Friday, February 7, 2014

அதிகாரம் மிக்க 50 பெண்கள்: நூயி, சாந்தா கோச்சாருக்கு இடம்


தொழில் உலகில் அதிகாரமிக்க பெண்கள் பட்டியலில் பெப்சிகோ நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி இந்திரா நூயி, ஐசிஐசிஐ நிர்வாக இயக்குநர் சாந்தா கோச்சார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஃபார்ச்சூன் நிறுவனம் தொழில் உலகில் மிகுந்த அதிகாரமிக்க பெண்கள் 50 பேரடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஜெனரல் மோட்டார்ஸ் தலைமைச் செயல் அதிகாரி மேரி பாரா முதலிடத்தில் உள்ளார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இப்பதவிக்கு வந்துள்ள முதல் பெண்மணி என்ற பெருமையும் இவரையே சாரும்.

உயர் பதவிகளுக்கு பெண்களும் வர முடியும் என்ற புதிய தளத்தை ஏற்படுத்தி அதை எட்டிப்பிடித்துள்ள பெண்களில் சர்வதேச அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் பாரா.

6 கண்டங்களில் 396 ஆலைகளில் பணிபுரியும் 2.12 லட்சம் ஊழியர்களுக்கும் தலைவராக இவர் உள்ளார்.

இந்த வரிசையில் பெப்சிகோ நிறுவனத் தலைவர் இந்திரா நூயி, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதே வரிசையில் 18-வது இடத்தில் உள்ளார் சாந்தா கோச்சார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பெண்மணிகள் இவர்களிருவரே.

பெப்சிகோ நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக உள்ள நூயி, அமெரிக்காவுக்கு வெளியே பிற நாடுகளில் பெப்சி விற்பனையை இரு மடங்காக உயர்த்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளது. நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 6,550 கோடி டாலராக (சுமார் ரூ.40.87 லட்சம் கோடி) உள்ளது. இதில் 50 சதவீதத்துக்கும் மேல் வெளிநாடுகளிலிருந்து கிடைப்பவையாகும்.

இந்தியாவில் உள்ள 2-வது பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கிக்கு தலைமையேற்றுள்ளார் சாந்தா கோச்சார். 3,588 கிளைகளுடன் 12,400 கோடி டாலர் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கிறது ஐசிஐசிஐ வங்கி.

இந்தப் பட்டியலில் ஐபிஎம் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கினி ரொமெட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார். பெட்ரோபிராஸ் தலைமைச் செயல் அதிகாரி மரியா தாஸ் கிரா சில்வா பாஸ்டர் நான்காம் இடத்தில் உள்ளார்.

ஃபேஸ்புக் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) ஷெரில் சாண்பெர்க் 11- வது இடத்திலும், யாகூ தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மரிஸா மேயர் 14-வது இடத்திலும், கூகுளின் மூத்த துணைத் தலைவர் சூசன் வொஜிகிகி 20-வது இடத்திலும் உள்ளனர்.

தி இந்து 

கள்ளக்காதல் தகராறில் பெண் போலீஸ் கொலை; கொலையாளி கைது

பெண் போலீசை கழுத்து நெரித்துக் கொலை செய்த கள்ளக்காதலனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள துலுக்கன்குறிச்சியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் சமுத்திரகனி (34). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கீழராஜகுலராமன் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றி வந்தார். ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் தெருவில் லட்சுமியின் அண்ணன் குருபாண்டியன் வசித்து வருகிறார். இவரது மகன் செந்தில்குமார் (35). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

சமுத்திரக்கனிக்கும், அத்தை மகன் செந்தில்குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்யாமலேயே வ.உ.சி. நகரில் வசித்து வந்தனர். நேற்றுமுன்தினம் மாலை இவர்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக, வாக்குவாதம், சண்டை ஏற்பட்டது. அப்போது சமுத்திரகனியின் கழுத்தை நெரித்து, செந்தில்குமார் கொலை செய்துவிட்டு வெளியே சென்றார். 

பின்னர், இரவு 10 மணிக்கு ‘மனைவி உடல்நலம் சரியில்லாமல் மயங்கி கிடக்கிறார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்‘ என ஒரு ஆட்டோ பேசி வ.உ.சி.நகர் வீட்டுக்கு செந்தில்குமார் வந்தார். இருவரும் மாடிக்கு சென்றனர். அப்போது சமுத்திரக்கனி இறந்து கிடந்தது கண்டு ஆட்டோ டிரைவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

காவல்துறையினர் விரைந்து சென்று கொலையான சமுத்திரக்கனியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார். இதில் சமுத்திரக்கனி கீழராஜகுலராமன் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றியது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரை காவல்துறையினர் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியா 

பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான இடம் வேண்டும்

சகல வசதிகளுடன் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான இடம் வேண்டும் அரசுக்கு, பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை,

