி வாழ்க்கையில் வெவ்வேறு வடிவங்களில் பாலியல் துன்புறுத்தல்களைச் சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறாள். சுமார் 90 சதவீத பெண்கள் முக்கியமாகப் பொது இடங்களில் இந்தத் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்கிறது இதன் ஆய்வு.


நன்றி :- தி இந்து

மழை வெள்ளம் வந்தால் நட்சத்திர விடுதிக்குச் சென்றுவிடுவேன்! -வெள்ள நிவாரண ரகசியம் சொல்கிறார் முன்னாள் மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சியில் ஆணையராக இருந்தவர் சுர்ஜித் குமார் சவுதரி. இப்போது மத்திய அரசின் ரசாயனங்கள், உரத் துறையில் செயலர். சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார்.

சென்னை மழையைப் பார்த்தவருக்கு ‘அந்த நாள் ஞாபகம்’ வந்துவிட்டதுபோல. தன் ‘அனுபவங்க’ளை நினைவுகூர்கிறார்.

“வானம் பொத்துக்கொண்டு மழை கொட்டும்போது நான் தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் உள்ள ஜிம்முக்கு வந்துவிடுவேன்.

அங்கிருந்து அதிகாரிகளுக்கு நிவாரணப் பணிகளை எங்கெங்கு செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவேன். எல்லோரையும் வீதிக்கு வந்து ஆங்காங்கே இருக்குமாறு செய்துவிடுவேன். பார்க்கிறவர்களுக்கு ஏதோ சென்னை மாநகராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்த எல்லோருமே மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதைப் போலத் தோன்றும்.

உண்மை என்னவென்றால், எப்பேர்ப்பட்ட வெள்ளமாக இருந்தாலும் நாம் நடவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் இரண்டு நாட்களில் வடிந்துவிடும்!”

இப்படித்தான் சவுதரி பேசியிருக்கிறார். ஆங்கில செய்தித்தாள் ஒன்று அவருடைய உரையை விரிவாக வெளியிட்டிருக்கிறது.

சவுதரி போட்ட இன்னொரு குண்டு

நரேந்திர மோடி அரசின் ரசாயனங்கள், உரத் துறையில் செயலராக சவுதரி இப்போது இருக்கிறார் அல்லவா, அந்தத் துறை சம்பந்தமாக அன்னார் உதிர்த்த வார்த்தைகள் இவை.
“மத்திய அரசில் ரசாயனங்கள், உரம் ஆகிய துறையின் செயலாளராகப் பதவி வகித்தாலும், ரசாயனங்கள் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது!”

நாடும் மக்களும் நன்றாகவே விளங்கிவிடுவார்கள்!

- கண்ணில் பட்ட செய்தி


தி இந்து

வர்த்தகர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து வசந்தகுமார் நீக்கம் !


வர்த்தகர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து எச்.வசந்தகுமார் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக இளங்கோவன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:- காங்கிரஸின் மாநிலத் துணைத் தலைவரான எச்.வசந்தகுமார், வர்த்தகர் பிரிவின் மாநிலத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

 இதனால், வர்த்தகர் காங்கிரஸ் பிரிவின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து வசந்தகுமார் நீக்கப்பட்டு, புதிய தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமிக்கப்படுகிறார். இருப்பினும், கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக வசந்தகுமார் நீடிப்பார் என்றார்.

 கட்சியில் பரபரப்பு: தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அண்மையில் சந்தித்த மூத்தத் தலைவர்கள் ப.சிதம்பரம், குமரி அனந்தன், கே.வீ.தங்கபாலு, எச்.வசந்தகுமார் உள்ளிட்டோர், தன்னிச்சையான முடிவுகளை இளங்கோவன் எடுப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், எச். வசந்தகுமாரிடமிருந்து பதவி பறிக்கப்பட்டுள்ளது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி

Sunday, November 22, 2015

பெண் காவல் அதிகாரியின் மடியில் தலைமைக் காவல் அதிகாரி அமர்ந்த புகைப்படம்: சமூக ஊடங்களில் பரவல்


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜவுரி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பெண் காவல் அதிகாரியின் மடியில் தலைமைக் காவல் ஒருவர் அமர்ந்திருந்த புகைப்படங்கள் சமூக ஊடங்களில் பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜவுரி மாவட்டத்தில் உள்ள  புதால் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு பெண் அதிகாரியின் மடியில் தலைமைக் காவலர் ஜாகிர் உசேன் அமர்ந்திருந்தது போன்ற இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடங்களில் பரவின.  இதையடுத்து அவர்கள் இருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து  டி.ஐ.ஜி. ஏ.கே.அத்ரி கூறும் போது, இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது என்றும், இதுதொடர்பாக தங்கள் கவனத்திற்கு தெரிய வந்ததும், தலைமைக் காவலர் ஜாகிர் உசேனை பணியிடை நீக்கம் செய்துவிட்டதாகவும், தெரிவித்துள்ளார்.

 அதேபோல் பெண் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற வெட்கத்துக்குரிய செயலை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்

தினமணி

பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது: வீட்டில் தூங்கி கொண்டிருந்த வாலிபர் சாவு -



சென்னை பட்டாளத்தில் பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவருடைய தாயார் படுகாயமடைந்தார்.

பட்டாளத்தில் துயரம்

சென்னை பட்டாளம் பரசுராம் தெருவை சேர்ந்தவர் ராதாபாய் (வயது 45). மகன் ராஜீ(23). சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். 

நேற்று முன்தினம் வீட்டில் ராதாபாயும், மகன் ராஜீயும் நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து ராதாபாயின் ஓட்டு வீட்டின் மேல் விழுந்தது. பயங்கர சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தினர் அலறியடித்து வெளியே வந்தனர். ராதாபாயின் வீட்டின் மீது சுவர் இடிந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், பெரம்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ராதாபாயையும், ராஜீயையும் மீட்கும் முயற்சியில் இறங்கினர். 

ராஜீ பிணமாக மீட்பு

ஆனால், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ராஜீ மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய தாயார் ராதாபாயை பலத்த காயத்துடன் தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ராஜீவின் பிணமும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இடிபாடுகளால் வெளி வர முடியாமல் சிக்கி தவித்த அதே வரிசையில் வீடுகளில் வசித்து வரும் ஜெகநாதன், கோவிந்தம்மாள், சரஸ்வதி, கவிதா, மேனகா, உமாபதி, ரகு, பாக்கியராஜ், சீனிவாசன், ருக்மணி, பாலாஜி ஆகிய 11 பேரையும் தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

போலீசார் விசாரணை

சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:-

இடிந்து விழுந்த வீடு மீது அப்பகுதியில் வசிக்கும் சகோதரர்-சகோதரிகளுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது. இதுதொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் பாதி இடிக்கப்பட்ட நிலையில் அந்த வீடு இருந்துள்ளது. 

மழையால் அந்த வீடு மிகவும் சேதமடைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில் கட்டிடத்தின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளர்கள் சிலர் கூறும்போது, ‘ ராதாபாயும்-அவருடைய கணவரும் திருமணமான சிறிது காலத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். 

ராதாபாய் வீட்டு வேலை செய்து ராஜீவை படிக்க வைத்தார். ராஜீவுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிகளையும் மேற்கொண்டார். தனது வீட்டை விற்று விட வேண்டும் என்று ராதாபாய் எண்ணினார். ஆனால் அதற்குள் இந்த விபரீத சம்பவம் நடந்து விட்டது.’ என்றனர்.
நன்றி :- தினத்தந்தி