Wednesday, November 25, 2015

7 முறை தேர்தலில் வெற்றி பெற்றவர்: காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் காலமானார்

பொன்னம்மாள்


காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.பொன் னம்மாள் மதுரை மருத்துவ மனையில் நேற்று காலமானார். இவர், 7 முறை தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினராக பதவி வகித்தவர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அழகன் பட்டியைச் சேர்ந்தவர் ஏ.எஸ்.பொன்னம்மாள் (88). இவர் 1957-ம் ஆண்டு முதல்முறையாக காங்கிரஸ் சார்பில் நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 1962-ல் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1967, 1971-ம் ஆண்டுகளில் நிலக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திமுகவிடம் தோல்வியடைந்தார். 1980-ல் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று பழ.நெடுமாறன் தலைமையிலான காந்தி காமராஜ் கட்சி சார்பில் நிலக்கோட்டையில் ‘மீன்’ சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

1984-ல் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்து பழநியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1989, 1991-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பிலும், 1996-ல் தமாகா சார்பிலும் நிலக்கோட்டையில் வெற்றி பெற்றார். நிலக்கோட்டை தொகுதியில் 5 முறையும், பழநி, சோழவந்தான் தொகுதிகளில் தலா ஒரு முறையும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1996-ல் மூத்த உறுப்பினர் என்ற முறையில் சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக இருந்து புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொன்னம்மாள் கடந்த 3 வாரங்க ளாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பொன்னம்மாள், நேற்று மாலை இறந்தார். சொந்த ஊரான அழகன்பட்டியில் பொதுமக்கள், கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று நடக்கின்றன. இவரது ஒரே மகள் வசந்தி மீனா ஏற்கெனவே இறந்துவிட்டார்.

Keywords: 7 முறை, தேர்தலில் வெற்றி பெற்றவர், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள், பொன்னம்மாள் காலமானார். 

தி இந்து

No comments:

Post a Comment