ஏ.டி.எம்.வசதி உள்பட சகல வசதிகளுடன் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான இடத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு, பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலியல் தொழிலாளர்கள் கருத்தரங்கம்

இந்திரா பெண் முன்மாதிரி கல்வியாளர்கள் நலச்சங்கத்தின் (பாலியல் தொழிலாளர்கள் சங்கம்) கருத்தரங்க கூட்டம் சென்னை எழும்பூர் ‘இக்ஸா’ மையத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சங்கத்தின் தலைவர் பி.பேபி தலைமை தாங்கினார். செயலாளர் கே.கலைவாணி, பொருளாளர் பி.என்.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில் செயலாளர் கே.கலைவாணி பேசியதாவது:–

சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் சங்கத்தை சேர்ந்த 2,312 பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 1,800 பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். பாலியல் தொழிலை சட்ட விரோத தொழில் என்று சொல்வதே தவறு ஆகும். வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து தொழிலுக்கு அழைத்தால் தான் தவறு.

பாதுகாப்பான இடம்

பாலியல் தொழிலாளர்கள் தியாகராய நகர், பாரிமுனை, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் நின்று தொழில் செய்ய முடியவில்லை. போலீசார் ‘கெடுபிடி’ அதிகமாக உள்ளது. இரவுநேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

எனவே பாலியல் தொழில் செய்வதற்காக அத்தியாவசிய வசதிகளான மின்சாரம், குடிநீர், கிளினிக், பெண் காவலர் வசதி, தங்கும் வசதி, கேண்டீன், போன் வசதி, பண பரிமாற்றத்துக்காக வங்கி, மற்றும் ஏ.டி.எம். வசதி, போக்குவரத்து வசதி உள்பட சகல வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான இடத்தை அரசு வழங்க வேண்டும்.

பயிற்சிகள்

பாலியல் தொழில்புரிவதற்கு பாதுகாப்பான இடம் ஒதுக்கப்படுவதன் மூலமாக காவல்துறை பிரச்சினை இருக்காது. மக்களால் இடையூறு இருக்காது. வாடிகையாளர்கள் ஏமாற்ற முடியாது, தரகரால் பிரச்சினை இருக்காது. குரூப் பாலியல் தொழில் இருக்காது.

பாலியல் தொழிலாளர்களுக்காக வழக்கறிஞர் உதவிகள் மையம், சுயதொழில் செய்வதற்கு கைத்தொழில் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி மையத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு கே.கலைவாணி கூறினார்.

ஒன இந்தியா 

Thursday, February 6, 2014

ஆபாச நடனத்தைக் கண்டு களித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள்


உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் வன்முறைச் சம்பவம், சமாஜ்வாதி அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய நிலையில், தற்போது, அக்கட்சியின் தலைவர்கள் ஆபாச நடனத்தை கண்டு களித்த புகைப்படம் வெளியாகி மேலும் அதிருப்தியை அதிகரிக்க வைத்துள்ளது.

அகிலேஷ் யாதவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சித்ரஞ்சன் ஸ்வரூப் மற்றும் உள்ளூர் சமாஜ்வாதி தலைவர்கள், ஒரு பெண்ணின் ஆபாச நடனத்தை கண்டு களிப்பதும், கூட்டத்தில் இருப்பவர்கள் அப்பெண் மீது 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுவதும் புகைப்படங்களாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தினமணி

அமெரிக்கா : பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றம்


காப்பீட்டுப் பணத்துக்கு ஆசைப்பட்டு, ஒருவரைத் திருமணம் செய்து, அவரைக் கொன்று கால்வாயில் வீசிய சுசன்னா பாசோ (59) என்ற பெண்ணுக்கு அமெரிக்காவில் விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

லூயிஸ் முசோ என்ற நபரை, 1998ஆம் ஆண்டு, அவரது காப்பீட்டுத் தொகைக்காகக் கொலை செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவரது மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுசன்னா பாசோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவில் 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 1400பேரில், 14வது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைவல்யாவை மணந்தார் நடிகர் கிருஷ்ணா


இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பியும், தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகரின் மகனுமான நடிகர் கிருஷ்ணாவுக்கு இன்று காலை கோவையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

கற்றது களவு, அலிபாபா, கழுகு ஆகியப் படங்களில் நாயகனாக நடித்தவர் கிருஷ்ணா. தற்போது 'வானவராயன் வல்லவராயன்', 'விழித்திரு', 'இல்ல ஆனாலும் இருக்கு', 'வன்மம்' ஆகியப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கிருஷ்ணாவுக்கும், கோவையை சேர்ந்த ரங்கநாதன் – வாசுகி தம்பதியரின் மகள் கைவல்யாவுக்கும் இருவீட்டார் சார்பில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் திருமணம் இன்று காலை கோவை ஜெனீஸ் கிளப்பில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற உள்ளது. கிருஷ்ணாவின் மனைவி கைவல்யா சாஃப்ட்வேர் இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி