Wednesday, June 25, 2014
அடையாறு ஆற்றில் குதித்து தொழிலதிபர் தற்கொலை
சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அடையாறு பாலம் அருகே புதன்கிழமை காலை ஒரு
கார் நின்றது. அந்த காரில் வந்திறங்கிய 82 வயது மதிக்கதக்க முதியவர்
அடையாறு பாலற்றின் மீது நடந்து வந்தார். அப்போது திடீரென பாலத்தில் இருந்து
அடையாறு ஆற்றுக்குள் அவர் குதித்தார்.இதைப் பார்த்த வாகன ஓட்டிகளும்,
பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் தீயணைப்பு
நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள்,
சம்பவ இடத்துக்கு விரைந்து அந்த முதியவரை தேடினர்.
சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த முதியவர், அங்கிருந்து சடலமாக
மீட்கப்பட்டார். மேலும் இது குறித்து அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிவு
செய்து, விசாரணை செய்தனர்.விசாரணையில் அந்த முதியவர் கந்தன்சாவடியைச்
சேர்ந்த திருநாவுக்கரசு (82) என்பது தெரியவந்தது. அங்கு எலக்ட்ரானிக்ஸ்
பொருள்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வரும் அவர், குடும்ப பிரச்னையின்
காரணமாக அடையாறு ஆற்றில் இருந்து குதித்து தற்கொலை செய்திருப்பதும்
விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sunday, June 22, 2014
திருக்கோஷ்டியூர் கோயிலில் கலசங்கள் திருட்டு
திருக்கோஷ்டியூரில் கலசங்கள்
திருடு போன முத்தையா கோயில்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோஷ்டியூர் முத்தையா கோயிலில் கோபுர கலசங்கள் திருடப்பட்டுள்ளன.
திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள முத்தையா கோயில் அர்ச்சகர் சனிக்கிழமை
காலை வழக்கம்போல கோயிலைத் திறந்துள்ளார். அப்போது கோயிலில் 13 கோபுர
கலசங்கள் திருடுபோயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக கோயில் அர்ச்சகர் திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்துக்கும்,
திருப்பத்தூர் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார்.
இதையடுத்து, அறநிலையத் துறை திருப்பத்தூர் பகுதி ஆய்வாளர் மாலா கோயிலைப்
பார்வையிட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், போலீஸார் கோயிலின் சுற்றுப்புறப் பகுதிகளைச்
சோதனையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை
நடைபெற்றது. ஓரடி உயரமுள்ள 3 கலசங்களும், அரையடி உயரமுள்ள 10 கலசங்களும்
திருடு போய் உள்ளது தெரியவந்துள்ளது.
இக் கலச திருட்டு தொடர்பாக திருக்கோஷ்டியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி
Sunday, June 8, 2014
மீண்டும் மீண்டும் காதல்
தெலுங்கின் பிரதான கவிஞராக அறியப்படும் முத்துப்பழனி தஞ்சாவூரை ஆண்ட பிரதாபசிங்க மன்னரின் அரண்மனையில் தேவதாசியாக இருந்தவர். ‘ராதிகா சாந்தவனம்’ என்கிற காவியத்தின் மூலம் தெலுங்கு இலக்கியத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியவர் முத்துப்பழனி. இலாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளும் கிருஷ்ணன் முதல் மனைவியான ராதாவை சமாதானப் படுத்துவது போல அமைந்த பாடல்களைக் கொண்டதால் ‘ராதிகா சாந்தவனம்’ என்று அழைக்கப்பட்டது இந்நூல்.
பாலியல் உறவில் முதல் அடியை ஒரு பெண் எடுப்பது போல அமைந்த ஒரு பாடல் தெலுங்கு இலக்கியத்தில் கிட்டத்தட்ட ஒரு புரட்சியை உண்டு பண்ணியது. அதுவரை, அது போன்ற ஒரு பாடலை ஆண் கவிஞர் களே எழுதியதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அவளை முத்தமிட வேண்டாம் என்று சொன்னால்
எனது கன்னங்களை வருடியபடி
அவளது உதடுகளை எனது உதடுகள் மீது
அழுத்தமாகப் பதிக்கிறாள்.
என்னைத் தொட வேண்டாம் என்றால்
அவளது உறுதியான மார்பகத்தை என்மீது பதியவைத்து
என்னை அணைக்கிறாள்.
என்னை நெருங்க வேண்டாம்
அது நாகரிகமில்லை என்றால்
என்னை அவதூறு செய்கிறாள்.
எனது படுக்கையில் பெண்ணிற்கு
இடமில்லை என்கிற சத்தியத்தைச் சொன்னால்
அதன் மீதேறி தனது காம விளையாட்டை தொடங்குகிறாள்.
தனது உதடுகளிலிருந்து
நான் அருந்தவும்
கொஞ்சவும் பேசவும் செய்கிறாள்.
மீண்டும் மீண்டும் காதல் செய்கிறாள்.
அவளிடமிருந்து நான் எப்படி விலகியிருப்பது?
போன்ற பல கவிதைகளைக் கொண்டது ‘ராதிகா சாந்தவனம்’. 1887-ல் முதன் முறையாகப் பதிப்பிக்கப்பட்டாலும் ராதிகா சாந்தவனம் முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. பின்னர், தேவதாசி மரபில் வந்த நாகரத்தினம்மா அந்தக் கவிதைகளை முழுமையாகக் கண்டுபிடித்து 1910-ல் பதிப்பித்தார். அப்போது கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது அந்நூல். ஆபாசமான பிரதி எனவும் அதை எழுதியிருப்பவர் ‘தரம் கெட்டவர்' எனவும் எதிர்ப்பாளர்கள் சொன்னார்கள். இதற்கு எதிராகக் கடுமையாகப் போராடினார் நாகரத்தினம்மா. ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லை. 1911-ல் தடை செய்யப்பட்டது ராதிகா சாந்தவனம். சுதந்திரத்துக்கு பின்னரே அந்தத் தடை விலக்கப்பட்டது.
ஒரு பெண்ணின் முதல் பாலியல் அனுபவம், இன்னொரு பெண் மீது கணவன் விருப்பம் கொள்ளும்போது எழும் பொறாமையுணர்வு என்று பெண்ணின் அகவுணர்வைப் பரந்துபட்ட வெளியில் துல்லியமாக முன் வைத்த கவிதைகள் முத்துப்பழனியுடையவை. சமஸ்கிருதத்திலும் புலமை பெற்ற முத்துப்பழனி தன்னைப் பற்றிய சுயவிவரக் கவிதையொன்றில் ‘ஈடு இணையற்றவர்' என்று தன்னை சொல்லிக்கொள்கிறார்.
முழுநிலவு போல ஒளிரும் முகம்
அந்த முகத்திற்கு இணையான விவாதத்திறன்
கனிவு கொண்ட கண்கள்
அதே போன்ற பேச்சு.
பார்வையையொத்த பரந்த மனப்பான்மை
இதெல்லாம்தான் பழனியை அலங்கரிக்கும் நகைகள்
என்று ஒரு பாடலில் தன்னைப் பற்றிச் சொல்கிறார் முத்துப்பழனி. அதே போல, தன்னைப் பற்றிப் பேசும்போது தனது பாட்டி, அம்மா, அத்தை போன்ற பெண்களின் திறமைகளைச் சொல்லி அதன் மூலம் தன்னை நிறுவிக்கொள்ளும் போது முத்துப்பழனியின் கவிதைகளில் ஒரு பெண்ணிய சலனம் தெரிகிறது. நாகரத்தினம்மா போன்றவர்களின் முயற்சி இல்லாமலிருந்தால் இன்று காணாமலே போயிருக்கும், பெண்ணியலாளர்களால் முக்கியமானவை என்று கொண்டாடப்படும் முத்துப்பழனியின் கவிதைகள்.
ராதிகா சாந்தவனம், காவியம், தெலுங்கு இலக்கியம், மொழிபெயர்ப்பு, கவிதை
தி இந்து
Saturday, June 7, 2014
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த சுங்கத்துறை அதிகாரிக்கு சிறைத் தண்டனை
சென்னையில் சுங்கத்துறை கண்காணிப்பாளராக இருந்த புகழேந்தி (50) வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2004 - 2009ஆம் ஆண்டு வரை பணியில் இருந்த புகழேந்தி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.89.72 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்தது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரமராஜ் உத்தரவிட்டார்.
தினமணி
Tuesday, April 22, 2014
நடத்தையை உளவுபார்க்க மனைவியின் வயிற்றுக்குள் கண்காணிப்பு கருவி பொருத்திய கணவன்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள லாகூர் மவட்டத்தில் உள்ள ஹர்பான்ஸ்புரா பகுதியை சேர்ந்தவர் இளம் பெண் லாகூர் மாவட்ட .நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது:-
எனக்கும் முகம்மது பயாஸ் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஒரு நாள் இரவு மாஜிஸ்திரேட் அக்ரம் ஆசாத் என்பவருடன் குடி போதையில் வந்த என் கணவர் என்னை அந்த மாஜிஸ்திரேட்டுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தினார்.
இதற்கு நான் மறுத்ததால், என் கணவரின் ஒத்துழைப்புடன் மாஜிஸ்திரேட் என்னை பலவந்தமாக கற்பழித்தார். இச்சம்பவத்துக்குப் பிறகு பல ஆண்களை வீட்டுக்கு அழைத்து வந்த அவர், தன் கண் முன்னால் அவர்களால் நான் கற்பழிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதில் இன்பம் அடைந்தார்.
இப்படி, பலருக்கு என்னை அவர் விருந்தாக்கியதால், வெறுத்துப் போன நான் அவரை விட்டுப் பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். ஒரு நாள் சமாதானம் பேசுவதாக சிலருடன் வந்த அவர் என் முகத்தில் ஒருவித நச்சுப் புகையை பாய்ச்சினார். நான் மயங்கி விட்டேன்
கண் விழித்துப் பார்த்தபோது, ஒரு தனியார் மருத்துவமனை கட்டிலில் கிடந்தேன். அடி வயிற்றில் தையல்கள் போடப்பட்டிருந்தது. கடுமையான வலியும், வேதனையும் ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு டாக்டரின் உதவியுடன் ‘எக்ஸ்-ரே’ எடுத்துப் பார்த்ததில் வாகனங்கள் எங்கிருக்கிறது? என்பதை கண்டுபிடிக்கும் ‘டிராக்கர்’ எனப்படும் கண்காணிப்பு கருவியை என் வயிற்றுக்குள் பொருத்தியுள்ளது தெரிய வந்தது.
நான் எங்கே இருக்கிறேன்? என்ன செய்கிறேன்? என்று கண்காணிப்பதற்காக இத்தகைய கீழ்த்தரமான காரியத்தில் ஈடுபட்ட முகம்மது பயாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மேலும் கருவியை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மனுவை விசாரித்த லாகூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
தினத்தந்தி
Sunday, April 6, 2014
வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் உ.வாசுகி - பத்ரி சேஷாத்ரி நேர்முகம்
இன்று மதியம், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உ.வாசுகியைச் சந்தித்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். இவர் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உமாநாத் - பாப்பா உமாநாத் ஆகியோரின் மகள். உமாநாத், நான் நாகப்பட்டினத்தில் வசித்தபோது நாகை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் எழுதியுள்ள சிறு பிரசுரங்கள் சிலவற்றை எனக்குத் தந்தார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தேர்தல் பிரசாரங்களில் கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஓர் உறுப்பினரால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாக்குறுதி அளிப்பார்கள். உண்மையில், மக்களின் பெரும்பாலான தேவைகளை மாநகராட்சி (அல்லது அந்தந்த உள்ளாட்சி) மற்றும் மாநில அரசுதான் பூர்த்தி செய்யவேண்டியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொந்தத் தொகுதி நிதியைக் கொண்டு ஒருசில விஷயங்களைச் செய்யலாம். அவ்வளவுதான்.
வங்கி ஊழியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த வாசுகி, விருப்ப ஓய்வு பெற்றபின் தற்போது முழுநேரக் கட்சிப் பணியாளராக உள்ளார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். பெண்ணுரிமை, சிறுவர்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். தன் அனுபவங்களை ‘பெண் - வன்முறையற்ற வாழ்வை நோக்கி...: ஒரு களப்பணியாளரின் அனுபவங்களிலிருந்து’ என்ற சிறு நூலாக எழுதியுள்ளார் (பாரதி புத்தகாலயம்).
வட சென்னை தேர்தல் நிலவரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். தொழிற்சங்கங்கள் அப்பகுதியில் எம்மாதிரியான பங்காற்றியுள்ளன என்பது குறித்தும் அப்பகுதியின் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களின் பணி, மாநகராட்சி வார்ட் உறுப்பினர்களின் பணி ஆகியவை குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். இந்த நல்லுணர்வு வாக்குகளாக மாறவேண்டும்.
வாசுகி போன்றவர்கள் தேர்தலில் ஆதரிக்கப்படவேண்டும். இடதுசாரிப் பொருளாதாரக் கருத்துகள் எனக்கு ஏற்புடையன அல்ல என்றாலும் பொதுவாகவே இடதுசாரி இயக்கங்களின் அர்ப்பணிப்பு உணர்வு, தன்னலம் கருதா உழைப்பு, அப்பழுக்கற்ற வாழ்க்கை முறை ஆகியவைமீது எனக்குப் பெருத்த மரியாதை உண்டு. வட சென்னைவாசிகள் வாசுகிக்கு வாக்களித்து ஆதரவு அளிக்கவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
|
Subscribe to:
Posts (Atom)





